பள்ளிகளில் கட்டாயப் பாடமாகிறது யோகா?!

‘யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்து 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்’ என்று சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினிகுமார் தொடுத்திருந்த பொதுநலன் வழக்கில்தான் மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகூர் தலைமையிலான நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றனர். யோகாவைப் பள்ளி மாணவர்களுக்குக்

கட்டாயப் பாடமாக்குவதன் அவசியம் பற்றியும், இந்தத் தீர்ப்பு பற்றியும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோக மீனாட்சியிடம் கேட்டோம்…
‘‘யோகாவை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்க ஓர் எண்ணம்தான். இதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் யோகாவைப் பற்றிக் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும்.
யோகா நமது உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் பாலமாக செயல்படுகிற ஒரு வாழும்கலை. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்கிற பழமொழியின்படி யோகப் பயிற்சிகளை சிறுவயதிலிருந்தே முறையாக கற்று பயிற்சி செய்து வந்தால், உடலும் மனதும் ஒருநிலைப்பட்டு, உடல் உள்ளுறுப்புகள் சீராக செயல்படும்.
இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு அறிவுத்திறனும் வளரும். கவனச்சிதறல்களை தடுத்து, மனம் ஒருநிலைப்பட்டு,மனதில்  நல்ல  சிந்தனைகள்  உருவாக  யோகா உதவும். பருவ வயதில் ஏற்படும் உடல் சார்ந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு, உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கும் மன உறுதியையும் யோகா கொடுக்கிறது.
பள்ளி மாணவர்களிடம் இருக்கும் தேவையற்ற பயங்களைப் போக்கி, அவர்களின் மனஉறுதி அதிகரிப்பதற்கும் யோகா தேவை’’ என்பவர், யோகா தரும் பலன்களை இன்னும் பட்டியலிடுகிறார். ‘‘நோய் வந்தால் உடலுக்கு மட்டுமே சிகிச்சை வழங்குவார்கள். அதேபோல உளவியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்கான கவுன்சிலிங் அல்லது மருந்துகள் மட்டுமே வழங்குவார்கள். ஆனால், யோகா என்பது உடல், மனம் சார்ந்த பிரச்னைகளை நீக்கி, அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.
மருந்துகள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு அவை உறுதுணையாக இருக்கிறது. நாடு, அரசியல், மதம், இனம், மொழி போன்ற பல்வேறு வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது யோகா. வயது வேறுபாடின்றி எல்லோருடைய ஆரோக்கியமான வாழ்வி–்ற்கும் அவசியமானது.
எனவே, யோகா என்பது அறிவியல் பூர்வமான மருத்துவ சிகிச்சை முறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய மாணவர் சமுதாயமே நமது தேசத்தின் நாளைய சொத்து என்பதால், யோகாவை பாடமாக சேர்ப்பதை வரவேற்கலாம். ஆனால், கட்டாயப் பாடம் என்று விருப்பம் இல்லாமல் ஒருவர் மீது திணிப்பது போல் ஆகிவிடக் கூடாது’’ என்கிறார் யோக மீனாட்சி.

நன்றி குங்குமம் டாக்டர்

%d bloggers like this: