Advertisements

பட்ஜெட் 2017 தனிநபர் வருமான வரி… யாருக்கு என்ன லாபம்?

த்திய பட்ஜெட் 2017-18-ல் அடிப்படை வருமான வரம்பு குறைந்தபட்சம் 50,000 ரூபாயாவது அதிகரிக்கப்படும்; வரிச் சலுக்கைக்கான முதலீட்டு வரம்பு குறைந்தபட்சம் 50,000 ரூபாயாவது உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக மத்திய பட்ஜெட் வந்திருக்கிறது.
அதேசமயம், சில வரிச் சலுகைகளை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருக்கிறார்.  அடிப்படை வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக நீடிக்கிறது. ஆனால், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி 10 சதவிகிதமாக இருந்ததை 5 சதவிகிதமாகக் குறைத்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் லட்சக்கணக்கான மாதச் சம்பளக்காரர்கள் பயன்பெறுவார்கள்.
வரி விகிதம் குறைப்பு


மேலும், ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டும் தனிநபர் வருமான வரித் தாக்கல் எளிமையாக்கப் பட்டுள்ளது. அதற்கான படிவம் ஒரே பக்கம் கொண்டதாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.

இந்த பட்ஜெட்டில் குறைவாகச் சம்பாதிப்பவர் களுக்கு வரியைக் குறைத்திருக்கும் மத்திய அரசு, உயர் வருமானப் பிரிவினருக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி  வரை வருமானம் உள்ளவர்களுக்கு வழக்கமான வருமான வரியுடன் 10% கூடுதல் வரி (சர் சார்ஜ்) விதிக்கப்படுகிறது. ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு 15% கூடுதல் வரி விதிக்கப்படும்.
தனி நபர் வருமான வரி 5% குறைக்கப்படுவதால்,  மத்திய அரசுக்கு 15,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.  இதனை ஈடு செய்ய  உயர் வருவாய் பிரிவினர் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. 
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரி 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளதால், அனைவருக்கும் ரூ.12,500 வருமான வரி மிச்சமாகி இருக்கிறது.
குறைந்த வருமானப் பிரிவினருக்கும் இந்த வரி குறைக்கப்பட்டாலும், அடிப்படை வரம்பு அதிகரிக்கப்படாததால், அவர்களுக்கு அதிக லாபம் இல்லாமல் இருக்கிறது. அது எப்படி என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

எவ்வளவு வருமானம்… என்ன சலுகை..?
கடந்த நிதி ஆண்டில் (2016-17), ரூ.2.5 லட்சம்  என்பது அடிப்படை வருமான வரம்பாக இருந்தது. வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு வருமான வரியில் ரூ.5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்த ரூ.5,000 வரிச் சேமிப்பு என்பது 10% வரி வரம்பில் ரூ.50,000 முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வரிச் சலுகையாகும்.

இதன்படி பார்த்தால், வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.3 லட்சம் வரை வரி இல்லாமல் இருந்தது.   
2017 -18-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5,000 வரித் தள்ளுபடி என்பது ரூ.2,500ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2017-18-ம் ஆண்டிலும் ரூ.3 லட்சம்  வரை வரிக்கு உட்பட்டவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டி இருக்காது.
மேலும், இந்தச் சலுகையைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சம் ரூபாயிலிருந்து 3.5 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையினால் வரித் தள்ளுபடி பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம்  வரையில் வருமான வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளதால், ரூ.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள், 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சம்  முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு ரூ.25,000 ரூபாய் வரி கட்டிய நிலையில், 2017-18-ம் நிதி ஆண்டில் ரூ.12,500 வரி கட்டினால் போதும். இந்த ரூ.12,500 வரிச் சேமிப்பு என்பது ரூ.5 லட்சத்துக்கு மேல் வரிக்கு உட்பட்ட வருமானம்கொண்ட அனைவருக்கும் கிடைக்கும்.

ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி ரூ.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம் கிடைக்கும் ரூ.12,500 வரிச் சலுகை என்பது, 1,25,000 ரூபாயை முதலீடு செய்து கிடைக்கும் தொகைக்கு இணையானது என்பதால், இதை நடுத்தர வர்க்கத்தினருக்கு நன்மை செய்யக் கூடிய விஷயமாகவே கருதலாம். அதாவது, செலவு செய்யக் கூடுதல் தொகை கிடைத்திருப்பதை நினைத்து மத்தியதர வர்க்கத்தினர் தாராளமாக மகிழ்ச்சி அடையலாம்.
என்.பி.எஸ் முதலீட்டுக்கு சலுகை
அதிகம் பேர் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்.பி.எஸ்) மூலம் முதலீடு செய்யவேண்டும் என்பதற்காக இந்த பட்ஜெட்டில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.பி.எஸ் முதலீட்டில், அவசரத் தேவைக்காக ஓய்வுக்காலத்துக்குமுன் 25 சதவிகிதத் தொகையை எடுத்துக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. இப்படி எடுக்கும் தொகைக்கு வருமான வரி எதுவும் கிடையாது என்பது முக்கியமான விஷயம்!

Advertisements
%d bloggers like this: