Advertisements

பணமற்ற சிகிச்சை?!

‘‘500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ‘பணமில்லா பரிவர்த்தனையை நோக்கிய பயணத்துக்கு நாட்டு மக்கள் தயாராக வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். மருத்துவத்துறையில் இதன் தாக்கம் எப்படியிருக்கும்? பொதுமக்கள் எந்த வகையில் தயாராக வேண்டும்? என்று சமூக

சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளரும், பொதுமருத்துவருமான ரவீந்திரநாத்திடம் கேட்டோம்…
‘‘நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர் ரூபாய் நோட்டுகள் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மீதமுள்ள 5 சதவீதத்தினரே டெபிட், கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற தொழில்நுட்ப வசதிகள் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
மொத்த மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் டிஜிட்டல் பணபரிமாற்றம் குறித்த புரிதல் இல்லாத பாமர மக்கள், மின்னணு தொழில்நுட்ப வசதிகளை சரியாக பயன்படுத்தத் தெரியாதவர்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாதவர்கள் மற்றும் இணைய வசதி சரியாக கிடைக்காதவர்களாக உள்ளனர்.
டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களைக் கையாள்வதில் ஏற்படும் பிரச்னைகளால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் பெரும்பாலும் பாமர மக்களே பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்த முறையில் அவர்களுடைய அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
இதுபோன்ற டிஜிட்டல் திட்டங்களை கிராமப்புறங்களில் அமல்படுத்தும்போது, அதற்கான வசதிகள் சரியாக இல்லாத மருந்தகங்கள், பரிசோதனை நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பண பரிவர்த்தனைகளில் அதிக அளவு சிரமங்கள் ஏற்படும். இதனால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் போக வாய்ப்பு உண்டு.
நாம் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் அதற்கான வரியையும் சேர்த்து கொடுத்துதான் வாங்குகிறோம். ஆனால் அந்த பொருட்களை கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக வாங்கும்போது, இந்த கார்டுகளின் நிறுவனங்களுக்கு தனியாக நாம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. டிஜிட்டல் பண பரிமாற்றம் என்ற பெயரி–்ல் பொதுமக்கள் மேலும் கூடுதலாக சுரண்டப்படுவார்கள்.
டிஜிட்டல் பண பரிமாற்றம் பற்றிய சரியான புரிதல் இல்லாத நோயாளிகள் மற்றவர்களிடம் உதவி கேட்கும்போது, அவர்களுடைய டெபிட், கிரெடிட் கார்டுகளின் பின்நம்பர்களை மற்றவர்களிடம் பறிமாறிக் கொள்ளும் அபாய நிலையும் ஏற்படுகிறது. தற்போது பல்வேறு நபர்களின் பின் நம்பர்கள் நூதன முறைகளில் திருடப்பட்டு, அவர்களுடைய பணம் திருடப்பட்ட செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இந்த சூழ்நிலையில் டிஜிட்டல் பண பரிமாற்றம் பற்றிய சரியான புரிதல் இல்லாத 70 சதவீதத்தினரிடம் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயப்படுத்தி திணிக்கும்போது, இதுபோன்ற நூதன திருட்டுகள் மேலும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.
இந்த சவால்களுக்கெல்லாம் அரசாங்கம் சரியான மாற்றுத் திட்டங்களையும், நோயாளிகளின் பணத்துக்கான பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு டிஜிட்டல் பணப்பரிமாற்றம் பற்றிய முறையான பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். பொதுமக்களும் காலமாற்றத்துக்கேற்ப தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளத் தயாராவதும் அவசியம்தான்’’ என்கிறார்.

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisements
%d bloggers like this: