சிறைக்கு முன்… மிரட்டி வாங்கப்பட்ட இரண்டு கையெழுத்துகள்!

‘‘இப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், இப்படித்தான் அவர் நிலைமை இருந்திருக்கும். அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் விசுவாசிகளின் இதயத்தை ரணமாக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கின்றன. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. அவர் உருவாக்கிய கட்சி, எப்படியெல்லாம் அவரை இந்தத் தருணத்தில் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும்! வரலாற்றிலேயே இல்லாத அசுர பலத்தோடு கட்சி இருக்கிறது. தனியாகத் தேர்தலில் நின்று, 37 எம்.பி தொகுதிகளில் ஜெயித்திருக்கிறது. ஐந்து ஆண்டு கால ஆட்சியை முடித்து, மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமான எம்.ஜிஆரை மட்டுமில்லை, சமீபத்தில்  மறைந்த ஜெயலலிதாவையும் மறந்துவிட்டார்கள்.

ஒரு குடும்பத்தின் கைக்குள் கட்சி போய்விட்டது. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் சிறைக்குள் போய்விட்டார். ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட தினகரன், ஒரே நாளில் கட்சிக்குள் சேர்க்கப்பட்டு, அடுத்த  நாளே துணைப்பொதுச்செயலாளர் ஆக்கப்படுகிறார். இதையெல்லாம் பார்த்து மனம் வெதும்பிப் போயிருக்கும் விசுவாசத் தொண்டர்கள், எம்.ஜி.ஆர் சமாதிக்கும் ஜெயலலிதா சமாதிக்குமாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது அத்தனை வழிபாடுகள் இங்கே நடந்தன! ஆனால், சசிகலா சிறைக்குக் கிளம்பியபோது போயஸ் கார்டன் வீட்டு வாசலில் தொண்டர்களே இல்லை! பதவிக்காக அடித்துக்கொள்பவர்கள், தொண்டர்களின் நிஜமான மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னார் கழுகார்.
‘‘சசிகலாவின் சத்தியம் ஈடேறிவிட்டதே?’’ என்ற கேள்வியோடு அவர் கவனத்தைத் திசை திருப்பினோம்.
‘‘ஆட்சியைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்பதில் சசிகலா ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தார். பல எம்.பி-க்கள் ஓ.பி.எஸ் பக்கம் படையெடுத்ததும் ஆடிப்போய்விட்டார் அவர். ‘இனி நாமே களத்தில் இறங்க வேண்டும்’ என்று முடிவு செய்துவிட்டுத்தான் கூவத்தூருக்குக் கிளம்பினார். எம்.எல்.ஏ-க்களிடம் கண்டிப்பும் உருக்கமுமாகப் பேசினார். ‘உங்களில் எத்தனை பேர் என் மூலமா எம்.எல்.ஏ சீட் வாங்கியிருப்பீங்கன்னு தெரியும். உங்களுக்கு இதுவரை நான் என்ன செய்யாமல் இருந்து இருக்கேன்? நம்ம ஆட்சி இருந்தாதான் இனியும் உங்களுக்கு எதுவும் செய்யமுடியும்’ என அவர் பேசியதில், அத்தனை எம்.எல்.ஏ-க்களும் உருகிவிட்டார்கள். தனித்தனியாகவும் எம்.எல்.ஏ-க்களிடம் பேசியுள்ளார். ‘பன்னீருக்கு நான் என்ன குறை வைத்தேன்? தி.மு.க பேச்சைக் கேட்டு இப்படிச் செய்துவிட்டார்’ என்று அவர்களை பன்னீருக்கு எதிராகத் திருப்பினார்…’’

‘‘தீர்ப்பு வந்தபோது சசிகலாவின் ரியாக்‌ஷன் என்னவாம்?’’
‘‘கூவத்தூரில் இருந்த சசிகலா… வெங்கடேஷ், தினகரனுடன்தான் முதலில் ஆலோசனை செய்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையில்தான் சிக்கல் எழுந்துள்ளது. ‘நம் குடும்பத்தினருக்கு இப்போது முதல்வர் பதவி வேண்டாம். அது நிலைமையைச் சிக்கலாக்கி விடும். எடப்பாடியை முதல்வராக்கிவிடலாம். பொதுச்செயலாளர் பதவி என்னிடமே இருக்கட்டும்’ என்று சசிகலா சொன்னதும், வெங்கடேஷ் மறுத்தாராம். ‘இனி யாரையும் நம்ப முடியாது. நம்ம குடும்பத்தில் இருந்து ஒருத்தரைத்தான் போடணும். நீங்களும் சிக்கலில் உள்ளீர்கள். பவர் நம் கையில் இல்லை என்றால் எங்கள் நிலை மோசமாகிவிடும்’ என்று அவர் எகிற, சசிகலா அதிர்ச்சி அடைந்தாராம். அமைதியான சுபாவம் கொண்ட தினகரனும் அன்று கொஞ்சம் காட்டமாகத்தான் பேசியுள்ளார். ‘நம்மால் வளர்த்து விடப்பட்டவங்கதான் நம்மை இப்போது காலி செய்யப் பார்க்கிறார்கள். இனி இன்னொருத்தரை நாமே வளர்த்துவிட்டு ஆபத்தைத் தேடிக் கொள்ளக்கூடாது. ஒன்று, ஆட்சியில் நாம் இருக்க வேண்டும்; அல்லது, கட்சியில் நாம் பவராக இருக்க வேண்டும். அதனால், இதில் ஏதாவது ஒன்றில் எங்களுக்குப் பதவி கொடுத்துவிட்டுத்தான் நீங்கள் பெங்களூரு செல்ல வேண்டும்’ என்று தினகரன் சொன்னதும், என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவிட்டார் சசிகலா.’’
‘‘பன்னீர் நிலைமைதான் சசிகலாவுக்கும் போல!”
‘‘அப்படித்தான் ஆகிவிட்டது. அதன்பிறகு ‘முதலில் உங்கள் இரண்டு பேரையும் கட்சிக்குள் சேர்த்துவிட்டு, அடுத்து பொறுப்புகளைப் பற்றிப் பேசலாம்’ என்று சமாதானப்படுத்திய சசிகலா, செங்கோட்டையனிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார். நீண்ட யோசனைக்குப் பிறகு செங்கோட்டையன், ‘துணைப்பொதுச்செயலாளர் பதவியை டி.டி.வி-யிடம் கொடுக்கலாம். கட்சியினர் மத்தியில் பெரிதாக எதிர்ப்புக் கிளம்பாது. ஆனால், ஆட்சியில் உங்கள் குடும்பத்தினர் இப்போது பங்கேற்க வேண்டாம். அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இப்படி சசிகலா மிரட்டப்பட்ட நிலையில்தான், தினகரனையும் வெங்கடேஷையும் கட்சியில் சேர்க்கும் கையெழுத்தையும், தினகரனை துணைப்பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கும் கையெழுத்தையும் போட்டுள்ளார். ஆனால் சசிகலா குடும்பத்தினர், ‘முதல்வர் பதவியை கூடிய விரைவிலே கைப்பற்றிவிடவேண்டும்’ என்று திட்டமிட்டுள்ளார்கள்.’’
‘‘சசிகலாதான் சிறை சென்றுவிட்டாரே?’’
‘‘சசிகலா இல்லை… தினகரனைத்தான் இப்போது குறித்துள்ளார்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தக் கையோடு, அடுத்த கட்டமாக தினகரனை தேனி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் களத்தில் இறக்க உள்ளார்கள். முதலில் எம்.எல்.ஏ, அடுத்து முதல்வர் என்ற திட்டமும் இப்போது முடிவாகியுள்ளதாம்.’’
‘‘ஓ.பி.எஸ் என்ன திட்டத்தில் உள்ளார்?’’

‘‘ஆட்சி நம் கையை விட்டுப் போய்விடாது என்றுதான் அவர் முழுமையாக நம்பினார். ஆனால், கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் கவனிக்கப்பட்ட விதம் இவர் காதுக்கு வந்ததுமே, ‘நம் பின்னால் இப்போது எம்.எல்.ஏ-க்கள் வருவது கடினம்தான். அதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும்’ என்று யூகித்துவிட்டார். ஆனால், கட்சி இருந்தால்தானே ஆட்சி நடத்தமுடியும்? ‘சின்னத்தையும், கட்சியையும் நாம் முடக்கிவிடலாம்’ என்று ஓ.பி.எஸ்-ஸிடம் ஆலோசனை சொல்லி, அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார்கள். அதன்பிறகுதான் மைத்ரேயன் டெல்லிக்குச் சென்று, தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனைச் செய்துள்ளார். ‘பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வானதே செல்லாது. முறையாகத் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று சொல்லியுள்ளார். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அ.தி.மு.க-வுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது!’’
‘‘சரி, வாக்கெடுப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?’’
‘‘ஓ.பி.எஸ் தரப்பில் இதுவரை பத்து எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். எடப்பாடி தரப்பினர், தங்களிடம் 124 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்கள். கூட்டணியில் நின்ற மூன்று பேரையும் சேர்த்துத்தான் கணக்கு காட்டியுள்ளார்கள். ஆனால் அ.தி.மு.க கூட்டணியில் நின்று, வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி யாருக்கு ஆதரவு என்பதை விளக்காமலே இருந்ததால் அவரை சசிகலாவே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தீர்ப்பு வந்த அன்று மதியம் பேசிய சசிகலா, ‘தம்பி, நாங்கள் எடப்பாடியை முதல்வரா தேர்ந்தெடுத்துள்ளோம். உங்கள் ஆதரவு வேண்டும்’ என்று சொன்னதும், ‘கட்சி உடையாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம்’ என்று சொல்லியிருக்கிறார் அன்சாரி. ‘நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால், என்ன செய்வது’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார் சசிகலா. அதன் பிறகு அன்சாரிக்கு, செங்கோட்டையன்தான் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.’’
‘‘இரண்டு அணிகளையும் ஒட்ட வைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டதாமே?’’
‘‘ஆமாம்! முன்னாள் டி.ஜி.பி-யும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வுமான நட்ராஜ், தீர்ப்பு வந்த அன்று தமிமுன் அன்சாரியைத் தொடர்பு கொண்டு, ‘இரண்டு தரப்பிலும் நீங்கள் பேசுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அன்சாரி உடனே மாஃபா பாண்டியராஜனிடம் பேசினார். இவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்போதே, பதவியேற்புக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததால், அந்தப் பேச்சுவார்த்தை நின்று போய்விட்டது.’’
‘‘ஓஹோ!’
‘‘அதன் பிறகுதான் நட்ராஜ், ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டார். ஓ.பி.எஸ் தரப்பு முக்கியப் புள்ளிகள், வெள்ளிக்கிழமை அன்று கூவத்தூரில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் சிலரைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். ‘எடப்பாடியை முதல்வராக்குவதும், சசிகலா குடும்பத்தினரை முதல்வராக்குவதற்கும் வித்தியாசம் இல்லை. நீங்கள் மீண்டும் அடிமை வாழ்க்கைதான் வாழவேண்டுமா?’ என்ற தொனியில் தூண்டில் போட்டுள்ளார்கள்’’ என்று சொல்லிவிட்டு கழுகார் பறந்தார்.
படங்கள்: சு.குமரேசன், அ.குரூஸ்தனம், தே.அசோக்குமார்


கவர்னரின் காரணம்!
ஆட்சி அமைக்க அழைப்பதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் செய்த தாமதம், ஒவ்வொருவரின் பிளட் பிரஷரையும் எகிற வைத்துக்கொண்டிருந்தது. ‘அந்த அளவுக்கு கவர்னர் தாமதம் செய்ததற்கு மத்திய அரசுதான் காரணம்… பிரதமர் மோடிதான் காரணம்… தமிழக பி.ஜே.பி-தான் காரணம்’ என்று பலரும் கருத்துச் சொன்னார்கள். இவை ஒருபக்கம் இருந்தாலும், வித்யாசாகர் ராவுக்கு இதில் தனிப்பட்டக் காரணமும் இருக்கிறது. 1998-1999 காலகட்டத்தில், 13 மாதங்களில் வாஜ்பாய் அரசாங்கத்தைக் கவிழ்த்தார் ஜெயலலிதா. அப்போது, பி.ஜே.பி சார்பில், ஆந்திராவின் கரீம்நகர் தொகுதியில் ஜெயித்து எம்.பி-யாகி இருந்தார், வித்யாசாகர் ராவ். ஜெயலலிதாவின் அந்த நடவடிக்கையை, பச்சைத் துரோகம் என்று  பி.ஜே.பி-க்காரர்கள் பச்சைத் துரோகம் என்றே வர்ணிப்பார்கள். அந்த நேரத்தில், மூத்த தலைவர்களின் வேதனையை அருகிலிருந்து பார்த்தவர், வித்யாசாகர் ராவ். அதனால் அவர் இந்த முறை அ.தி.மு.க-வுக்கு ஆட்டம் காண்பித்து வேடிக்கை காட்டினார்.

%d bloggers like this: