வீட்டு நாய் கடித்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?

தெரு நாய் கடித்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வீட்டு நாய் கடித்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தேவையில்லை என்கிறார் என் நண்பர். இது சரியா?

இது சரியில்லை.

உலகில் ‘மருந்தே இல்லை’ என்று சொல்வதற்கும் ஒரு நோய் இருக்கிறது என்றால், அது ‘ரேபீஸ்’ (Rabies) என்கிற வெறிநாய்க்கடி நோய்தான். இது நோயாகப் பரிணமித்துவிட்டால் மரணம் உறுதி. அதேநேரம், இதற்கான தடுப்பூசியை முறைப்படி போட்டுக்கொண்டால், 100 சதவீதம் இதை வரவிடாமல் தடுத்தும்விடலாம். இதுவும் உறுதிதான்.

தெரு நாய் கடித்துவிட்டால்?

தெரு நாய் கடித்துவிட்டால், அதற்கான ‘ARV’ எனும் ரேபீஸ் தடுப்பூசியைக் கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடித்த அன்றே இதைப் போடத் தொடங்கிவிட வேண்டும். நாய் கடித்த அன்று முதல் ஊசி, 3-வது நாள் 2-வது ஊசி, 7-வது நாள் 3-வது ஊசி, 14-வது நாள் 4-வது ஊசி, 28-வது நாள் 5-வது ஊசி என 5 தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும். காயம் கடுமையாக இருந்தால், 6-வது ஊசியை 90-வது நாளில் போட்டுக்கொள்ளலாம். இதற்கு அதிகம் செலவாகும் என்று நினைக்க வேண்டாம். இந்தத் தடுப்பூசி எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவே போடப்படுகிறது.

முடிந்தவரை காயத்துக்குக் கட்டு போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடுமளவுக்கு காயம் மிகப் பெரிதாக இருக்குமானால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் ‘ரேபீஸ் தடுப்புப் புரதம்’ (Rabies immunoglobulin) எனும் ஊசியைப் போட வேண்டியதும் முக்கியம்.

வீட்டு நாய் கடித்துவிட்டால்?

வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால்கூட, அந்த நாயால் கடிபட்டவர் ரேபீஸ் தடுப்பூசியைப் போடத் தொடங்கிவிட வேண்டும். நாய் கடித்த அன்று முதல் ஊசி, 3-வது நாள் 2-வது ஊசி, 7-வது நாள் 3-வது ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எவ்வித மாறுதலும் தெரியவில்லை என்றால், இந்த மூன்று தடுப்பூசிகளுடன் நிறுத்திக் கொள்ளலாம். நாயிடம் வெறிநாய்க்கு உரிய மாறுதல்கள் தெரிந்தால், 14-வது நாள் 4-வது ஊசி, 28-வது நாள் 5-வது ஊசி ஆகியவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி

நாய் கடிப்பதற்கான சாத்தியம் சிலருக்கு அதிகம். குழந்தைகள், தெருநாய்கள் கட்டுப்பாடின்றி அலையும் தெருக்களில் வசிப்பவர்கள் மற்றும் அவ்வாறான ஊர்களுக்கு அடிக்கடி பயணம் செய்பவர்கள், இரவுப் பணி முடிந்து இருசக்கர வாகனங்களில் வீடு திரும்புவோர், கால்நடை மருத்துவர்கள், கால்நடைப் பணியாளர்கள், நாய் வளர்ப்போர், நாய் பிடிப்போர், நாயைப் பழக்குவோர், அஞ்சல் பணியாளர்கள், காவல்துறைப் பணியாளர்கள், ரத்தப் பரிசோதனைக்கூடப் பணியாளர்கள், ரேபீஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள், ரேபீஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர், ரேபீஸ் நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், இறந்த விலங்கு களைப் பதப்படுத்துவோர், வனத் துறையினர், விலங்குக் காட்சி சாலையில் பணிபுரிவோர் ஆகியோர் முன்னெச் சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது.

இவர்கள் ரேபீஸ் தடுப்பூசியின் முதல் ஊசியை ஆரம்ப நாளில் போட்டுக்கொண்டு, 2-வது ஊசியை 7-வது நாளிலும், 3-வது ஊசியை 28-வது நாளிலும் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஊக்குவிப்பு ஊசி’யாக (Booster dose) இத்தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் நாய் கடித்துவிட்டால், இப்படிச் செய்ய வேண்டும்: நாய்க்கடிக் காயத்தை நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு, நாய்க் கடித்த நாளில் ஒரு தடுப்பூசியும், 3-வது நாளில் ஒரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.

%d bloggers like this: