தடுப்பூசி

எந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்?
எய்ட்ஸ் நோய் உள்ள குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவும், எதிர்ப்பு சக்தி உருவாகாமலும் இருக்கும். நோய்த் தொற்றும், எளிதில் தொற்றிவிடும்.

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, என்னென்ன தடுப்பூசிகள் போடலாம்?
பி.சி.ஜி., மற்றும் போலியோ சொட்டு மருந்து தவிர, காசநோய், நிமோனியா, ப்ளூ காய்ச்சல், அம்மைத் தடுப்பூசி, ஹெபடைட்டிஸ் – ஏ மற்றும் பி வைரஸ் மூளைக்காய்ச்சல் போன்ற தடுப்பூசிகள் போடலாம்.

புற்றுநோய் உள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி?
எல்லா வகையான தடுப்பூசிகளையும் போடலாம். சிகிச்சைக்குப் பின், வீரியம் குறைந்த தடுப்பூசிகளை போடலாம்.

ஹீமோபீலியா எனும் ரத்தம் உறையாமை நோய் பாதிப்புள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி?
வழக்கமாக ரத்த உறைவுக்காக மருந்துகளை எடுத்துக் கொண்ட உடனே, தசை வழித் தடுப்பூசி களை மட்டுமே போட வேண்டும். பிரத்யேக ஊசி கொண்டே மருந்துகளை ஏற்ற வேண்டும்.

எடை குறைந்த, குறை பிரசவ குழந்தைகளுக்கு என்னென்ன தடுப்பூசிகள் உள்ளன?
2 கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட குழந்தைகளுக்கு, ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசியை ஒரு மாதம் கழித்து, போட்டுக் கொள்ளலாம். மற்றபடி எல்லா தடுப்பூசிகளையும் போடலாம். ஹெபடைட்டிஸ் – பி வைரஸ் பாதிப்புள்ள கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தைக்கு,

பிறந்த உடனே இதற்கான தடுப்பூசி போட வேண்டுமா?
குழந்தையின் எடை, இரண்டு கிலோவுக்கும் குறைவாக இருந்தால், 12 மணி நேரத்துக்குள், ஹெபடைட்டிஸ் – பி வைரஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின் போது, என்னென்ன தடுப்பூசிகளை தவிர்க்க வேண்டும்?
அம்மைத் தடுப்பூசி, தட்டம்மைத் தடுப்பூசி, சின்னம்மைத் தடுப்பூசிகளை போடக் கூடாது. கர்ப்பத்தின் போது, வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு, ஹெபடைட்டிஸ் – பி வைரஸ் மற்றும் இன்ப்ளூயென்சா தடுப்பூசிகள் போட வேண்டும்.

நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு, எவ்வகையான தடுப்பூசிகள் அவசியம்?
சிறுநீரக வகை நோய்கள், இதய நோய்கள், நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு பாதிப்புள்ள குழந்தைகளுக்கு, எல்லா வகை நோய்த் தொற்றுகளும் தொற்றிவிடும் என்பதால், சில தடுப்பூசிகளை சற்று கூடுதலாக போட வேண்டும்.

உறுப்பு மாற்று சிகிச்சை பெறும் குழந்தைக்கான தடுப்பூசிகள் குறித்து?
உறுப்பு மாற்று சிகிச்சை துவங்குவதற்கு, 15 நாட்களுக்கு முன், எல்லா வகை நுண்ணுயிர்த் தடுப்பூசிகளையும் போட்டு விட வேண்டும். சிகிச்சைக்குப் பின் தடுப்பூசிகளை போடக்கூடாது.

தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்படுமா?
சிலருக்கு ஒவ்வாமை வரலாம். முதன் முறை தடுப்பூசி போடும் போது, ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு, தடிப்பு, வாந்தி மூச்சுத் திணறல், மயக்கம், வலிப்பு போன்ற பக்கவிளைவுகள்ஏற்பட்டிருந்தால், மீண்டும் தடுப்பூசிகளை போடக்கூடாது.

மா. வெங்கடேசன்

குழந்தைகள் நல
அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை.

%d bloggers like this: