Advertisements

என்ன செய்யப் போகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ – திகில் கிளப்பும் டெல்லி மூவ்

சட்டசபைக் குழுத் தலைவராக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. ‘எம்.எல்.ஏக்கள் தொகுதிக்குள் செல்லும் வரையில் ஆளுநர் எந்த உத்தரவும் பிறப்பிக்க வாய்ப்பில்லை. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில்.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அடுத்து, பெங்களூருவுக்குப் பயணப்பட இருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. புதிய துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

இதை எதிர்த்து அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கருப்பசாமி பாண்டியன். “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்தே நீக்கப்பட்ட தினகரனுக்கு மீண்டும் பதவியை வழங்கியதில் நிர்வாகிகள் பலருக்கு விருப்பமில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் பலரும் பன்னீர்செல்வம் ஆதரவு மனநிலையில் உள்ளனர். அவர்களை ஓ.பி.எஸ் பக்கம் முழுமையாகக் கொண்டு வருவதற்கான வேலைகளும் வேகமெடுத்து வருகின்றன” என விவரித்த பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர்,

“கூவத்தூர், கோல்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவரால் கொண்டு வரப்பட்ட குண்டர்கள்தான் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இவர்களைத் தாண்டி வெளியே செல்வது என்பது சாத்தியமில்லாதது. ‘எடப்பாடியை ஆளுநர் அழைப்பார்’ என நம்பிய சசிகலா உறவினர்களும் ஏமாந்துவிட்டனர். எம்.எல்.ஏக்களின் நிலை குறித்துத்தான் எடப்பாடியிடம் விசாரித்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். நேற்று ஆளுநரிடம் மனு கொடுத்தபோது எந்த வாக்குறுதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. சில நிமிடங்களில் சந்திப்பு முடிந்துவிட்டது. ஆளுநரின் நடவடிக்கைகளையும் அதிர்ச்சியோடு கவனித்தார் பழனிச்சாமி. ‘நம்மை அழைப்பதற்கு வாய்ப்பு குறைவுதான்’ எனத் தெரிந்த பிறகே, ரிசார்ட்டில் ஐந்து நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. ‘நாம் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை. நமக்குத் துரோகம் செய்த பன்னீர்செல்வம் ஜெயித்துவிடக் கூடாது’ எனக் கோபத்தைக் காட்டியிருக்கிறார் சசிகலா.

‘அவர்கள் பக்கம் 119 எம்.எல்.ஏக்கள் வரையில் ஆதரவு மனநிலையில் உள்ளனர்’ எனச் சொல்கின்றனர். அவர்களில் 80 சதவீதம் பேர் ஓ.பி.எஸ் பக்கம் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கான வாய்ப்பை உருவாக்கும்விதமாகவே, எம்.எல்.ஏ சரவணன் கொடுத்த ஆள்கடத்தல் புகாரின் அடிப்படையில் சசிகலா மற்றும் எடப்பாடி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கும் முடிவில் இருக்கிறார் ஆளுநர். ‘ஆட்சி பறிபோய்விடக் கூடாது’ என்ற எண்ணத்தில், எம்.எல்.ஏக்களும் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ் தோற்றுவிட்டால், 356 என்ற ஆட்சிக் கலைப்பு அஸ்திரத்தை ஆளுநர் பயன்படுத்துவார். எடப்பாடியை அழைக்கும் முடிவில் ஆளுநர் இருந்திருந்தால், இப்படியொரு வழக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எம்.எல்.ஏக்கள் அனைவரும் தொகுதிக்குச் செல்லும் வரையில் ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்பில்லை” என்றார் உறுதியாக.

“பன்னீர்செல்வத்தின் கரங்களை வலுப்படுத்துவதுதான் பா.ஜ.கவின் முக்கியப் பணியாக இருக்கிறது. அதையொட்டியே அனைத்துப் பணிகளும் வேகமெடுத்து வருகின்றன. ஆட்சிக் கலைத்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக ஆலோசித்து வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். ‘பன்னீர்செல்வம் தோற்றுவிட்டாலும், தேர்தல் வரும்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மத்தை முன்வைத்தே வெற்றி பெற்றுவிடலாம். அனுதாப அலை வெற்றியைக் கொடுக்கும்’ எனவும் பேசி வருகின்றனர். எந்தப் பிரச்னை வந்தாலும் சசிகலா ஆதரவு மனநிலையில் முப்பது எம்.எல்.ஏக்கள் வரையில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பன்னீர்செல்வம் பக்கம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. கடைசி நிமிடம் வரையில் எம்.எல்.ஏக்களை வளைப்பது முக்கிய அசைன்மெண்டாக இருக்கிறது. அப்படி நடக்காதபட்சத்தில் ஆட்சிக் கலைப்பைத் தவிர்க்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது எந்தக் காலத்திலும் நடக்காத ஒன்று” என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

‘முதல்வர் பன்னீர்செல்வம் அல்லது 356’ என இரண்டில் ஒரு விரலைத் தொடும் ஆட்டத்தைக் கனகச்சிதமாக நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ‘மாநில சுயாட்சி முழக்கங்கள் எங்கே போனது?’ என ஜனநாயகக் குரல் எழுப்புகின்றவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாகவே இருக்கிறது. அகில இந்திய அளவில் எந்த ஆதரவும் இல்லாமல் தவிக்கவிடப்பட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: