Advertisements

பித்தப்பை கல்லை அகற்ற புதிய டெக்னிக்!

கல்லீரல் தினமும் அரை லிட்டர் பித்தநீரைச் (Bile) சுரக்கிறது. இது பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. அப்போது பித்தநீரின் அடர்த்தியை இது அதிகரிக்கிறது. சிலருக்கு பித்தநீரில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) ஒரு படிகம் போல் பித்தப்பையில் படியும். இது  சிறிது சிறிதாக வளர்ந்து, கல்லாக உருமாறும். எல்லோருக்கும் கல் உருவாகும் என்று சொல்லமுடியாது. அடுத்து வரும் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்

.
1. உடல் பருமன் 2. பரம்பரைக் கோளாறு. 3. கொழுப்பு உணவை அதிகம் உண்பது. 4. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகம் சுரக்கின்ற பெண்கள். 5. பித்தப்பையில் அடிக்கடி அழற்சி ஏற்படுவது. 6. பித்தப்பையில் அடைப்பு ஏற்பட்டு பித்த நீர் தேங்குவது. 7. கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது. 8. அடிக்கடி விரதம் இருப்பது. 9. கருத்தரித்தலில் பிரச்னை உள்ளவர்கள். 10. நாற்பது வயதைக் கடந்தவர்கள்.
“பித்தப்பையை நீக்கிவிட்டால் பித்தநீர் சுரக்காது. பிறகு உணவு சரியாகச் செரிமானம் ஆகாது” என்று பலபேர் தவறாக நினைத்து பித்தப்பையை நீக்குவதற்கு அஞ்சுகின்றனர். உண்மை என்னவென்றால், கல்லீரலில் மட்டுமே பித்தநீர் சுரக்கிறது. அது பித்தநீர்க் குழாய் மூலமாக முன்சிறுகுடலை வந்தடைகிறது. அதற்கு முன்பு அது பித்தப்பையில் தங்கிச் செல்கிறது. அவ்வளவுதான். பித்தப்பையை நீக்கியவர்களுக்குப் பித்தநீரானது நேரடியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேர்ந்துவிடும்.
இவர்களுக்கு உணவுச் செரிமானம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. பித்தநீருக்குக் கல்லீரல் என்பது பிறந்த வீடு. பித்தப்பை என்பது விருந்தினர் வீடு. விருந்தினர் வீடு இல்லாவிட்டாலும் இனிதாக வாழமுடியும் அல்லவா? அதுமாதிரிதான். பித்தப்பை இல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக வாழலாம். ஒரே ஒரு நிபந்தனை. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்புள்ள உணவுகளை மட்டும் குறைவாகச் சாப்பிட்டுக் கொண்டால் செரிமானத்தில் பிரச்னை வராது.
‘ஸ்பைகிளாஸ் கொலாஞ்சியோஸ்கோப்பி’ (SpyGlass cholangioscopy) என்பது எண்டோஸ்கோப்பியில் ஒரு வகை. சுமார் 9 மி.மீ. குறுக்களவுள்ள ஒரு நீண்ட குழாய் இது. பிவிசி ரப்பர் மின்குழாயில் பல மின்வயர்களை அடுக்கியிருப்பதைப்போல இதனுள், வெளிச்சம் செலுத்த, காட்சிகளைப் பிரதிபலிக்க, தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க, காற்றைச் செலுத்த, கட்டியை சாம்பிள் எடுக்க என்று அடுக்கடுக்கான வேலைகளைச் செய்ய பல வயர் அமைப்புகள் உள்ளன. கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இதை எண்டோஸ்கோப்பிஸ்ட் வெளியில் இருந்தபடியே இயக்குவார்;
நோயாளியின் வாய்வழியாக இதை உள்ளே அனுப்பி, கார் ஸ்டியரிங்கைத் திருப்புவதைப்போல, வெளியில் இருக்கும் சுவிட்சைத் திருப்பி, எப்படிச் செல்ல வேண்டும் என்று கட்டளை இடுவார். உணவுக் குழாயிலிருந்து முன்சிறுகுடல் வரை உள்ள பல வளைவுகளைக் கடந்து, பித்தக் குழாய் வழியாக பித்தப்பையை அடைந்ததும், மின்நீர்க் கதிர்களைச் (Electrohydraulic lithotripsy) செலுத்தி, அங்குள்ள கற்களை நொறுக்கி, உறிஞ்சி எடுத்துவிடுவார்கள். பித்தப்பையை அகற்றுவதில்லை என்பது இதிலுள்ள பெரிய நன்மை. அவசர ஆபரேஷனாக இதைச் செய்யமுடியாது. இதை யாருக்குச் செய்வது என்பதை எண்டோஸ்கோப்பிஸ்ட்தான் முடிவு செய்ய வேண்டும்.

Advertisements
%d bloggers like this: