வீட்டுக் கடன்: சில அவசியங்கள்

வீட்டுக் கடன் வாங்கிதான் கனவு இல்லத்தை அடைகிறார்கள். சரி வீட்டுக் கடன் வாங்கத் தீர்மானித்துவிட்டோம். அதைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? நம்பிக்கையான வீட்டு வசதி நிறுவனம் அல்லது வங்கியைத் தேர்வுசெய்ய வேண்டும். அதற்குப் பிறகு வீட்டுக் கடன் வாங்குவதில் சில கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன.

வீட்டுக் கடன் பெறுவதற்குப் பொதுவான சூத்திரங்கள் எதுவும் இல்லை. ஒருவருக்கு நல்லதாக இருக்கக்கூடிய வீட்டுக் கடன் திட்டம் ஒன்று, மற்றொருவருக்குச் சரியில்லாமல் போகலாம். அதே போல, இன்னொருவர் சிறப்பாக இல்லை என்று நினைக்கக்கூடிய திட்டம் மற்றொருவருக்கு அற்புதமானதாக இருக்கலாம். எனவே உங்கள் வீட்டுத் தேவைக்கு எந்தத் திட்டம் சரியாகப் பொருந்தும் என்று முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.

வீட்டுத் தேவைகள், பணம் செலுத்துவதற்கு நமக்கு இருக்கும் ஆதாரம், எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை முடிவு செய்தபின், அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும். அதுதான் வீட்டுக் கடன் வசதி நிறுவனத்தைத் தேர்வு செய்யும் வழி. மிகமிக கவனத்துடனும், சரியான ஆலோசனை செய்தும் வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு வீட்டுவசதி நிறுவனம் அல்லது வங்கியுடன் நீண்ட காலத்துக்குத் தொடர்பு ஏற்படுத்தப் போகிறோம் என்றால் அதன் பழைய வரலாறு, நிறை, குறைகளைத் தீர ஆராய வேண்டும். முடிந்தால், ஏற்கனவே குறிப்பிட்ட நிறுவனத்தில் கடன் பெற்றவர்களுடன் பேசி, அந்நிறுவனத்தில் விதிமுறைகள் அமல்படுத்தப்படும் விதம் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

வீடு அல்லது மனை வாங்கப்போகிறோம் என்றால், ஒவ்வொருவரும் போகிறபோக்கில் இலவச ஆலோசனைகளை அள்ளி வீசி விட்டுச் செல்வார்கள். எனவே ஒவ்வொன்றையும் தெரியாதவர்களிடம் விசாரித்துக் களைத்துப் போவதற்குப் பதிலாக ரியல் எஸ்டேட் அல்லது வீட்டுக் கடன் பற்றி பேசும் நிபுணர்களுடன் கலந்து பேசுவது வீட்டுக் கடன் பற்றியும், ரியல் எஸ்டேட் பற்றியும் கலந்தாலோசிப்பது பரிச்சயத்தை ஏற்படுத்தும்.

சராசரி வருமானம் உள்ள ஒருவருக்கு வீடு கட்டத் தேவையான பெருந்தொகையைத் திரட்டுவது கடினமே. வீட்டுக் கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் அளிக்க முன்வந்தாலும், பெரும்பாலும் 80 சதவீத கடனையே நிறுவனங்கள் வழங்கும். எனவே எஞ்சிய 20 சதவீதத் தொகையை நாம் திரட்ட வேண்டும். அந்தத் தொகையைத் திரட்ட முடியும் என்பதை உறுதி செய்த பிறகு வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களை நாடலாம். இது தேவையற்ற கால விரயத்தைத் தடுக்கும்.

சொந்த வீடு என்பது வாழ்வில் ஒரு பாதுகாப்பான, நிம்மதியான உணர்வை அளிக்கிறது. அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டை அடைவது தன்னிறைவு பெற்றது போன்ற பெருமிதத்தைத் தருகிறது. இந்த நிம்மதியும் பெருமிதமும் வீடு கட்டிய பிறகும் தொடர வேண்டுமென்றால், சரியான வீட்டுக்கடன் நிறுவனத்தைத் தேர்வு செய்வதேயாகும்.

%d bloggers like this: