Advertisements

கார்டியாக் அரெஸ்ட் – ஹார்ட் அட்டாக் என்ன வித்தியாசம்?

நேத்து நைட்கூட அந்த மனுஷன் எங்கிட்ட நல்லாத்தான் பேசிட்டு இருந்தார்… காலையில இப்படி ஆயிடுச்சே…’  என்று நெருக்கமான நண்பர்கள் வருந்துவதைப் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். இதுபோன்ற திடீர் இழப்புகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது இதயக்கோளாறுகள். இதயத்தை நேரடியாகத் தாக்கும் பல பிரச்னைகள் இருந்தாலும், நாம் அனைத்தையும் மாரடைப்பு (Heart Attack) என்றே கருதுகிறோம். குறிப்பாக, திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden Cardiac Arrest) பிரச்னையையும் நாம் மாரடைப்பு என்றே புரிந்துவைத்திருக்கிறோம். ஒருவர் எந்தவித வலிக்கான முன் அறிகுறிகளும் இன்றி திடீர் என இதயப்பிரச்னையால் இறந்தால், அது இதயத்துடிப்பு முடக்கமாக  (Cardiac Arrest) இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மாரடைப்புக்கும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கும் வேறுபாடுகள் என்னென்ன? இதயநோய் நிபுணர் எம்.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

 

மாரடைப்பு  (Heart Attack)

இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்தம் ஓட்டம் தடைப்படுவதால் அல்லது ரத்தம் ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால், இதயம் பாதிக்கப்பட்டு, தனது துடிப்பை நிறுத்திக்கொள்வதே மாரடைப்பு.

அடைப்பு ஏற்படும் விதம்

இதயத்தின் தமனி நாளங்களில் கொழுப்புப்படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச்செய்வதுதான் மாரடைப்பு ஏற்பட அடிப்படைக் காரணம். இதயத்தசைகளுக்குத் தேவையான பிராண வாயுவின் சமநிலையில் ஏற்படும் மாற்றம், வயது முதிர்ச்சிக்காரணமாக தமனி நாளங்கள் பலவீனமடைவது போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பு வந்தவர்களுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளித்து ஸ்டென்ட் பொருத்தப்படும். சிலருக்கு, ஸ்டென்ட்டில் ரத்தம் உறைவதாலும் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு உருவாகும்.

திடீர் இதயத்துடிப்பு முடக்கம்  (Sudden Cardiac Arrest)

நம் இதயத்துக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் இருந்தும் இதயத்துக்கு உள்ளிருந்தும் மின்னோட்டம் வருகிறது. சில காரணங்களால் இந்த மின்னோட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் (Fluctuations) ஏற்படும்போது, இதயத்துடிப்பு திடீரென அதிகரித்தும் குறைந்தும் தாறுமாறாகச் செயல்படுகிறது. இதனால், ஒருகட்டத்தில் எரிந்துகொண்டிருக்கும் பல்பு ப்யூஸ் ஆவதைப் போல நமது இதயம் சட்டென்று தன் துடிப்பை நிறுத்திக் கொள்கிறது. இந்த நிலையையே திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest) என்பார்கள். மாரடைப்பினாலும் இதயச் செயலிழப்பினாலும் (Heart failure) திடீர் இதயத்துடிப்பு முடக்கம்  ஏற்படும். பொதுவாக, மரணம் அடைபவர்கள் அனைவருக்குமே கடைசி நேரத்தில் திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படும். எனவே, இதனை மரணத்தின் நுழைவுவாயில் என்றுகூட சொல்லலாம்.

இதயத்துடிப்பின் திடீர் நிறுத்தத்தால், உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் தடைப்படுகிறது. தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்படுவதால் மயக்க நிலைக்குச் சென்று, சுயநினைவு இழக்கும் நிலை ஏற்படுகிறது. 

வேறுபாடு அறிவது எப்படி?

மாரடைப்பு ஏற்படும்போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒருவிதமான வலி (நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலி) ஏற்படுவது போல தோன்றும். இந்த வலி, கழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் பரவும், ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். இதயத்துடிப்பு இருக்கும், மூச்சுத்திணறல் உண்டாகும். வியர்த்துக் கொட்டி, மயக்கம் வரும். இதுபோன்ற அறிகுறிகளை வைத்தே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறியமுடியும். அதாவது மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சு வலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினை வோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் எடுத்துக் கொண்டு, இதய அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவ மனைக்குச் சென்றால், அங்கே மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகள் அளித்து உயிரைக் காப்பாற்றுவர்.

திடீர் இதயத்துடிப்பு முடக்கம், மாரடைப் பைவிடவும் அபாயகரமானது. ஏனெனில், எந்தவித அறிகுறியும் இல்லாமல், திடீரென ஒருவர் நிலைகுலைந்து, மயக்க நிலையில் தரையில் சாய்ந்தால் அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்கலாம்.

இதயத்துடிப்பு நின்றுவிடுவதால், இதயத்தின் உள்ளிருந்து ரத்தத்தை உந்தித்தள்ளும் பணியை இதயம் நிறுத்திவிடுகிறது. எனவே, இதயத்திலிருந்து பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்ல, நெஞ்சுப்பகுதியில் வேகமாக அழுத்தம் கொடுத்து, வாயோடு வாய் வைத்து செயற்கை  மூச்சு  அளிக்கும் முதலுதவி அளிக்க வேண்டும். இதற்கு  சி.பி.ஆர் (Cardiopulmonary Resuscitation) முதலுதவி என்று பெயர்.

தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவ மனைக்குச் கொண்டுசென்றால் டிஃபிப்ரிலேஷன் (Defibrillation) கருவி மூலம் மின் தூண்டல் ஏற்படுத்தி, இதயத்துக்கு உயிரூட்ட முடியும் (திரைப்படங்களில் நெஞ்சுப்பகுதியில் அயர்ன் பாக்ஸ் போல ஒரு கருவியை வைத்து வைத்து எடுப்பார்களே அதுதான் டிஃபிப்ரிலேஷன் கருவி).

இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு சில மணி நேரங்களில், உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகும்போது, ‘எக்மோ ட்ரீட்மென்ட்’ (எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பரேன் ஆக்சிஜனேஷன்) தரப்படும். இது உடலுக்கு வெளியே இருந்து இதயம் மற்றும் நுரையீரலின் பணியைச் செய்யக்கூடிய கருவி.


முன்னெச்சரிக்கை என்ன?

*மார்பில் ஏற்படும் வலியை அலட்சியப்படுத்தக் கூடாது. எளிய ஈ.சி.ஜி பரிசோதனை மூலம் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று இந்தப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

* மாரடைப்பு வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் சிலர் பயத்தில் வீட்டிலேயே முடங்கிவிடுவார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு எல்லாம் சரியாகிவிட்டது என்று துளிகூட அதைப் பற்றிப் பயப்படாமல் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். இரண்டுமே தவறானவை.

* உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
 
*இதயப் பாதுகாப்பு குறித்தும் அதற்கான முதலுதவி அளிப்பது குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும். வெளிநாடுகளில் பொதுமக்களுக்கு சி.பி.ஆர். போன்ற முதலுதவிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. நமது நாட்டிலும் இதற்கான பயிற்சி அளிப்பது அவசியம்.


யாருக்கு அதிக அபாயம்?

யர் ரத்த அழுத்தம், பருமன், ரத்த மிகைக் கொழுப்பு, சர்க்கரை நோய், இதயத்தசை அழற்சி போன்ற பிரச்னை உடையவர்கள், உடற்பயிற்சி, உடல் உழைப்பு அறவே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், புகைபிடிப்போர், மது அருந்துவோர், முதியோர் போன்றோருக்கு இதய நோய்கள் ஏற்படலாம்.

Advertisements

One response

  1. thank you sir. and welcome

%d bloggers like this: