அ.தி.மு.க.வின் பொதுசெயலாளர் பதவி முதல் முதலமைச்சர் தேர்வு வரை… என்ன நடந்தது?

ன்று அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஒ.பன்னீர்செல்வம் தனது முதலைமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, சசிகலா முதலமைச்சர் பொறுப்பேற்று கொள்வதற்கும் முன்மொழிந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொது செயலாளருமான ஜெயலலிதா இறந்தார். அன்று இரவே அவசர அவசரமாக கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு தமிழகத்தின் முதல்வராக  ஒ.பன்னீர்செல்வத்துக்கு, ஆளுநர் வித்யாசாகர ராவ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றக்கொண்ட பின்னர் தான் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையை விட்டு வெளியே வந்தது. இந்த நிலையில், ‘சசிகலா தான் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும்’ என அ.தி.மு.க.,வின் மூத்த அமைச்சர்கள் பலர் கூறி வந்தனர். இந்தச் சூழலில் டிசம்பர் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஒரு மனதாக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியக்கப்பட்டார். அடுத்த நாள், மாலை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் மலர்வளையம் வைத்துவிட்டு உறுதிமொழி எடுத்துகொண்டார் சசிகலா. அதன்பின்னர், 31-ம் தேதி நண்பகல், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக, அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார்.

கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலாவும், முதலமைச்சராக பன்னீர்செல்வமும் செயல்பட்டு வந்த நிலையில், நாடாளுமன்ற துணைச் சபாநாயகர் தம்பிதுரை, செங்கோட்டையன், சைதை துரைசாமி உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் சசிகலா தான் முதலமைச்சராகவும் இருக்கவேண்டும் என்று கருத்து கூறி வந்தார்கள். இதனால் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல்கள் முளைக்கத் தொடங்கின. அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் பலர் அக்கட்சியை விட்டு வெளியேறவும் செய்தனர். அவர்களில் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதன் பிறகு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வின் சார்பில் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்று கோஷம் ஒலிக்கதொடங்கியது. ‘சின்னம்மா தமிழகத்தை ஆள வேண்டும்’ என்ற விளம்பர பேனர்களும் வைக்கப்பட்டன. இந்த நிலையில் நாடாளுமன்ற துணை சபாநாயகரான தம்பிதுரை கட்சியின் கழக பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஆகிய இந்த இரண்டு பொறுப்பும் ஒருவரிடமே இருக்கவேண்டும் என்றும் அதற்கு சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும்’ என்று அதிகார பூர்வ அறிக்கையை வெளியிட்டார். அந்த  அறிக்கையால், கட்சியில் நிறைய குழப்பங்களும், சண்டைச் சச்சரவுகளும் வரத் தொடங்கின.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு தின விழாவில் தமிழகத்தில் எந்த முதலமைச்சருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தது. அதாவது குடியரசு தினத்தில் தனது மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் கலந்துக்கொண்ட பன்னீர்செல்வம்  தேசியக் கொடியேற்றினார். வழக்கமாக, குடியரசுத் தின விழாவில் கவர்னர்தான் கொடியேற்றுவார். தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநர் என்பதால், அவர் மகாராஷ்டிரா மாநில குடியரசுத் தின விழாவில் இருந்ததால் ஒ.பன்னீர் செல்வதுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கானச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம், தமிழக மக்களிடையே ஒருவித நன்மதிப்பைப் பெறத்தொடங்கினார் பன்னீர்செல்வம். இது சசிகலாவின் குடும்பத்துக்கு தாங்கிக் கொள்ளமுடியாத கோபத்தை உண்டாக்கியது. இதன் விளைவாக 27 ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ களுடனான கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சசிகலா “அம்மாவின் பிறந்தநாளை நாம் வெகு சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்றும் உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தயங்காமல் சொல்லாலாம்” என்றும் கூறினார். மேலும், “அம்மா விட்டு சென்ற இந்தக் கழக பணிகளை நாம் சிறப்பான முறையில் வழிநடத்த வேண்டும்.” என்றார். இது மறைமுகமாக பன்னீர்செல்வத்துக்கு வைக்கப்பட்ட ‘செக்’ என்று அ.தி.மு.க. அலுவலகத்தில் செய்திகள் பரவியது. இதற்கு அடுத்தபடியாக சசிகலா தனது குடும்ப உறுப்பினர்களுடனும், ஜோசியருடனும் கலந்து பேசினார். அது தன்னை முதலமைச்சராக்கிக் கொள்ளவேண்டும்  என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் என அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களிடம் இருந்து செய்திகள் வந்தன. 

சசிகலா

சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் (4-2-17) கூட்டம் நடத்தப் போவதாக அழைப்பு விடுக்கப்பட்டு கூட்டம் நடந்தது. அதற்கு ‘சின்னம்மா தலைமையில் நாளை (5-2-17) நடக்கபோகும் கூட்டத்துக்கு அனைவரும் அவசியம் வரவேண்டும் என்றும் போயஸ் கார்டனிலிருந்து கட்சி அலுவலகம் வரை சசிகலாவை வரவேற்க ஒவ்வொரு நிர்வாகியும் ஆட்களை அழைத்து வரவேண்டும்’ என்று உத்தரவு விடப்பட்டிருந்தது. மேலும், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் மீட்டிங்கில் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டும் என்பதோடு மற்றோர் அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது. அதில் ‘உங்கள் தொகுதிகளுக்கு என்னென்ன தேவையோ? அதையெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு எடுத்து வரவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதனால் அனைத்து மாவட்டங்களிருந்த எம்.எல்.ஏக்களும் எதற்காக இதெல்லாம் கேட்கிறார்கள் என்கிற குழப்பத்துடனே வந்திருந்தனர். 

இந்த நிலையில் இன்று (5-2-17) காலை எண்ணூர் கப்பல் விபத்து பகுதிகளை முதல்வர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது பேசிய பன்னீர்செல்வம், ‘இன்னும் ஓரிரு தினங்களில் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்’ என்று சொன்னார். அப்போது பத்திரிகையாளர்கள் சசிகலா முதல்வராக பதவி ஏற்க முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வருகிறதே என்று கேட்க. அதற்கு பன்னீர்செல்வம் புன்சிரிப்பை மட்டும் பதிலாக தந்து இடத்தை காலி செய்தார். அதன் பின், சுமார் மதியம் ஒரு மணியளவில், நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் அ.தி.மு.க வின் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலாவை ஏக மனதாக ஏற்றுக்கொள்கிறோம் என்று பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்து வாங்கப்பட்டது. சரியாக இரண்டரை மணியளவில் அனைவரிடமும் கையெழுத்து வாங்கி முடிக்கப்பட்டது. அதன்பின் மூன்று மணியளவில் பன்னீர்செல்வம், “தமிழக முதலமைச்சரான ஒ.பன்னீர்செல்வம் ஆகிய நான் சட்டமன்ற குழுத் தலைவராக சின்னம்மா பதவி ஏற்பதை வழிமொழிகிறேன். மேலும் தற்போது நான் வகித்துவரும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்றும் இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்பிக்கபோவதாகவும்” கூறினார். 

உடனே கரவொலியில் அதிர்ந்த கட்சி அலுவலகம் இதை நாங்கள் ஒரு மனதாக வரவேற்கிறோம் என்று கூறினார்கள். இந்தச் செய்தியானது அப்பொழுதே போயஸ்கார்டனுக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து சில நிமிடங்களில் கட்சி அலுவலகத்துக்கு விரைந்து வந்தார் சசிகலா. அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றார் பன்னீர்செல்வம். பின் கூட்டத்தில் பேசிய சசிகலா “ஒரு மனதாக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா இறந்த உடனே பன்னீர்செல்வம் என்னை முதல்வராக பொறுப்பேற்று கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால் அப்போதைய மனநிலையில் நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். அதன்பின் அனைவருமே என்னை முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று கூறினார்கள். அதனால்தான் தற்போது முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள முன்வந்தேன். மேலும் அம்மாவின் வழியை நாம் பின்பற்றி கட்சியினை வழிநடத்த வேண்டும். நாம் அனைவரும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் சசிகலா. 

%d bloggers like this: