தலசீமியா தவிர்ப்போம்! ஓர் அலர்ட் ரிப்போர்ட்

காஷ், நிஷா தம்பதியரின் முதல் குழந்தை இஷாந்துக்கு  பிறந்த ஒரு வாரத்தில் இருந்தே சளியும் விட்டுவிட்டுக் காய்ச்சலும் ஏற்பட்டன. பொது மருத்துவரிடம் காட்டியபோது, சாதாரணக் காய்ச்சல் எனக் கருதி மருந்து, மாத்திரைகள் வழங்கினார். வளர வளர இந்தப் பிரச்னைகள் அதிகமாகின. ஒரு வயதில் இஷாந்த் நடக்கத் தொடங்கியதும், அடிக்கடி சோர்ந்து கீழே விழுந்தான். வியர்த்துக் கொட்டியது. சருமம் வெளிர் நிறமானது. குடும்ப மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ரத்தவியல் நிபுணரிடம் சென்றபோது, குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இஷாந்த் `தலசீமியா மேஜர்’ (Thalassemia Major) என்னும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

தலசீமியா

தலசீமியா என்பது மரபு வழியில் வரும் ரத்தக்கோளாறு நோய். இது பெற்றோர்களின் பாதிக்கப்பட்ட மரபணு மூலம் பிள்ளைகளுக்கு ஏற்படும். தலசீமியா மேஜர் நோயால் பாதிக்கப்பட்ட இஷாந்தின் பெற்றோர் இருவருமே குறைபாடு உள்ள மரபணுவைக் கொண்டவர்களாக இருந்தார்கள் (Autosomal recessive).

`தலஸ்’ என்றால் கடல் என்று பொருள். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ளவர்களிடம் முதலில் இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டதால், இதற்கு `தலசீமியா’ என்று பெயர். இந்தியா உட்பட பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் காணப்படுகிறது.

ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு சேர்க்கும் புரதம்தான் ஹீமோகுளோபின். `ஹீம்’ (Haem) என்றால், இரும்பு. `குளோபின்’(Globin) என்பது புரதம். ஒருவருக்கு ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ரத்தசோகை ஏற்படும். குளோபின் (Globin) புரதஉற்பத்தி குறைபாட்டினால் தலசீமியா ஏற்படுகிறது. ரத்த சிவப்பணுக்கள் அவற்றின் வாழ்நாளுக்கு முன்னரே (Premature) அழிந்துபோவதும் இந்த நோய் ஏற்பட ஒரு முக்கியக் காரணம்.
யார் யாருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது?

தலசீமியா மைனர் உள்ள ஆண், தலசீமியா மைனர் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தலசீமியா மேஜர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வராமலும் போகலாம்.
தலசீமியா மைனர் உள்ள தம்பதியர்  இருவரும் `தலசீமியா கேரியர்ஸ்’ என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் அடுத்த தலைமுறைக்கும் தலசீமியாவைக் கடத்துகிறார்கள்.

தலசீமியா மேஜர் உள்ளவர், தலசீமியா இல்லாத பெண்ணுடன் சராசரி இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியும். ஆனால், இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தலசீமியா பிரச்னை இருக்கவும் வாய்ப்பு உள்ளது; இல்லாமலும் போகலாம்.

பரிசோதனைகள்

ஒருவருக்கு தலசீமியா மேஜர் உள்ளதா எனக் கண்டறிய, முழு ரத்தப் பரிசோதனை (Complete hemogram), முதிரா சிவப்பணுக்களின் எண்ணிக்கை (Reticulocyte Count), ஹீமோகுளோபின் எலெக்ட்ரோபோரெசிஸ் (Hemoglobin electrophoresis) ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும். ரத்தசோகைக்காக சிகிச்சைக்கு வருபவருக்கு, மருத்துவர் மேற்கூறிய பரிசோதனைகளைச் செய்வார்.

 

சிகிச்சைமுறைகள்

தலசீமியா மைனர் நோயால்  பாதிக்கப்பட்ட வருக்குத்  தீவிர சிகிச்சை அவசியம் இல்லை. இரும்புச்சத்துக் குறைபாட்டைப் போக்க, ஃபோலிக் அமில (Folic Acid) மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டியது இருக்கும்.

தலசீமியா மேஜர் நோயாளிகளுக்கு இரண்டு வகையான சிகிச்சைகள் உள்ளன. நோயின் தாக்கத்துக்கு ஏற்ப, மூன்று வாரங்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ, 350 மி.லி ரத்தம் செலுத்தியாக வேண்டும். இவ்வாறு, அவர்கள் வாழ்க்கை முழுதும் ரத்தம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

மீண்டும் மீண்டும் உடலில் ரத்தம் செலுத்தப்படுவதால், தலசீமியா நோயாளிகளுக்கு உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கலாம். இதனைத் தவிர்க்க மருந்து எடுக்க வேண்டும். சில நோயாளிகளுக்கு, மண்ணீரலை (Spleen) அறுவைசிகிச்சை செய்து (Splenectomy) நிரந்தரமாக அகற்றுவதன் மூலமாக அடிக்கடி ரத்தம் ஏற்றுவதைத் தவிர்க்கலாம்.

எலும்பு மஜ்ஜை மாற்றுசிகிச்சை

ரத்தம் ஏற்றும் முறைக்கு மாற்றாக, எலும்பு மஜ்ஜை மாற்று நவீன சிகிச்சை செய்யப்படுகிறது. (Bone Marrow Transplanation – BMT). இந்தச் சிகிச்சை மூலமாக தலசீமியா மேஜர் நோயாளிகள், பூரண குணம் அடைய முடியும்.
எலும்பு மஜ்ஜையில் உள்ள ஸ்டெம் செல்கள்தான் ரத்த அணுக்களை உற்பத்தி செய்கின்றன. இந்த ஸ்டெம்செல்கள் ஆரோக்கி யமாக இருந்தால்தான், ரத்த அணுக்களின் உற்பத்தி சீராக இருக்கும்.

இந்தச் சிகிச்சையில், எலும்பு மஜ்ஜையில் உள்ள பழைய ஸ்டெம்செல்களைக் கதிர்வீச்சு மூலமாக அழித்துவிட்டு, தானமாகக் கிடைக்கும் ஸ்டெம்செல்கள் உடலுக்குள் ஊசிமூலம் செலுத்தப்படும்.

பொதுவாக, நோயாளிகளின் நெருங்கிய உறவினர்களுக்கு ஒரே மாதிரியான மரபணு, புரத அணுக்கள் இருக்கும். அவர்களிடமிருந்து ஸ்டெம்செல் தானம் பெற்று நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஸ்டெம் செல் தானம் செய்வதால், கொடையாளரின் உடலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ரத்தசோகைப் பிரச்னை உள்ளவர்கள் மருத்து வரிடம் ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளும் போது மருத்துவர், அவருக்கு தலசீமியா பரிசோதனையும் செய்வார்.  ஒருவேளை அவர் தலசீமியா கேரியராக இருந்தால், தலசீமியா இல்லாத பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதனால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தலசீமியா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

தவிர்க்கும் வழிகள்

கர்ப்பிணிகள் மூன்றாவது மாதத்தில் கட்டாயம் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலமாக வயிற்றில் வளரும் கருவுக்கு தலசீமியா மேஜர் மரபணு உள்ளதா எனக் கண்டுபிடித்துவிடலாம். பெரும்பாலும், இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கருக்கள் பெற்றோர் விருப்பத்தின் பேரில் கலைக்கப்படுகின்றன.

எந்த ஒரு நோயையும் வரும்முன் காப்பதே சிறந்தது. ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே மாதிரியான மரபணுக்கள் இருக்கும். ரத்த சொந்தத்துக்குள் திருமணம் செய்வது, தலசீமியா ஏற்பட முக்கியக் காரணம். ஒரே குடும்பத்துக்குள் திருமணம் செய்யாமல் இருப்பதே இந்த நோய் வராமல் தடுக்கச் சிறந்த வழி.

– வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்


தலசீமியா வகைகள்

தீவிரத்தன்மையைப் பொறுத்து தலசீமியா, மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

*    பெரும் தலசீமியா (Thalassemia Major) – மிகக் கடுமையான ரத்தசோகை.

*    சிறு தலசீமியா (Thalassemia Minor) – மிகக் குறைந்த ரத்தசோகை.

*    இடைத் தலசீமியா (Thalassemia Intermedia) – நடுத்தர வகை பாதிப்பு.

இவற்றில், தலசீமியா மேஜர் இருந்தால், ரத்தசோகை, மண்ணீரல் வீக்கம், கல்லீரல் வீக்கம் மற்றும் எலும்பு மஜ்ஜை செயல்பாடுகளில் குறைபாடு ஆகியவை ஏற்படும்.


தலசீமியா அறிகுறிகள்

*    நாட்பட்ட உடல் சோர்வு

*    வயிற்றுவலி (Abdominal colic)

*    மூச்சுத்திணறல் (Breathlessness)

*    பித்தப்பைக் கற்கள் (Gall stones)

*    நீண்ட நாட்களாக ஆறாத கால் புண் (Chronic leg ulcers)

*    சுவாசத் தொற்றுநோய்கள் (Respiratory infection)

%d bloggers like this: