Advertisements

கிரெடிட் கார்ட் அளவில் கம்ப்யூட்டர்

லாஸ்வேகாஸ் நகரில் நடந்த ‘நுகர்வோர் மின்னியல் கண்காட்சியில்’ இன்டெல் நிறுவனம் கிரெடிட் கார்ட் அளவிலான, கம்ப்யூட்டிங் கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதனை, மேலாகப் பறந்து சென்று இயங்கும் ‘ட்ரோன்’, மனிதனின் இடத்தில் வேலை பார்க்கும் ரோபோக்கள், டிஜிட்டல் வழிகாட்டிகள் மற்றும் இது போன்ற டிஜிட்டல் சாதனங்களில் பொருத்தி இயக்கலாம். இதன் மூலம், “அனைத்திலும் இணையம்” என்ற கோட்பாட்டின் முழுமையான செயல்பாடு விரைவில் சாத்தியமாகும்.

Compute Card என அழைக்கப்படும் இந்த ‘மினி கம்ப்யூட்டர்’ 95x 55 x 5 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (கிரெடிட் கார்ட் தடிமன் 0.73 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது). ஒரு கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான அனைத்தும் இந்த கார்டில் அமைக்கப்பட்டிருக்கும். ஏழாவது தலைமுறையைச் சேர்ந்த Intel Kaby Lake processor, மெமரி, நெட்வொர்க் இணைப்பு, ஸ்டோரேஜ் நினைவகம், புளுடூத் ஆகிய வசதிகள் இதில் இருக்கும்.
ஆனால், யு.எஸ்.பி., டிஸ்பிளே மற்றும் பவர் இணைப்புகளுக்கான போர்ட்கள் எல்லாம் இருக்காது. இதனை, இன்னொரு சாதனத்தில், மெமரி கார்ட் செருகிப் பயன்படுத்துவது போல, கம்ப்யூட்டராகப் பயன்படுத்தலாம். புதிய கம்ப்யூட்டர்களுக்குப் பதிலாக, இந்த கார்ட் மேம்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படலாம். இனி, எதிர்காலத்தில், இந்த வகை கம்ப்யூட்டர்களே நடைமுறையில் இயங்க வேண்டும் என இன்டெல் திட்டமிடுகிறது.
இதனை உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஒரே காலத்தில் கொண்டு செல்ல, இன்டெல் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் மத்திய வாக்கில், இது நுகர்வோர் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்டெல் இதனை நேரடியாக விற்பனை செய்திடாது. இதனை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுத்து, கம்ப்யூட்டராக அந்நிறுவனங்கள் விற்பனை செய்திட வேண்டும் என இன்டெல் விரும்புகிறது. கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், இனி கம்ப்யூட்டரைத் தயாரிக்க வேண்டியதிருக்காது. இந்த ‘கம்ப்யூட் கார்டினை’ இணைத்துச் செயல்படுத்தக் கூடிய சாதனங்களை மட்டுமே தயாரிக்க வேண்டியதிருக்கும்.
மேஜைகளில் சி.பி.யு. கேபின், பெரிய மானிட்டர் என இருந்த மேஜை கம்ப்யூட்டரின் இடத்தில், லேப்டாப் அறிமுகமாகி, கம்ப்யூட்டர் பயன்பாட்டினை எளிதாக்கியது. மேஜைக்குப் பதிலாக, மக்கள் தங்கள் முதுகிலும், மார்பு மீதும் லேப்டாப் கம்ப்யூட்டரை எடுத்துச் சென்றனர்.
இந்த கார்ட் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், லேப்டாப் கம்ப்யூட்டரும் மறைந்து போய்விடும். இது கம்ப்யூட்டராக மட்டுமின்றி, வீடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி, தொலைக் காட்சிப் பெட்டி, தொலைபேசி, வாஷிங் மெஷின் போன்றவற்றிலும் இணைத்துப் பயன்படுத்தப்படும். இந்த சாதனங்களில் கம்ப்யூட் கார்டினைச் செருகிப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு சாதனத்தினை இயக்கத் தேவையானதை இந்த கார்டில் பதிந்து செயல்பாட்டினை அமல்படுத்தலாம்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இணையப் பயன்பாட்டில், இந்த கம்ப்யூட் கார்ட் புதிய புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisements
%d bloggers like this: