காது மூக்கு தொண்டை மூன்றுக்கும் ஏன் ஒரே மருத்துவர்?

மருத்துவத்தின் அபார வளர்ச்சி நிச்சயம் பிரமிக்கத்தக்கதுதான்!முன்பு எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே மருத்துவரைப் பார்த்து வந்தோம். அதன் பிறகு நீரிழிவுக்கான மருத்துவர், புற்றுநோய்க்கான மருத்துவர் என்று பிரத்யேக மருத்துவர்கள் உருவானார்கள்.அதன்பிறகு வயதுக்கேற்றார்போல் குழந்தைகள் நல மருத்துவர்கள், முதியோர் நல மருத்துவர்கள் உருவானார்கள். (குழந்தைகள் நல மருத்துவத்திலேயே பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர் என்ற இன்னொரு உட்பிரிவும் உருவானது.)

இப்படி கண்களுக்கென மருத்துவர், சருமத்துக்கென மருத்துவர், தலைமுடிக்கென மருத்துவர் என்று பாதங்களுக்குக் கூட தனி மருத்துவர் என உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வோர் உறுப்புக்குமே ஒரு மருத்துவரும் வந்துவிட்டார். ஆனால், காது, மூக்கு, தொண்டை என்ற மூன்று உறுப்புக்கும் மட்டும் ஏன் ஒரே மருத்துவர்? அப்படி மூன்று உறுப்புக்கும் இருக்கும் சம்மந்தம் என்ன?
காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் இளம்பாரதி விளக்குகிறார்.‘‘நம் உடலின் ஒவ்வோர் உறுப்புமே மற்றோர் உறுப்புடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உடையவைதான். ஆனாலும் காது, மூக்கு, தொண்டை என்ற மூன்று உறுப்புகளும் மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவை. இவற்றை Series of complex networks என்று குறிப்பிடலாம்.கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் இந்த மூன்று உறுப்புகளையும் Eustachian என்கிற டியூப் இணைத்து வைத்திருக்கிறது. இதனால்தான் காதில் ஏற்படும் ஒரு தொற்று, மற்ற இரண்டு உறுப்புகளான மூக்கு, தொண்டையையும் பாதிக்கிறது. அதனால்தான் இந்த மூன்றையும் ஒரே பிரிவின் கீழ் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். சமீபகாலமாக மருத்துவத்தின் மாற்றத்தால் காது, மூக்கு, தொண்டை என்ற மூன்று உறுப்புகளுக்கும் தனித்தனி மருத்துவ படிப்பு, மருத்துவர்கள், மருத்து வமனைகள் வந்து கொண்டிருக்கின்றன’’ என்பவர் காது, மூக்கு தொண்டை தொடர்பான நோய்கள் பற்றிக் கூறுகிறார்.
‘‘நரம்புகள் சரியான வளர்ச்சி அடையாமல் இருப்பது, காது சிறியதாக இருப்பது, தொண்டையில் புண், வலி, தொண்டை மூக்கில் மூச்சு துவாரங்கள் சிறியதாக இருப்பது, இதனால் குரல்வளம் குறைந்திருப்பது, கட்டிகள், சதை வளர்வது, புற்றுநோய்க் கட்டிகள் இருப்பது ஆகியவை பிறவிலேயே வரக்கூடிய காது, மூக்கு, தொண்டை நோய்களாகும்.குறிப்பாக பிறக்கும்போதே குழந்தையின் செவிப்பறையில் ஓட்டை இருக்கும், இதனால் கேட்கும் திறன் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல், தவறான பழக்க வழக்கம், விபத்துகள், மற்றும் சளி, இருமல், தும்மல், போன்ற ஒவ்வாமையால் வரக்கூடிய நோய்கள், சப்தமாகப் பேசுவதாலும், பாடுவதாலும், ஆசிரியர்கள் மற்றும் குரல் வளத்தை மையமாக வைத்து இயங்கும் துறை சார்ந்தவர்களுக்கு குரல் வள பாதிப்பு நோய்கள் வரக்கூடும்.
தீராத காது வலி, சீழ் வடிதல், அழுக்கு, காது இரைச்சல், காது அரிப்பு, அடைப்பு, கேட்கும் திறன் குறைவு போன்ற பிரச்னைகள் காதில் வரும். மூக்கு வலி, அடிக்கடி சளித்தொந்தரவு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை மூக்கில் வரும். குரல் மாற்றம், பேசுவதில் சிரமம், திக்கிப் பேசுதல், தொண்டை வலி, குறட்டை, வாய்பிளந்து தூங்குதல் போன்றவைகள் தொண்டையில் நோய் ஏற்படுவதின் அறிகுறிகள் ஆகும்.’’
காது மூக்கு தொண்டை தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க எளிய வழிமுறைகள் என்ன?
‘‘ காது மூக்கு தொண்டை  சம்பந்தமான நோய்களை 90 சதவீதம் வரை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். காது சிறியதாக இருப்பது, செவிப்பறையில் ஓட்டை இருப்பது, தொண்டையிலும் மூக்கிலும் கட்டி, புற்றுநோய்க்கட்டி போன்ற நோய்களை அறுவை சிசிச்சை மூலமும், ரேடியோ தெரபி மூலமும் குணப்படுத்த முடியும்.இந்நோய்கள் வராமல் தடுக்க நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையில்லாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. அது குழந்தையின் உடல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும். சளி, இருமல், தும்மல் ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் ஏற்படும் காரணிகளை உணர்ந்து அவற்றை தவிர்க்க வேண்டும்.சளி தொந்தரவு வராமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீரை குடிப்பது உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது. சுற்றுபுறத்தைத்  தூய்மையாக வைத்துக்கொள்வது, வீட்டில் ஈரப்பதம் இல்லா வண்ணம் பார்த்துக்கொள்வது, வீட்டில் கரப்பான் பூச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்ற சின்னச் சின்ன விஷயங்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலமே காது, மூக்கு, தொண்டை சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.’’

நன்றி குங்குமம் டாக்டர்

%d bloggers like this: