ஸ்டாலினுக்கு ஓ.கே., சசிகலாவுக்கு நோ- பன்னீர் புது பார்முலா

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., அமைச்சரவையில், தி.மு.க.,வினர் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதாகவும்; சசிகலா தரப்பினர் சிபாரிசுகள் ஏற்கப்படுவதில்லை என்றும், சசிகலா தரப்பினர், பன்னீர்செல்வம் மீது பொங்குகின்றனர்.

கிடப்பில் சிபாரிசு:

இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது:ஜெயலலிதா மறைவுக்கப் பின், விடாப்பிடியாக, கட்சியின் நிர்வாகிகள் மூலம், தன்னை அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமித்துக் கொண்டார் சசிகலா.பன்னீர்செல்வம், மத்திய அரசின் ஆதரவோடு தன்னிச்சையாக செயல்படத் துவங்கியதால், அவரை, தன் ஆளுகைக்குள் கொண்டு வர முடியவில்லை. மத்திய அரசின் ஆதரவு இல்லாததால், இது நாள் வரையில், முதல்வர் நாற்காலியையும் சசிகலாவால் பிடிக்க முடியவில்லை. எல்லாவற்றிலும் தன்னிச்சையாக செயல்படும் முதல்வர் பன்னீர்செல்வம், சிபாரிசுகளை ஏற்கும் விஷயத்திலும், தன்னிச்சையாகவே செயல்படுகிறார். பொது இடங்களில் கூட தி.மு.க.,வினரோடு கொஞ்சிக் குலாவும் பன்னீர்செல்வம், ஆட்சி – அதிகாரத்தில் இருந்து, தி.மு.க.,வினரின் சிபாரிசகளை ஏற்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், சசிகலாவோ; அவரது குடும்பத்தினரோ சொல்லி அனுப்பும் எந்த சிபாரிசையும் பன்னீர்செல்வம் ஏற்க மறுக்கிறார். நேரடியாக மறுக்காத பன்னீர்செல்வம், எந்த சிபாரிசு வந்தாலும், பார்க்கிறேன்; செய்கிறேன் என்று சொல்வதோடு, சிபாரிசை அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார். இதனாலேயே, பன்னீர்செல்வத்தை முதல்வர் பொறுப்பில் இருந்து இறக்கி விட்டு, அப்பொறுப்பில் தானே உட்கார்ந்து கொள்ள வேண்டும் என, சசிகலா மெனக்கெடுகிறார். தி.மு.க.,வினரோடு அன்பு பாராட்டும் பன்னீர்செல்வத்தை நேரடியாக தி.மு.க., ஆதரிப்பதன் உச்ச கட்டமாகத்தான், சட்டசபை கூட்டத் தொடரில், சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவராக இருக்கும் துரைமுருகன், பன்னீர்செல்வம் ஆட்சி ஐந்தாண்டுகளும் சிறப்பாக நடப்பதற்கு, தி.மு.க., உதவியாக இருக்கும் என கூறியது. பன்னீர்செல்வத்துக்கும்; தி.மு.க.,வுக்கும் உள்ள உறவு இதிலிருந்து அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது.இவ்வாறு, அத்தரப்பினர் கூறினர்.

நன்றி-தினமலர்

%d bloggers like this: