நீங்கள் அலுவலகத்தில் ராக்ஸ்டார் ஆக 5 டிப்ஸ்!

ம்மில் பெரும்பாலானோர் அனுதின இயந்திர வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு அன்பு, நட்பு, உத்வேகம் போன்ற நம் வாழ்க்கையின் அடிப்படை காரணிகளை இழந்து ஓர் இயந்திரம் போல் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

பள்ளிப் பருவத்திலும், கல்லூரி வாழ்க்கையிலும் துள்ளித் திரிந்து வாழ்க்கையை மகிழ்வோடு மட்டுமே எதிர்கொண்ட நாம், வேலையில் சேர்ந்தபின் ஓர் இயந்திர மனிதன் போல் மாறிவிடுகின்றோம். வேலையில் மட்டுமல்ல, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும், உறவுகளிலும் இதன் பாதிப்பு தெரியும் வண்ணமே ஆகிவிடுகிறோம். ‘எங்கு இந்த மாற்றம் ஆரம்பிக்கின்றது.. அது எப்படி நம்மை முழுவதுமாக மாற்றிவிட்டது’ என்று அறியாமல் “வேலையில் Job Satisfaction இல்லை ப்ரோ, ஆஃபீஸில் நிம்மதியே இல்லை” என்று விரக்தியாக புலம்பும் ஆள் நீங்கள் என்றால் இந்தக் கட்டுரையை படித்தப்பின் உங்களுக்கு ஒரு புதுத்தெளிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

1.உங்கள் பணியை போற்றுங்கள் :

மிகச்சிறப்பான பணியை செய்வதற்கு நீங்கள் பெரிய பதவியில் இருக்க வேண்டியதில்லை. மார்டின் லூதர் கிங் ஜூனியர் இப்படிக் கூறுவார்; “உங்கள் பணி தெருக்களை சுத்தம் செய்வது என்றால், மைக்கேல் ஆஞ்சலோ எவ்வாறு ஓவியம் தீட்டினாரோ, அல்லது பீத்தோவன் எவ்வாறு இசையமைத்தாரோ, அல்லது ஷேக்ஸ்பியர் எவ்வாறு கவிதை எழுதினாரோ, அதுபோல் தெருக்களை சுத்தம் செய்வதில் நீங்கள்தான் சிறந்தவர் என்பது போல பணியாற்ற வேண்டும்.” எனவே உங்கள் வேலை எதுவாக இருந்தாலும் அதில் உங்களின் பங்கு மிக அத்தியாவசியமானது என்று உணருங்கள்.

உங்களுடைய பணி, ஓர் உத்தரவைக் கேட்டு அதன்படி நடப்பது மட்டுமல்ல, உங்கள் செயல் பயனுள்ளதாக அமைந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதும்தான். இது பணியில் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

2.தன்னம்பிக்கையை தகர்க்கும் சந்தேகங்களை இனம் காணுங்கள் :

வேலையில் உங்கள் தன்னம்பிக்கை குறைவதற்கு முக்கிய காரணம், உங்கள் மேல் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள். உங்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் மனிதர்களை, இடங்களை, தீய பழக்கவழக்கங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து பட்டியலிடுங்கள். இவற்றிடம் இருந்து எவ்வாறு விடுபடுவது என்று சில வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் வகுத்து, அதனை ஒரு காகிதத்தில் எழுதி, காலையில் விழித்ததும் உங்கள் கண்ணில் படுமாறு ஒரு இடத்தில் ஒட்டிவிடுங்கள். நாள் முழுவதும் இது உங்களை Positiveஆக வைத்திருக்க உதவும். தயவு தாட்சண்யம் இன்றி உங்களை அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்வது அவசியம்.

3. பிரச்னைகளை எதிர்கொள்ளுங்கள்

பிரச்னைகளில் இருந்து விலகிப்போவதால் அவைகள் சிறிதளவும் குறையப் போவதில்லை. உங்கள் வாழ்வின் மிகப்பெரிய பிரச்சனைகளை எதிர்த்து நிற்க ஆரம்பித்த அடுத்த நொடியே, அதன் சுமையில் இருந்து நீங்கள் விடுபட்டுவிடுவீர்கள் என்பதை அறிவீர்களா? ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். உங்களின் வளர்ச்சிப்பாதையில் தடையாக உணரும் விஷயங்களை வேருடன் அகற்றுங்கள்.

4. முடியாது என்று கூறிப் பழகுங்கள் :

தேவை இல்லாத ஒரு விஷயத்துக்கு சரி என்று கூறும் ஒவ்வொரு முறையும் தேவையான ஒரு விஷயத்தை இழந்துகொண்டு இருக்கின்றீர்கள் என்பதை உணருங்கள். ஆதலால் முடியாது என்று கூறிப் பழகுங்கள். உதாரணத்திற்கு, ஒரு விஷயத்தை முடிக்க நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போது உற்ற நண்பன் ‘வாடா டீ சாப்டலாம்’ என்று அழைத்தால் ‘ நோ’ சொல்லுங்கள். அடுத்தநாள், நேரத்தில் வந்து ஒரு வேலையை செய்ய திட்டமெல்லாம் தீட்டியபின், இரவு சினிமாவுக்குப் போலாமா என்று கேட்கும் மனதுக்கு நோ சொல்லுங்கள். இந்த மாதிரி, தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் முடியாது என்று கூறும் ஒவ்வொரு முறையும் வெற்றிக்கான பாதையில் நீங்கள் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை உணருவீர்கள்.

5.வெளிப்படையாக இருங்கள் :

உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி உங்கள் குடும்பத்தினருடனும், உங்களுக்கு நெருக்கமானவர்களிடமும் வெளிப்படையாக பேசுங்கள். இதன் மூலம் நல்ல புரிதல் ஏற்பட்டு தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்கலாம். தாங்க முடியாத மன அழுத்தம் உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் தயக்கமின்றி நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.

“உங்கள் பணியில் ஒரு ராக் ஸ்டாராக இருங்கள், வேலை என்னும் மேடையேறி உங்கள் இதயத்திலிருந்து பாடல்களைப் பாடி உங்கள் பார்வையாளர்களை அசத்துங்கள்” என்று பிரபல வெற்றிப் பயிற்சியாளர் ராபின் ஷர்மா கூறுவார்.

ஆபீஸில் நம்மைச் சுற்றி பல சுவாரஸ்யமாக ஆட்கள் இருப்பார்கள். சொல்லப்போனால், வேலையைக் காதலித்துச் செய்பவர்களுக்கு பணியிடம் ஒரு சொர்க்கம்தான். இன்று முதல் நீங்களும் அப்படி ஒரு ராக் ஸ்டாராக மாற முயற்சியெடுங்கள்.

வாழ்த்துகள்!

%d bloggers like this: