ஷீலா விலகியது ஏன்?: அரசு இயந்திரத்தில் ‛கோளாறு

சென்னை: தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், திடீர் என அந்த பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.
பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா என இரண்டு தரப்பில் இருந்தும் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
முதல்வராக இருந்த ஜெயலலிதா, தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணனை நியமித்து, அவரது ஆலோசனைபடியே பல்வேறு காரியங்களையும் ஆட்சி நிர்வாகத்தில் செய்து வந்தார். ஷீலாவின் நேர்மையான நடவடிக்கைகள், ஜெயலலிதாவுக்குப் பிடித்துப் போக, அவரை மட்டும் எந்த நேரமும் போயஸ் தோட்டத்துக்கு வந்து செல்ல அனுமதித்திருந்தார்.
இந்நிலையில், அவர் ஓய்வு பெற்றுவிட, அவரது இடத்தில் தனக்கு சிறப்பு செயலராக இருந்த ராம் மோகன் ராவை, தலைமைச் செயலராக நியமித்து விட்டு, ஷீலாவின் பணியை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.
அவரின் ஆலோசனை இல்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் எந்த காரியத்தையும் செய்ய மறுத்து வந்த ஜெயலலிதா, ஆட்சி நிர்வாகத்தில் எந்த கோப்பையும் முதல் கட்டமாக ஷீலா பாலகிருஷ்ணன் பார்க்க வேண்டும். அதன் பின், அவர் அதை தலைமை செயலருக்கு அனுப்பி, தனக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இணையான அதிகாரம்:

இதனால், முதல்வருக்கு இணையான அதிகாரத்தை, தமிழக அரசு நிர்வாகத்தில் பெற்று இருந்தார் ஷீலா பாலகிருஷ்ணன். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், தொடர்ந்து அந்தப் பொறுப்பில் தொடர ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை. அதை, முதல்வர் பன்னீர்செல்வத்திடம், பலமுறை தெரிவித்தார். ஆனால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நீங்கள், எனது ஆட்சியிலும், அரசுக்கு தொடர்ந்து உதவியாக இருந்து செயல்பட வேண்டும். எல்லா ஆலோசனைகளும் உங்களைக் கேட்டே செய்யப்படும் என சொல்லி வந்தார். அதனால், ஷீலா பாலகிருஷ்ணனும், அரசு சிறப்பு ஆலோசகராக பணியில் தொடர்ந்தார். முதல்வர் டில்லி சென்ற போதும் சென்றார்.
ஒரு கட்டத்தில், பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து வரும், சசிகலா தரப்பினர், ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரபித்தனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, பன்னீர்செல்வம் என்ன செய்கிறார் என்பதை, ஷீலா பாலகிருஷ்ணன் மூலம் அறிந்து கொள்ள முயன்றனர். அதற்கு ஷீலா உடன்படவில்லை என்றதும், அவருக்கு மறைமுகமாக நெருக்கடிகள் ஆரம்பித்தன.

உளவு:

தங்களுக்கு வேண்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மூலம், ஷீலா பாலகிருஷ்ணன் என்ன செய்கிறார் என்பது வரையில், உளவு அறிந்தனர். இதுவும், ஷீலா பாலகிருஷ்ணனை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதை லேசு பாசாகவும்; பின், தீவிரமாகவும் முதல்வர் பன்னீர்செல்வத்திடம், ஷீலா பாலகிருஷ்ணன் சொல்லிப் பார்த்தார். தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி வருத்தப்பட்ட முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை மீறி நடக்கும் விஷயங்களை தடுக்கத் தவறியுள்ளார்.
ஒரு கட்டத்தில், பன்னீர்செல்வமும், ஷீலா பாலகிருஷ்ணன் மீது சந்தேகம் கொண்டார். தான் சொல்லும் விஷயங்களை மட்டுமே, ஆட்சி நிர்வாகத்தில் செய்ய வேண்டும் என, ஜாடை மாடையாக, ஷீலாவுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இப்படி இருகூறாக நின்று, ஆளாளுக்கு உத்தரவு போடுவதும்; உளவு பார்ப்பதும், ஷீலாவுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
டில்லியில், முதல்வர் பன்னீர்செல்வத்தோடு, வெளிப்படையாக தம்பிதுரை மோதியதும், பிரதமரை, முதல்வர் சந்திக்க சென்றபோது, அதிகாரிகளை அழைத்துச் செல்லாமல் போனதும், ஷீலாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இதனால், ஆட்சி நிர்வாகத்தில் இருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்த ஷீலா, இது குறித்து தனது குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தொடர்ந்து ஆட்சி நிர்வாகத்தில் இருந்து செயல்படுவது, பின்னாளில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என, ஆலோசனை கூறியுள்ளனர்.
அதையடுத்து, தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். அதனால், ஓய்வு பெற்ற நிலையிலும் ஏற்றுக் கொண்ட பணி நீட்டிப்பில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவுக்கு, ஷீலா பாலகிருஷ்ணன் வந்துதான், தனது விலகலை தெரிவித்துள்ளார்.
இதே போன்ற நெருக்கடிகள், முதல்வர் பன்னீர்செல்வத்திடம் செயலர்களாக இருக்கும் வெங்கட் ரமணன், ராமலிங்கம், விஜயகுமார் போன்றவர்களுக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம், வெகு காலம் செயலர்களாக இருந்து பணியாற்றிய வெங்கட் ரமணனும், ராமலிங்கமும் நீண்ட விடுப்பில் சென்றிருப்பதாக தெரிகிறது.
அவர்களும், தங்கள் வகிக்கும் பணியில் இருந்து விலகிச் செல்லத் தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.தமிழக அரசு நிர்வாகம், இப்படி இரு கூறாக பிரிந்து நிற்பது, தமிழக அரசின் மொத்த செயல்பாடுகளையும் பாதிக்கும். குறிப்பாக, எல்லா துறைகளிலும் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

நன்றி- தினமலர்

%d bloggers like this: