ஒமேகா 3 ஏன்? எதற்கு? எதில்?

டலுக்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமில (Polyunsaturated fatty acids) வகையைச் சேர்ந்தது, ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ஆரோக்கியமான மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் இது அவசியம்.  புற்றுநோய், மனஅழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவும், வந்தபின் அளிக்கப்படும் சிகிச்சையிலும் இதற்கு முக்கிய பங்கு உள்ளது.

 

டிரைகிளிசரைட் அளவைக் குறைப்பதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடலால் உருவாக்க முடியாது. எனவே, இதை உணவின் மூலம் எடுத்துக்கொள்வது அவசியம். எண்ணெய் சத்துமிக்க மீன்,  வால்நட், ஃபிளாக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதை போன்றவற்றில் இருந்து போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கிறது.

தினமும் 0.3-0.5 கிராம் இ.பி.ஏ (Eicosapentaenoic acid) மற்றும் டி.ஹெச்.ஏ (Docosahexaenoic acid) வகையும், 0.8-1.1 கிராம் ஏ.எல்.ஏ (Alpha-Linolenic acid) வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

மீன் போன்ற கடல் உணவுகளில் இருந்து கிடைக்கும் இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடல் நேரடியாக பயன்படுத்திக்கொள்ளும்.

வால்நட் போன்ற கொட்டைகளில் இருந்து கிடைக்கும் ஏ.எல்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உடல், இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலமாக மாற்றித்தான் பயன்படுத்த வேண்டி இருக்கும். உடலுக்குத் தேவையான வகையில் மாற்றும் திறன் சிலருக்கு குறைவாக இருக்கும். அவர்கள், டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் மாத்திரையாக எடுத்துக்கொள்ளலாம்.

எதில் எவ்வளவு?

100 கிராம் நெய் மீனில்…  8 கிராம் (டி.ஹெச்.ஏ மற்றும் இ.பி.ஏ வகை)

* ஒரு டேபிள்ஸ்பூன் ஃபிளாக்ஸ் விதையில்… 1.6 கிராம் (ஏ.எல்.ஏ வகை)

* கால் கப் வால்நட்டில்… 2.3 கிராம் (ஏ.எல்.ஏ வகை)

* முக்கால் கப் சோயாபீனில்… 0.76 கிராம் (ஏ.எல்.ஏ வகை)

%d bloggers like this: