விருப்பப் பட்டியலில் தயிர்!

தயிர் சாதம், பலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக மாறியிருக்கிறது. முந்தைய காலத்தில் மட்டுமல்லாமல், இக்காலத்திலும் சரி. சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட, தயிர் சாதத்தை பிசைந்து கொடுத்தால், சமத்தாக சாப்பிட்டு கொள்வர். குழந்தைப் பருவத்தில் இருந்து பெரியவர்களானாலும் இன்று வரை, தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தயிர் சாப்பிட்டால் உடம்பு எடை அதிகரிக்கும் என்ற ஒரு விஷயம் இருந்தாலும், அதில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக, உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது. தயிர் சாப்பிடும் விஷயத்தில், எவ்வளவு கலோரிகள் வரை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். சில தயிர் பாக்கெட்டுகளில், 100 கலோரிகளும், 6 கிராம் புரதமும் இருக்கும். அதற்கு பதில், அதிக கலோரிகள் இருந்தாலும், 15 கிராம் வரை புரதம் இருக்கும் தயிரை பயன்படுத்துவது நல்லது.
அழகாகும் தோற்றம்
தயிர், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. தினமும் மூன்று வேளை தயிரை சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறைந்து, உடல் தோற்றம் அழகாக இருக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. தயிர், பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமிகளை அழிக்கிறது, வயிற்றுப் போக்கை தடுக்கும் ஆற்றலும் அதில் உள்ளது.
புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். பாலை விட, அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது. மிதமான லாக்டோஸ் இருப்பதால் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள், தயிரை பாதகமில்லாமல் உட்கொள்ளலாம். காரணம், பாலின் உட்பொருளான லேக்டோசு என்ற மூலப்பொருள் லாக்டிக் அமிலமாக மாறிவிடுகிறது.
இரவு நேரத்தில்…
குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிர், எடையை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமனான நபர்களுக்கு, தினமும் மூன்று வேளை, குறைந்தது கொழுப்பு சத்து கொண்ட தயிர் கொடுக்கப்பட்டது. அதன் பின், அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில், 22 சதவிகிதம் உடல் எடை குறைந்தது இருப்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் முன் இருந்ததை விட, அழகாக தோற்றம் பெற்று இருந்தனர்.
சளி, இருமல் இருப்பவர்கள், தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது; ஆயுர்வேத மருத்துவத்திலும், இதில் கூறப்பட்டுள்ளது. அது என்னவெனில், தயிரை, இரவில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். எனவே, இரவில் தயிர் சாப்பிடுவதை முடிந்தளவு தவிர்க்கலாம். உங்களால் தயிர் சேர்க்காமல் இருக்க முடியாதெனில், மோராக பருகலாம். பகல் நேரத்தில் சாப்பிடும் போது, சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தும், இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம். இதனால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, வயிறும் குளிர்ச்சியடையும். வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து பச்சடி போன்று செய்து சாப்பிடலாம். தயிரை மோர் குழம்பாக சமைத்து சாதத்துடன் சாப்பிடலாம்.
தயிரை, மண் பாத்திரத்தில் வைத்தால், வெயில் காலத்திலும் அது புளிக்காமல் சுவையுடன் இருக்கும். இஞ்சி, பெருங்காயம், சீரகம் தாளித்து தண்ணீர்
விட்டுக் கடைந்து, ஒரு நாளைக்கு, சில வேளை குடிக்கலாம். வடநாட்டினர், மோர் கடைந்து மிளகுத்தூள், உப்பும் சேர்த்து குடிக்கின்றனர்.

%d bloggers like this: