Advertisements

குடல் புற்றுநோயை குணப்படுத்துவது எளிது

நாம் ஒன்றை சாதாரணமாக நினைப்போம். அதுதான் சோதனையாக வந்து நம்மை இம்சிக்கும். இதைப் பல நோயாளிகளிடம் கவனித்திருக்கிறேன். ‘மலத்தில் ரத்தம் போனால், அது மூல நோயாகத்தான் இருக்கும்’ என்று அவர்களாகவே முடிவு செய்துகொண்டு, லாட்ஜ்களில் சிகிச்சை செய்யும் டாக்டர்களிடம் போவார்கள். அங்கு கிடைக்கும் தற்காலிக நிவாரணத்தில் திருப்தி அடைவார்கள். பின்னொரு நாளில் அது ‘மலக்குடல் புற்றுநோய்’ என்ற உண்மை தெரியவரும்போது, ஆபத்தின் உச்சத்தில் இருப்பார்கள்.

இவர்கள் ஆரம்பத்திலேயே சரியான இடத்தில் முறையாக பரிசோதித்துக் கொண்டால், குடல் கேன்சரையும் குணப்படுத்த முடியும். இதற்கு ஓர் உதாரணம் நாராயணமூர்த்தி. அவருக்கு வயது நாற்பது. பஞ்சு புரோக்கர். ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு என மாதம் முப்பது நாளும் வியாபார விஷயமாக அலைந்துகொண்டிருப்பவர். சென்ற வருடம் ஒருநாள் ஆந்திராவில் அவராகவே ‘மாஸ்டர் ஹெல்த் செக்-அப்’ செய்துகொண்டார். அந்த ரிப்போர்ட்டை என்னிடம் காண்பித்தார்.
“எனக்குத் தெரிந்து எல்லாமே நார்மல், டாக்டர். ஹீமோகுளோபின் மட்டும் குறைவாக இருக்கிறது. அதற்கு இரும்புச்சத்து மாத்திரை எழுதிக்கொடுங்கள்” என்றார். நான் அவரைக் கூர்மையாகப் பார்த்தேன். சென்றமுறை பார்த்ததைவிட இப்போது கொஞ்சம் மெலிந்திருந்தார். அதைக் குறிப்பிட்டேன். “ஒரே அலைச்சல், சாப்பாடு சரியில்லை” என்றார். என் மனம் ஒப்பவில்லை. அவர் ரிப்போர்ட்டை மறுபடியும் பார்த்தேன். அவர் மலப் பரிசோதனை செய்யவில்லை என்பது தெரிந்தது.
அதற்குக் காரணம் கேட்டேன். “நேரமில்லை” என்றார். “அதுதானே முக்கியம்!” என்றேன். அவர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். “எனக்கு அதில் சிக்கல் ஏதுமில்லையே! அந்தப் பரிசோதனை அவசியமா, என்ன?” என்றார். “ஆமாம்” என்றேன். அவரின் அந்த ‘ரிப்போர்ட்’ என்ன சொன்னது? அதை அப்புறம் சொல்கிறேன். இப்போது குடல் கேன்சரை அறிமுகம் செய்கிறேன்.
குடல் என்றால் அது ‘சிறுகுடல், பெருங்குடல்’ இரண்டையும் குறிக்கும். சிறுகுடலில் கிருமித்தொற்று, புழுத்தொல்லை மற்றும் செரிமானப் பிரச்சனை வருவதுதான் அதிகம்; சிலருக்கு குடலில் அடைப்பு ஏற்படலாம்; இங்கே கேன்சர் வருவது மிகவும் குறைச்சல். பெருங்குடலைப் பொறுத்தவரையில் ‘கேன்சர்’, ‘ஐபிடி (IBD)’, ‘ஐபிஎஸ் (IBS)’ என மூன்று பிரச்னைகள் பெரிதாக முளைக்கும்.
இவற்றில் கேன்சர்தான் மோசமானது. பெரும்பாலும் பரம்பரை ரீதியில் இது வருகிறது. சிலருக்கு பெருங்குடலில் புண் ஏற்பட்டு, வருஷக்கணக்கில் நீடிக்கும். அப்போது அது கேன்சராக மாறக்கூடும். இன்னும் சிலருக்கு குடலில் ‘நீர்க்கட்டிகள்’ (Polyps) வளரும். இவற்றை ஆரம்பத்திலேயே சர்ஜரி செய்து அகற்றிவிட வேண்டும். இல்லையென்றால், இவையும் கேன்சராக மாறுவதற்கு நேரம் பார்க்கும்.
பெருங்குடல் கேன்சரை அதிக கொழுப்புள்ள உணவுகள் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர் போல் இரு கரம் கூப்பி வரவேற்கும். எப்படி? கொழுப்புணவைச் செரிக்க பித்த உப்புக்கள் அதிகம் தேவைப்படும். அவை ‘ஓவர் டோஸ் ஆகி’ பெருங்குடலின் சுவரில் அடிக்கடி தங்கினால் ஆபத்தாகிவிடும். கை கொடுக்க வந்தவனே காலை வாரிய கதையாக, இந்த உப்புக்களே கேன்சருக்கு ஊற்றுக்கண்ணாகி விடும்.
இன்றைய இளைய தலைமுறையினர், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சாப்பிடுவதைக் கேவலம் எனக் கருதுகின்றனர். இதனால், மலச்சிக்கல் அவர்களைப் படுத்தி எடுக்கிறது. வண்டி இழுக்க சண்டித்தனம் செய்யும் காளையைத் தார்க்குச்சி கொண்டு குத்துவதைப் போல, நாட்கணக்கில் வெளியேறாத மலம் பெருங்குடல் சுவரைக் குத்திக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக அங்குள்ள செல்கள் இயல்புக்கு மாறாக வளர்ந்து கேன்சராக மாறுகின்றன.
நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மேல் வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கலும், பேதியும் ஒன்று மாற்றி ஒன்று தொல்லை தருகிறது என்றால், குடல்நோய் நிபுணரைச் சந்திப்பது நல்லது. பெருங்குடல் கேன்சரின் ஆரம்ப அறிகுறியாக அது இருக்கலாம். ‘மலத்தில் ரத்தம் வருகிறது, பசி எடுப்பதில்லை, எடை குறைகிறது, ரத்தசோகை ஏற்படுகிறது, காரணம் தெரியாமல் களைப்பு உண்டாகிறது, அடிக்கடி வயிறு வலிக்கிறது…’ இப்படி ஏதாவது சிரமம் ஏற்பட்டால் குடலில் கேன்சர் குடியேறிவிட்டது என்று அர்த்தம்.
‘வயிற்றில் கட்டி தெரிவது, குடல் அடைத்துக்கொள்வது, வாந்தி வருவது…’ இந்த நோயின் கடைசி கட்ட அறிகுறிகள். இது முக்கியம்… பெருங்குடலின் தொடக்கத்தில் ரத்தம் கசிந்தால் அது நமக்குத் தெரியாது. தொடர்ந்து, நாட்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மலத்தின் வழியே ரத்தம் கசிந்துகொண்டே இருக்கும். இதனால் ரத்தசோகை ஏற்படும். எனவே, ஒருவருக்கு 40 வயதுக்கு மேல் ரத்தசோகை இருப்பது தெரிய வந்தால், பெருங்குடலைப் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.
பெருங்குடல் கேன்சரை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் பூரணமாக குணப்படுத்திவிடலாம். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அதிகம் இல்லாத காரணத்தால், நோயின் இறுதிக்கட்டத்தில்தான் அநேகரும் சிகிச்சைக்கு வருகின்றனர். நம் தாத்தா காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட யாரோ ஒருவருக்குக் குடல் கேன்சர் வந்ததாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இன்றைய சூழலில்  மேற்கத்திய உணவுமுறையும், மதுப்பழக்கமும் டீன் ஏஜர்களை அடிமைப்படுத்திவிட்டதால், 30 வயதிலேயே இது வருவது சகஜமாகிவிட்டது.
மனித உயிருக்கு ஆபத்து தருகிற ‘டாப் டென்’ கேன்சர்களில் இதுவரை பத்தாம் இடத்தில் இருந்த குடல் கேன்சர் இப்போது எட்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. குடல் கேன்சர் வந்த குடும்பத்தில் பிறந்தவர்கள், 30 வயதில் கேன்சருக்கான ‘மாஸ்டர் ஹெல்த் செக்-அப்’ செய்துகொள்ள வேண்டும். இதில் ‘அக்கல்ட் பிளட்’ மலப் பரிசோதனையும் (Occult Blood – Stool Test) ‘கொலனோஸ்கோப்பி’ பரிசோதனையும் மிக முக்கியம்.
குடல் கேன்சர் ஆரம்பிக்கும்போது மலத்தில் லேசாக ரத்தம் கசியும். இதைக் கண்ணால் பார்க்க முடியாது. ‘அக்கல்ட் பிளட்’ மலப் பரிசோதனையில் இது தெரிந்துவிடும். உடனே உஷாராகிவிடலாம். வாய்க்குள் குழாய்விட்டு இரைப்பையைப் பார்க்கும் எண்டோஸ்கோப்பியின் ஒரு வகைதான் கொலனோஸ்கோப்பியும். முதலில், வயிற்றை சுத்தம் செய்ய மருந்து கொடுப்பார்கள். பிறகு வலிக்காமல் இருக்க மருந்து தருவார்கள்.
பின்னர் ஆசனவாய் வழியாக ஒரு குழாய் போன்ற கருவியைச் செலுத்தி, ‘பெருங்குடல் எப்படி இருக்கிறது’ என்று நேரடியாகப் பார்ப்பார்கள். இதை வீடியோ காட்சியாகக் கம்ப்யூட்டர் திரையில் பெரிதுபடுத்திப் பார்ப்பதும் உண்டு. குடலில் கேன்சர் இருந்தால் அங்கே புண்ணோ, கட்டியோ தெரியும். அதிலிருந்து சிறிய அளவில் திசுவை வெட்டி எடுத்து ‘பயாப்ஸி’ டெஸ்டுக்கு அனுப்புவார்கள்.
குடலில் இருப்பது கேன்சரா? இல்லையா? கேன்சராக இருந்தால் அது எந்த வகை என்று ‘கேன்சரின் ஜாதகத்தை’ துல்லியமாக அது கணித்துவிடும். பிறகு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்தால், கேன்சரின் ‘ஸ்டேஜ்’ தெரிந்துவிடும். அதற்கேற்ப சிகிச்சை தரப்படும். பொதுவாக குடல் கேன்சருக்கு ‘சர்ஜரி, கீமோதெரபி, ரேடியோதெரபி’ என்று மூன்று வகை சிகிச்சைகள் உள்ளன. எது தேவை என்பதை சர்ஜன்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதுவரை ஒருவித பயத்தோடு வாசித்துக்கொண்டிருந்த உங்களுக்கு இப்போது வயிற்றில் (குடலில்) பால் வார்க்கிற மாதிரி ஒரு செய்தி சொல்லப் போகிறேன். குடலில் கேன்சர் வருவதற்கு முன்பாகவே, அது வர வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கவும் ஒரு ரத்த டெஸ்ட் இருக்கிறது. அதையும் தெரிந்துகொள்ளுங்களேன். வெயிட்… வெயிட்… அதன் பெயரைச் சொல்லும்போது உங்கள் வாய் கோணிப் போகலாம்! எச்சரிக்கை.
‘கார்சினோ எம்பிரியானிக் ஆன்டிஜென் டெஸ்ட்’ (Carcino Embryonic Antigen Test). சுருக்கமாக ‘சிஇஏ’ (CEA) பயோமார்க்கர் டெஸ்ட் என்று சொல்வோம். இதன் அளவு அதிகமென்றால், குடலில் கேன்சர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்துகொண்டு, மற்ற டெஸ்டுகள் மூலம் உறுதிசெய்து, தகுந்த முன்னோட்ட நடவடிக்கைகள் எடுத்து, இதை வரவிடாமலேயே தடுத்துவிடலாம்.
சரி, இப்போது நாராயணமூர்த்தியின் கதைக்கு வருவோம். அவருடைய ‘அக்கல்ட் பிளட்’ மலப் பரிசோதனை ‘பாசிட்டிவ்’ என்று வந்ததால், குடலில் கேன்சர் இருக்க வாய்ப்பிருக்கிறது எனப் புரிந்து, கொலனோஸ்கோப்பி பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்தினேன். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அவருக்கு ‘ஸ்டேஜ் ஒன்’ கேன்சர் என்றது. உடனடியாக செய்யப்பட்ட சர்ஜரியாலும், அதைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட கீமோதெரபியாலும் அவருக்கு நோய் 100 சதவீதம் குணமாகிவிட்டது. நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிஷத்தில் சத்திரப்பட்டி ஸ்பின்னிங் மில்லுக்கு சப்ளை செய்ய குண்டூரில் படு பிஸியாகப் பஞ்சு வாங்கிக்கொண்டிருப்பார்.
(இன்னும் பேசுவோம்…)
நோய் காட்டும் கண்ணாடி
நாம் ‘சாதாரணம்’ என நினைக்கும் மலம் எப்படி வெளியேறுகிறது என்பதை வைத்தே நம் ஆரோக்கியத்தின் நிலைமையை ஓரளவு கணித்துவிடலாம். ‘திரவநிலையில் போனால்’  அஜீரணம். ‘நீர் அதிகம் வெளிவந்தால்’  வயிற்றுப்போக்கு. ‘சளியும் ரத்தமும் கலந்து வந்தால்’  சீதபேதி. ‘களிமண் போல் காணப்பட்டால்’ பித்தநீர் அடைப்பு/சிலியாக் நோய். ‘ரிப்பன் மாதிரி மெலிதாகப் போனால்’ குடல் அடைப்பு/ மலக்குடல் சுருக்கம். ‘பச்சை நிறத்தில் போனால்’ ஜியார்டியா கிருமிகள் பாதிப்பு.
‘ரத்தம் கலந்து போனால்’ பெருங்குடல் புண்/புற்றுநோய். அல்லது ஆசனவாய் விரிசல், புண், மூலநோய். ‘கருப்பாகப் போனால்’ இரைப்பையில் ரத்தக்கசிவு. ‘தார்’ போல் போனால் இரைப்பை மற்றும் குடலில் புண் அல்லது புற்றுநோய். ‘வெளிறிய நிறத்திலும் பிசுபிசுப்பாகவும் காணப்பட்டால்’ கல்லீரல் மற்றும் கணைய பாதிப்பு.
தடுக்க வழிகள்
* மேற்கத்திய உணவுமுறையைக் கைவிடுங்கள்.
* செயற்கை நிறமூட்டிகள், சுவை யூட்டிகளைக் கட்டாயம் தவிருங்கள்.
* அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவதைத் தவிருங்கள்.
* நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகப்படுத்துங்கள்.
* காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்.
* சிட்ரஸ் பழங்கள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கேரட் ஆகியவை குடல் புற்றுநோயைத் தடுக்கும் குணமுள்ளவை. இவற்றைத் தாராளமாகச் சாப்பிடுங்கள்.
* உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.
* மதுவும் புகையும் ஆகவே ஆகாது.

Advertisements
%d bloggers like this: