விண்டோஸ் 10: வர இருக்கும் புதிய அப்டேட்

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, பெரிய அளவிலான மேம்படுத்தல், வரும் ஏப்ரல் மாதம் பயனாளர்களுக்குத் தரப்பட இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனை Creators Update என அழைக்கிறது. ஏற்கனவே, இந்த மேம்படுத்தல் பைல்கள், விண்டோஸ் Insider Program திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு பின்னூட்டங்களும், சோதனை முடிவுகளும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பெறப்பட்டு வருகின்றன. அவற்றிலிருந்து, இந்த மேம்படுத்தலில், பயனாளர்கள் பெறவிருக்கும் புதிய வசதிகள் குறித்துத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
ஸ்டார்ட் மெனு போல்டர்


தற்போது ஸ்டார்ட் மெனுவில், விண்டோஸ் 10 இயக்கத்தில் பதியப்பட்டுள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களும், டைல்களாகக் காட்டப்படுகின்றன. இவற்றில் நேரடியாகக் கிளிக் செய்து இயக்கலாம். இனி, இந்த டைல்கள் குழுவாக போல்டர் டைல்களில் இணைக்கப்படும். இதில் கர்சரைக் கொண்டு சென்றால், உள்ளே இருக்கும் புரோகிராம்கள் காட்டப்படும். அதில் கிளிக் செய்து, நாம் தேவையான புரோகிராம்களை இயக்கத்திற்குக் கொண்டு வர முடியும். எடுத்துக் காட்டாக, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இயக்கங்கள் இதுவரை தனித்தனி டைல்களாகக் காட்டப் படுகின்றன. இனி, இவை ஒரே டைலின் கீழாகக் காட்டப்படும். இது போல பல டைல் குழுக்கள் போல்டர்களைப் போல அமைக்கப்படும். டைல் போல்டர்களை அமைக்க, புரோகிராம் ஒன்றின் டைல் ஒன்றை இழுத்து வந்து, இன்னொரு டைல் மீது விட்டால் போதும். போல்டர் டைல் உருவாக்கப்படும்.
பிரவுசரில் டேப் முன் காட்சி
எட்ஜ் பிரவுசரில், நாம் திறந்துள்ள டேப்களின் சிறிய தோற்றத்தைக் காட்டும் ‘டேப் பிரிவியு’ தரப்படுகிறது. நெட்டு வாக்கில், அனைத்து திறக்கப்பட்ட தளங்களின் சிறிய படங்கள் வரிசையாகக் கிடைக்கும். இதில் கர்சரைக் கொண்டு செல்கையில், கீழாக, அத்தளத்தின் சிறிய தோற்றம் காட்டப்படும்.
தளங்களை ஒதுக்கி வைத்தல்
நாம் எட்ஜ் பிரவுசரில் திறந்து வைத்திருக்கும் சில தளங்களை நாம் அடிக்கடி பயன்படுத்தவில்லை எனில், அவற்றை ஒரு ஓரமாக ஒதுக்கி வைக்கக் கூடிய வசதி தரப்படுகிறது. ஒரே ஒரு கிளிக் மூலம் இதனை மேற்கொள்ளலாம். இப்படி ஒதுக்கி வைத்தவற்றை பின்னர், மெனு மூலம் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் தரப்படுகிறது.
ப்ளாஷ் தளங்களை ஒதுக்குதல்
எட்ஜ் பிரவுசர், இனி Flash பயன்படுத்தும், பரிட்சயமில்லாத தளங்களை ஒதுக்கி வைக்கும். பயனாளர்களாகப் பார்த்து, அந்த தளங்கள் வேண்டும் எனில், கிளிக் செய்து, ப்ளாஷ் மற்றும் தளங்களை இயக்கலாம். இதனால், சந்தேகத்திற்கு இடம் தரும் இணைய தளங்களை நாம் பார்க்காமல் ஒதுக்கிவிடலாம். பாதுகாப்பினை வலுப்படுத்தலாம்.
இணைய தளங்களில் எழுத
எட்ஜ் பிரவுசர் வழியாக இணைய தளங்களைப் பார்க்கையில், அவற்றில் நம் குறிப்புகளை எழுதி வைக்கலாம். மீண்டும் இந்த தளத்தைப் பார்க்கையில் அந்த குறிப்புகள் நாம் அதில் உள்ள தகவல்கள் குறித்து என்ன நினைத்தோம் என்பதைக் காட்டும். இவ்வாறு எழுத, ‘விண்டோஸ் இங்க்’ என்னும் டூலில் உள்ள அனைத்து வண்ணங்களும் கிடைக்கும்.
மற்ற பிரவுசர்களிடமிருந்து தகவல் இறக்கம்
எல்லாரும் மைக்ரோசாப்ட் தரும் எட்ஜ் பிரவுசருக்கு மாறப் போவதில்லை. அப்படி மாறுபவர்களின் வசதிக்கென, “Import from another browser” என்ற பட்டன், இந்த மேம்படுத்தலில் தரப்படுகிறது. எட்ஜ் பிரவுசரின் செட்டிங்ஸ் மெனுவில் இது தரப்படுகிறது. இதன் மூலம், நாம் மற்ற பிரவுசர்களில் ஏற்படுத்திய புக்மார்க், பார்த்த தளங்களின் முகவரிப் பட்டியல், சேவ் செய்து வைத்த பாஸ்வேர்ட் மற்றும் பிற தகவல்களை எளிதாகப் பெற்று பயன்படுத்த முடியும்.
எட்ஜ் பிரவுசரில் புதிய விண்டோ ஒன்றைத் திறக்க விரும்புபவர்கள், இனி, டாஸ்க் பாரில் உள்ள எட்ஜ் பிரவுசர் ஐகானில் கிளிக் செய்து ஏற்படுத்திக் கொள்ளலாம்.
தெளிவான அறிவிப்புகள்
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள Action Center இப்போது மேலும் பல வசதிகளைத் தருகிறது. இவற்றின் மூலம், நமக்குக் கிடைக்கும் நோட்டிபிகேஷன்கள் தெளிவாகக் காட்டப்படும். அப்ளிகேஷன்கள் அல்லது சேவை பிரிவுகளிடமிருந்து பெறும் தகவல் அறிக்கைகள் பிரித்து வைத்து சேமிக்கப்படும். இதன் மூலம், நாம் தகவல்களின் அடிப்படையில், பிரித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க முடியும்.
புதிய ‘தீம் படங்கள்’
Creators Update மேம்படுத்தலுக்குப் பின், விண்டோஸ் திரையில் நாம் விரும்பும் ‘தீம் படங்களை’ எளிதாக அமைக்க முடியும். படங்களும் அதிக எண்ணிக்கையில் நமக்குக் கிடைக்கும். விண்டோஸ் ஸ்டோரிலிருந்து இவை தரப்படும். விரும்புபவற்றைத் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். Settings மெனுவில் உள்ள Personalization பிரிவில் இவற்றை நாம் நிர்வகிக்க முடியும்.
நீல நிற ஒளி குறைப்பு
கம்ப்யூட்டர் திரையில் காட்டப்படும் நீல நிற ஒளி, இரவு நேரத்தில் நம் உடல் தூங்கும் கால இடைவெளியைப் பாதிக்கும். இதனைத் தவிர்க்க, விண்டோஸ் புதிய மேம்படுத்தலில், இரவு நேரத்தில் காட்டப்படும் நீல ஒளியைக் குறைக்கும் டூல் தரப்படுகிறது. Settings -> System -> Display எனச் சென்று, இதனைக் குறைக்கலாம். அல்லது, Settings->Notifications & actions எனச் சென்று குறைக்கலாம்.
இணைப்பில் உள்ள சாதனங்கள்
புளுடூத் மற்றும் நெட்வொர்க் இணைப்பில் உள்ள சாதனங்கள் அனைத்தும், புதிய மேம்படுத்தலில், இணைக்கப்பட்ட ஒரு புதிய பிரிவில் காட்டப்படும். இதனால், இவற்றை நிர்வகிப்பது எளிதாகும். செட்டிங்ஸ் பகுதியில் இதற்கான மெனுவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலே காட்டப்பட்டவற்றைக் காட்டிலும் இன்னும் பல புதிய வசதிகள், இந்த மேம்படுத்தல் வரும் ஏப்ரல் மாதம் வரும்போது கிடைக்கலாம். விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள், இவற்றைப் பயன்படுத்த தயாராகிக் கொள்ளலாம்.

%d bloggers like this: