Advertisements

கனவு மெய்ப்படுமா?

னவு காணாத மனிதர்களே இல்லை. கனவுகள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகவோ அச்சுறுத்தக்கூடியவையாகவோ இருக்கலாம். மனித இனத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, பல்வேறு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களுக்குக் காரணமாகவும் பல தீர்க்கதரிசனங்களை முன்அறிவிப்பதாகவும் கனவுகள் இருந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகள், கனவு என்றால் என்ன? அது சொல்ல வரும்

விஷயம் என்ன? என்று நமக்குள் ஒரு தேடுதலையே ஏற்படுத்திவிட்டன. அறிவியல் என்னதான் பல மடங்கு முன்னேறிவிட்டாலும், கனவு பற்றிய புரிதல் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கனவுக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு இல்லை. உண்மையில், கனவுகள் நம் விழிப்போடு தொடர்பு உடையவை. நம் எண்ணங்களின் பிரதிபலிப்புதான் கனவுகள். இவை பலதரப்பட்டவை. வயதுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப கனவுகளும் மாறுபடும்.

ஏன் ஏற்படுகின்றன?

கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பதற்கு தெளிவான கொள்கைகள் இல்லை. பல்வேறு கருத்துரைகள், சிந்தனைகள் நிலவுகின்றன.

கனவுகள் ஒருவரின் ஆழ்மனதின் வெளிப்பாடு. நாம் தூங்கும்போது, `ரெம்’ (Rapid eye movement – REM) எனப்படும் கண்கள் வேகமாக அசையும் நிலையில் கனவுகள் வருகின்றன. இந்த நிலையில், உடலின் அனைத்துப் பகுதிகளும் சுயகட்டுப்பாட்டை இழந்து, முழுமையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

எவை கனவாகின்றன?

கனவு உருவாக்கம் என்பது மூளையின்  முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று. கனவுகள் உருவாகும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சிலருக்கு இடம், பொருள், முகம் தெளிவாகத் தெரியலாம். சிலருக்குக் கனவுகள் தெளிவற்றதாக புகைமூட்டமானதாகத் தோன்றும். பொதுவாக, நம் நிகழ்கால ஏக்கங்கள், கவலைகள், பிரச்னைகள் கனவின் மூலம் வடிவம் பெறுகின்றன. ஒரு சில நேரங்களில், நம் நிகழ்காலப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள், கனவு மூலமாகக் கிடைக்கலாம்.

நம்மில் பலராலும் கனவுகளை எளிதில் நினைவுபடுத்த முடியாது. தூக்கம் கலைவது தன்னிச்சையாக நடந்தால், அவற்றை நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிவிடும். மனஅழுத்தம், மனப்பதற்றம் உள்ளவர்களுக்கு, கனவுகள் கவலைக்குரியதாகவும், அதிர்ச்சி ஏற்படுத்தும் விதங்களிலும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்குத் தாயின் பிரிவு பற்றியும், முதியோருக்கு உடல்நிலை மற்றும் பிறப்பு பற்றியும் கனவுகள் வரலாம். ஒரு சிலருக்குக் கனவு காண்பதால் பதற்றம் அதிகரிக்கும்.

உளவியல் நிபுணர் இவான் வாலஸ் என்பவர், தன்னுடைய 30 ஆண்டுகால உளவியல் அனுபவத்தில், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கனவுகளைப் பற்றி கேட்டு, அவற்றில் இருந்து மிக முக்கியமான கனவுகளை வகைப்படுத்தியிருக்கிறார். சில முக்கியமான, அடிக்கடி ஏற்படக்கூடிய கனவுகள் பற்றியும் அதற்கான பலன்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

 

* நிர்வாணமாக இருப்பது: உங்கள் பலவீனத்தை மற்றவர் அறிந்துகொள்கிறார்கள் என்று உங்கள் உள்மனம் அச்சப்படுவதைத் குறிக்கும். 

* விமானம், ரயில், பஸ் வாகனங்களைத் தவறவிடுவது: நீங்கள் ஏராளமான பொறுப்புக்களைக் கையில் எடுத்து இருப்பீர்கள்; அதை முடிக்க முடியுமா, முடியாதா என்ற அச்சத்தின் வெளிப்பாடு.

* பற்கள் உடைவது அல்லது விழுவது: ஒருவர் தங்களைப் பயன்படுத்திக்கொண்டிருப் பதைக் குறிக்கும்.

* குழந்தைகள் கனவில் வருவது: அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைக் குறிக்கும்.

* உறவினர்கள், நண்பர்கள் இறப்பதுபோல் கனவு: இனம் புரியாத பயம் அல்லது புதிய மாறுதல் ஒன்றைக் குறித்த அச்சம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.

* கீழே விழுவது: நமக்குக் கவலைகள் அதிகமாக இருப்பதையும் மனக்கட்டுப்பாட்டை இழப்பதையும் குறிக்கும்.

* உணவுப் பொருட்கள் கனவில் வருவது: புத்திக்கூர்மை அடைவதைக் குறிக்கும். பொதுவாக, உணவு, நம் உடலுக்கும் மூளைக்கும் ஊட்டத்தை அளிக்கிறது.

* கைகள் வருவது: வெறும் கைகளைப் பார்ப்பது, நம்மால் எந்தப் பயனும் இல்லை என்ற சிந்தனையைக் குறிக்கும். கைகளைக் கழுவது போல் கனவு வருவது, தனிமையைக் குறிக்கும். கைகளை மூடி இருப்பதுபோல் வந்தால், நீங்கள் செல்லும் பாதை, தெளிவானது, சரியானது என்பதை உணர்த்தும்.

* வீடு அல்லது கட்டடம்: ஆழ்மனதின் எண்ணங்களைக் குறிக்கும். மேலும், ஒவ்வொரு தளம் மற்றும் அறையாக வருவது, வித்தியாசமான உணர்ச்சிகள், பழைய நினைவுகள் மற்றும் ஆழ்மனதைப் பாதித்த உண்மைச் சம்பவங்களை நினைவுபடுத்தும்.

* மிருகம் துரத்துவது: நிகழ்காலப் பிரச்னைகளில் இருந்து விலகி ஓடும் மனப் பான்மை உள்ளவர்களுக்கு இந்த மாதிரியான கனவுகள் வரலாம்.

* பறப்பது: சுதந்திரம், பிரச்னைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளல் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

* பணம்: சுயமதிப்பைக் குறிக்கும். பணப் பரிமாற்றம் செய்வதுபோன்ற கனவு வந்தால், நீண்ட நாள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிறைவேறப் போவதை அறிவுறுத்தும்.

* பாதைகள் அல்லது வெற்றுச் சாலைகள்: வாழ்க்கைப் பயணம் செல்லும் திசையை அறிவுறுத்தும். மேலும், உங்களுடைய வாழ்க்கைப் பாதை சரியாகத்தான் செல்கிறதா என்ற கேள்வியை எழுப்பும்.

* தண்ணீர்: பல விதங்களில் தண்ணீர் கனவில் வரலாம். அவற்றின் பொதுவான குறிப்பு, உணர்ச்சி மற்றும் மயக்கநிலை. மிகவும் அமைதியான சூழலில் குளத்தில் நீர் உள்ளது போன்ற கனவு, உங்களுடைய ஆழ்மனதைப் பிரதிபலிக்கும். கடல் போன்ற நீண்ட நீர்ப்பரப்பு, நீங்கள் எடுத்துள்ள வேலை அல்லது காரியத்தின் பலத்தைப் பிரதிபலிக்கும்; அவற்றை முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அறிவுறுத்தும்.

* உச்சியிலிருந்து கீழே விழுவது: தோல்வி பயம் காரணம்.

கனவுக்கும் எதிர்காலத்துக்கும் தொடர்பு உண்டா?

சிலருக்கு தாங்கள் அழுவது போல் கனவு வரலாம். அது நிகழ்கால வாழ்வில், அதிகப் படியான மனஅழுத்தத்துடன் இருப்பதால் வரும். தூக்கத்தில் கண்ணீர்த்துளி வருவது, விரும்பிய ஒரு விஷயத்தைப் பற்றிக் கற்றுக்கொள்வது அல்லது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும்.

மீண்டும் மீண்டும் ஒரே கனவு வரலாம். இது சிலருக்கு பயத்தைக் கொடுக்கும். ஏதேனும் ஒரு நிகழ்வு குறித்து, கவலை அல்லது துக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு இது போன்ற கனவுகள் வரலாம்.

தெரியாத நபரின் முகம் மீண்டும் மீண்டும் கனவில் வரலாம். அவர், உங்களின் ஆழ்மனதில் பதிவாகி உள்ள நிகழ்வுகளுடன் தொடர்புடை யவராக இருக்கலாம்.

பொதுவாக பாம்பைக் கனவில் காண்பவர்கள், ஏதோ ஒரு விஷயத்தை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் என்பதைக் குறிக்கும்.

ஓடுவதுபோல் கனவு வரலாம்.  அது, நீங்கள் ஏதோ ஒன்றிலிருந்து விடுபட நினைக்கிறீர்கள் அல்லது ஒதுங்க நினைக்கிறீர்கள் என்பதைக் குறிக்கும். அது உங்களுக்கு அச்சம் அல்லது சங்கடமான சூழலை ஏற்படுத்தலாம்.

கனவுகளை எழுதி வையுங்கள்!

கனவுகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. கனவுகள் நிகழ்காலப் பிரச்னைகளை, ஏக்கங்களைப் பிரதிபலிக்கின்றன. காணும் கனவுகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுந்தவுடன் எழுதி வைப்பதன் மூலம், நம் ஆழ்நிலை மனதின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. கனவில் வரும் பொருட்கள், வடிவங்கள் எல்லாவற்றைவும் இணைத்துப் பார்க்க முயன்றால், கனவின் வாயிலாக, நம்முடைய பயங்களுக்குக் காரணத்தைக் கண்டறிய முடியும். `கனவு மூலமாக ஆழ்மனதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது என்றும் அதன் மூலம் தீர்வு காணமுடியும்’ என்றும் பிரபல மனநல ஆராய்ச்சியாளர் சிக்மண்டு ஃபிராய்டு (Sigmund Freud) செய்த ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Advertisements
%d bloggers like this: