Daily Archives: பிப்ரவரி 23rd, 2017

சிவம் தவம் தரிசனம்!

லியுகத்தில் இறைவனின் திருநாமத்தைச் சொல்லி வழிபடுவதும், ஆலயங்களுக்குச் சென்று இறை தரிசனம் செய்வதுடன், உரிய அறங்களைக் கடைப்பிடித்தலும் பெரும் தவமாகும் என்கின்றன புராணங்கள். அவ்வகையில், உயிர்களுக்கு ஞானம் அருளும் திருநாளும், பெளர்ணமியை அடுத்து வரும் 14-ம் நாளாகிய தேய்பிறை சதுர்த்தசியுமான மகா சிவராத்திரியன்று 14 சிவலிங்கங்களைத் தரிசிப்பது, கோடி மடங்கு புண்ணியம் தரும் என்கின்றன ஞானநூல்கள். நாமும் மகிமைமிகு சிவராத்திரியில் 14 சிவ மூர்த்தங்களைத் தரிசித்து மகிழ்வோம் வாருங்கள்…


நாகப்பட்டினம் ஸ்ரீகாயாரோகணேஸ்வரர்

நாகப்பட்டினத்தில் கோயில் கொண்டிருக்கிறார், ஸ்ரீகாயாரோகணேஸ்வரர். ஸ்வாமியின் திருப்பெயரைவிடவும், அம்பிகையின் திருப்பெயரால், ‘நீலாயதாக்ஷி திருக்கோயில்’ என்றே பிரசித்திப் பெற்றிருக்கிறது இந்த ஆலயம். சக்தி பீடங்களில் ஒன்றாகவும், சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகவும் திகழும் தலம் இது!


திருக்கோவிலூர் ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது அறையணி நல்லூர். இறைவன் -அதுல்யநாதேஸ்வரர்; அன்னை-அழகிய பொன்னம்மை. ரமணர், அண்ணாமலையின் மகத்துவத்தை உணர அருள் கிடைத்தது இங்குதான் என்பர். இங்கு ஸ்ரீரமணரின் விக்கிரகத்தையும் தரிசிக்கலாம்.


பெரியமணலி ஸ்ரீநாகேஸ்வரர்

ராசிபுரம்- திருச்செங்கோடு சாலையில் உள்ளது வையப்பமலை. இங்கிருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள பெரிய மணலியில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரரை, மகா சிவராத்திரியில் வழிபட, தாம்பத்ய வாழ்க்கைச் சிறக்கும்.


கருங்குளம் ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர்

தூ
த்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது கருங்குளம். இங்கு அருளும் இறைவன் –  மார்த்தாண்டேஸ்வரர். அம்பாள் – குலசேகரநாயகி. இக்கோயிலில், தம்பதி சமேதராகக் காட்சி தரும் நவகிரகங்களுக்குத் தீபமேற்றி வழிபட்டால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.


பாக்கம்  ஸ்ரீஆனந்தீஸ்வரர்

செ
ன்னை, சென்ட்ரல் – திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் உள்ளது திருநின்றவூர் ரயில் நிலையம். அங்கிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது பாக்கம் கிராமம். இங்கே, ஸ்ரீஆனந்தவல்லி சமேதராக அருளும் ஸ்ரீஆனந்தீஸ்வரரை, குபேர சம்பத்து அருளும் மூர்த்தி என்கிறார்கள் சிவனடியார்கள்!


காஞ்சி ஸ்ரீஓணகாந்தன்தளி சிவனார்

கா
ஞ்சிபுரத்தில் உள்ள 5 தேவாரத் தலங்களில் ஒன்று இது. வாணாசுரனின் சேனைத் தலைவர்களான ஓணன், காந்தன் ஆகிய இருவரும் வழிபட்ட திருத்தலம். இவ்விருவரும் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள், அடுத்தடுத்த சந்நிதிகளில் உள்ளன. சுந்தரர் பதிகம் பாடி, சிவனருளால் பொன் புளியங்காய்களைப் பெற்ற திருத்தலம் இது!


திருச்சி ஸ்ரீஉய்யக்கொண்டார்

திருச்சி – வயலூர் சாலையில், திருச்சிக்கு அருகிலேயே அமைந் துள்ளது உய்யக்கொண்டான் திருமலை. இத்தலத்தை, தேவாரம் பாடிய மூவரும் ‘கற்குடி’ என்றே போற்றுகின்றனர். இங்குள்ள இறைவன், இத்தலத்துக்கு மேற்கே வயலூரில் குடியிருக்கும் தன் மைந்தன் முருகனுக்கு அருள் பாலிக்கவே மேற்நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாராம்!


ஓமாம்புலியூர் ஸ்ரீதுயர்தீர்த்தநாதர்

டலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஓமாம் புலியூர். பூங்கொடி நாயகியுடன் துயர்தீர்த்த நாதர் அருளும் இத்தலம், இறைவன் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்குப் பிரணவ மந்திரத்தை விளக்கியதால் மகிமை பெற்றது.


திருச்சேறை ஸ்ரீசாரபரமேஸ்வரர்

சிவபெருமான் ஸ்ரீசாரபரமேஸ்வரர் எனும் திருப்பெயருடனும், திருமால் ஸ்ரீசாரநாதப் பெருமாள் எனும் திருப்பெயருடனும் அருளும் தலம், திருச்சேறை. இங்கே, சிவாலயத்தில் மூலவருக்கு நேர் பின்புறம், மேற்குத் திருச்சுற்றில் அமைந்துள்ள ருணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபட்டால், கடன் தொல்லைகள் தீரும்!


காஞ்சி ஸ்ரீமேற்றாளீஸ்வரர்

காஞ்சிபுரத்தில், பிள்ளையார்பாளையம் எனும் இடத்தில் உள்ளது திருக்கச்சி மேற்றளி. சிவசாரூப நிலை வேண்டி திருமால் தவமிருந்தத் தலம் இது என்பர். ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீமேற்றளீஸ்வரர். சம்பந்தர் பாடிய பதிகத்தைக்கேட்டு உருகியதால், `ஓத உருகீசர்’ என்றும் இவருக்குச் சிறப்புப் பெயர் உண்டு.


மணக்கால் ஐயம்பேட்டை ஸ்ரீபிரியநாதர்

திருவாரூர் – குடவாசல் மார்க்கத்தில், மணக்கால் எனும் ஊரை அடைந்து, அங்கிருந்து வடமேற்கில் சென்றால், இத்தலத்தை அடையலாம். கருவறையில் ஸ்ரீபிரியநாதர், சுயம்புவான சிவலிங்கத் திருமேனியராக அருள்வது விசேஷம். அம்பாள் – பாகம்பிரியாள். முருகனும், திருமாலும் வழிபட்ட அற்புதமான தலம் இது.


திருமால்பூர் ஸ்ரீமணிகண்டேஸ்வரர்

ம்பிகை அஞ்சனாட்சியுடன் அருள்மிகு மணிகண்டேஸ்வரர் அருளும் தலம் திருமால்பூர். காஞ்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில், சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. ‘இத்தலத்துக்கு வருபவர்களுக்கு முக்தி நிச்சயம். அவர்கள் புகழுடனும் ஐஸ்வரிய கடாட்சத்துடனும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்’ என்பது சிவவாக்கு!


குட்டையூர் ஸ்ரீமாதேஸ்வரர்

கோ
வையில் இருந்து மேட்டுப் பாளையம் செல்லும் பேருந்தில் சென்றால், வழியில் குட்டையூர் எனும் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இறங்கி சிறிது தூரம் நடந்தால், இந்தக் கோயிலை அடையலாம். பசு வழிபட்ட தலம். பிள்ளை வரம் வேண்டுவோர் இங்கு வந்து மாதேஸ்வரரைத் தரிசித்து, நந்திப் பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கின்றனர்.


திருவெண்ணெய்நல்லூர் ஸ்ரீஅருள்துறைநாதர்

விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் உள்ளது திருவெண்ணெய்நல்லூர். சுந்தரருடன் வழக்காடி சிவனார், அவரைத் தடுத்தாட்கொண்ட தலம். அம்பிகை இங்கு வெண்ணெய்யால் கோட்டை கட்டி பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்தாளாம்! மெய்கண்ட தேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலமும் இதுதான்.