நிதிநிலை அறிக்கையில் பிராட்பேண்ட் இணைப்பு

இந்தியாவிற்கான வர இருக்கும் நிதி நிலை அறிக்கையில், பிராட்பேண்ட் இணைப்பிற்கான சலுகைகள் அதிகம் இருக்க வேண்டும் என, இந்தப் பிரிவைக் கண்காணித்து வரும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் மார்ச் மாதத்தில், இந்தியாவில், 25% நகர மக்களும், 4% கிராம மக்களுமே பிராட்பேண்ட் இணைய இணைப்பினைக் கொண்டிருப்பார்கள். பிராட்பேண்ட் இணைப்பு பெற்ற பயனாளர்களில், 75% பேர் நகரங்களில் வசிக்கின்றனர். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், 4.1% பங்கு, பிராட்பேண்ட் இணைய இணைப்பினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில், அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி, இதன் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 29 லட்சம் சதுர மீட்டரில் வாழும் 130 கோடி மக்களை இணைக்க, பிராட்பேண்ட் இணைப்பு அவசியம் என்பதுவும் உறுதியாகிறது.

பிராட்பேண்ட் இணைய இணைப்பில் முதல் இடம் பெறும் விஷயம், அதற்கான கட்டணமும், சாதனங்களின் விலையும் ஆகும். தற்போது இணைப்பிற்கான சேவைக் கட்டணத்தில் 15% சேவை வரி மற்றும் சில வரிகளைப் பயனாளர்கள் செலுத்த வேண்டியதுள்ளது. இதனைப் பெரும் அளவில் குறைக்க வேண்டும். வர இருக்கும் ஜி.எஸ்.டி. வரி மாற்ற முறையில், சேவைக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அரசு இந்தப் பிரிவில் கவனம் செலுத்த வேண்டும்.
2016 ஆம் ஆண்டு முடிவில், இந்தியாவில், இணைய இணைப்பு பெற்றவர்கள் 47.7 கோடி பேர். இவர்களில், பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் 19.2 கோடி பேர். இவர்களில், வயர் வழி இல்லாத பிராட்பேண்ட் இணைப்பு பெற்றவர்கள் 17.4 கோடி பேர். 1.8 கோடி பேர் வயர் வழி இணைப்பு பெற்றவர்கள். 2018-~19ல், இந்திய மக்களில் 35% பேர் பிராட்பேண்ட் இணைப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல், 53% பேர் இணைப்பினைப் பெற்றிருப்பார்கள். அப்போது, பிராட்பேண்ட் இணைப்பு பெற்ற, கிராமத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கை, நகரத்து பயனாளர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கினை ஈட்டிட, கிராமப்புற மக்களிடையே, இணையம் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு குறித்த கல்வியறிவினை ஏற்படுத்தும் முயற்சிகள் பெரும் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான செலவினங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளை மேற்கொள்ளும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும்.
தற்போது, தொலை தொடர்பு நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்படுவதில்லை. இதனைக் கொண்டிருக்கும் வருமானவரிச் சட்டத்தின் 35(2AB) பிரிவினை இந்நிறுவனங்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.
தொலைதூரக் கிராமப்புறங்களில் இயங்கும் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் குழுக்கள், மக்களுக்கு இணையம் குறித்த கல்வியறிவினைப் பரப்ப மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்கையில் அரசு அவற்றை அறிந்தேற்பு செய்து, சலுகைகள் அளிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, அமெரிக்காவில் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் தொலை தொடர்பு சாதனப் பயன்பாட்டில், பெரும் அளவில் சலுகைகள் தரப்படுகின்றன.
ஏற்கனவே, இந்திய அரசு, கிராமப்புறங்களில், குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தரும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்குப் பல சலுகைகள் அளித்தது. அதே போல, கிராமப் புற இணையக் கல்வியைப் பரப்புவோருக்கும் சலுகைகள் அளிக்கப்படலாம்.
தற்போது, ஜி.எஸ்.டி. எனப்படும் ‘பொருட்கள் மற்றும் சேவை வரி’ அமைப்பினை மாற்றி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், அனைத்துமே, டிஜிட்டல் வழிமுறையில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக நிறைவேற்ற, கிராமப் புற மக்களிடையே இணையப் பயன்பாடு பரவலாக இருக்க வேண்டும். எனவே, அரசு இணையம் மற்றும் பிராட்பேண்ட் பயன்பாட்டினை நாடெங்கும் மக்களிடையே கொண்டு செல்ல, இந்த நிதி நிலை அறிக்கையில் பல சலுகைகளைத் தர வேண்டும் என இந்தப் பிரிவில் செயல்படும் ஆர்வலர்களும் அலுவலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள், 100% மக்களை பிராட்பேண்ட் பயன்பாட்டிற்குக் கொண்டு வர, முதலீடு செய்வதில் முனைந்துள்ளன. இந்தியாவில், 60 ஆண்டுகளுக்கு முன்பு, அதன் பொருளாதார வளர்ச்சி முழுவதும் வேளாண்மையைச் சார்ந்து இருந்தது. தற்போது, சேவைப் பிரிவுகள், 62% பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. எனவே, சேவைப் பிரிவுகளுக்கு அடிப்படைக் கட்டமைப்பாய் இயங்கி வரும் பிராட்பேண்ட் செயல்பாட்டிற்கு, அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது. தேசிய பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து செயல்படுத்திட, பல்வேறு பிரிவு மக்களிடையே காணப்படும் சமுதாய, பொருளாதார இடவெளிகளை நிரப்பிட, அறிவுசார் பிரிவுகள் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் நம் நாட்டின் நிலையை வளப்படுத்தி வலிமையாக மாற்றிட, வரும் நிதி ஆண்டில், அரசு பெரும் அளவில் பிராட்பேண்ட் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

%d bloggers like this: