சட்டமன்ற ரகளை: என்ன செய்யப் போகிறார் கவர்னர்?

மிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது, ஏற்பட்ட அமளி-துமளி சம்பவங்கள் குறித்து கவர்னர் என்ன முடிவெடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததும் தொடங்கிய அரசியல் சித்து விளையாட்டுகள் இப்போதும் முடிந்து விடவில்லை. இனிமேல்தான் மேலும் சூடுபிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. “நல்லா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி!” என்று கிராமத்துப் பக்கம் ஒரு பழமொழி உண்டு. அதன்படி, தமிழகத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு தொடர்ந்து நீடித்திருக்குமானால், ஒருவேளை சசிகலா பரப்பன அக்ரஹார சிறைக்குப் பதிலாக, இப்போதும் போயஸ்கார்டனிலேயே இருந்திருக்கக்கூடும்.

பிப்ரவரி 5-ம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அதற்கு அடுத்தநாளே அதாவது பிப்ரவரி 6-ம் தேதி, கர்நாடக அரசு வழக்கறிஞர், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என கேட்டு, உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு, ஆறிப்போய் இருந்த பிரச்னையை கிளறி விட்டார். இதுதான் தருணம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், கடந்த 14-ம் தேதி அன்று தீர்ப்பளித்தனர். ‘சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள்’ என்று தெரிவித்து, பரப்பன அக்ரஹார சிறைக்கு அனுப்பி வைத்து விட்டனர். ‘சிறைக்குப் போனாலும் அதிகாரம், எங்கள் கையில்தான் இருக்க வேண்டும்’ என்ற அடிப்படையில், எடப்பாடி பழனிசாமியை ஆட்சிக்கும், டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க-வுக்கும் காவலாக வைத்துவிட்டுச் சென்றுள்ளார் சசிகலா.

இந்த சூழ்நிலையில்தான், தமிழக சட்டசபையில், சனிக்கிழமை (பிப்ரவரி 18) அன்று எடப்பாடி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று, அமளியில் முடிந்தது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட ஒட்டுமொத்த தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் குண்டுகட்டாகத் தூக்கி வெளியே போட்டுவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினர். காங்கிரஸ் உறுப்பினர்களும், முஸ்லிம் லீக் உறுப்பினர் ஒருவரும் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் இருந்தது என்னவோ அ.தி.மு.க உறுப்பினர்களின் இரு அணிகள்தான். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிலர் தனி அணியாகச் செயல்பட்டாலும், அவர்கள சட்டசபை பதிவேட்டின்படி, அ.தி.மு.க உறுப்பினர்களே. அப்படி இருக்கும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையில் இல்லாத போது, அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை எப்படி நிறைவேற்ற முடியும்?

சட்டசபையில் நடைபெற்ற அமளிக்கு இடையே அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும், எதிராக ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்ததாகவும், நம்பிக்கை தீர்மானம் வெற்றிபெற்றதாகவும் சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார். பின்னர், சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில், அதுதொடர்பான அறிக்கை தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுஒருபுறமிருக்க, ஆளுநர் இந்த பிரச்னையில் என்ன முடிவெடுப்பார்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்தடுத்த நகர்வாக, சென்னையில் தங்கியிருக்கும் ஆளுநரை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள் நேரில் சந்தித்து, நேற்றைய சட்டசபை சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது. என்றாலும் ஆளுநருடனான தங்கள் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுநரைச் சந்தித்து, சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் தாக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சட்டசபையில் நடந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து, வாக்கெடுப்பு முடிவை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. தவிர, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் ஆளுநரைச் சந்தித்து, சட்டசபை ரகளை குறித்து விளக்கமாகக் கூறியுள்ளனர். அனைவரின் கருத்துகளையும் கேட்டுக் கொண்ட ஆளுநர், அவற்றை எல்லாம், விரிவான அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அடுத்தடுத்த நகர்வுகளைப் பார்க்கும் போது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த உத்தரவும் வெளியாகலாம் என்ற நிலைதான் உள்ளது. சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தால், எம்.எல்.ஏக்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் செய்ததன் மூலம் ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தி.மு.க உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆளுநர் முடிவெடுப்பதற்குள், தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு எதிராக கடுமையான முடிவெடிடுத்து விட்டார்கள்.

மாநிலம் முழுவதும் தங்கள் தொகுதிக்குள் எம்.எல்.ஏக்கள் நுழையக்கூடாது என்றும், சசிகலா ஆதரவுடன் ஆட்சி அமைவதற்கு சட்டசபையில் வாக்களித்தவர்களை தங்கள் தொகுதிக்குள் விட மாட்டோம் என்று தெரிவித்து ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகளும், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், தொகுதிப்பக்கமும், தங்கள் சொந்தஊர்களுக்கும் செல்லமுடியாமல் சசிகலா எம்.எல்.ஏக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசியல் அசாதாரண நிலை முற்றுப் பெற்று விட்டதாக கருதிவிட வேண்டாம். இனிமேல்தான் இன்றும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

%d bloggers like this: