இடிமா என்கிற இடைஞ்சல்

ம் கண் கேமரா என்றால் அதில் உள்ள ரோல்தான் விழித்திரை. அதன் மையப்பகுதிதான் மேகுலா. அதன் வழியாகத்தான் நாம் எழுதுகிறோம், படிக்கிறோம். இடிமா என்றால் திரவக் கோர்வை. அதாவது தண்ணீர் சேர்வது என அர்த்தம். உடலின் எந்தப் பகுதியில் தண்ணீர் சேர்ந்தாலும் அதன் பெயர் இடிமாதான். விழித்திரையின் மையப்பகுதியான மேகுலாவில் தண்ணீர் சேர்வதற்குப் பெயர் மேகுலர் இடிமா(Macular Edema). இதற்கு பல காரணங்கள் உண்டு.

இடிமாவின் முக்கியமான காரணங்களில் ஒன்று நீரிழிவு. சர்க்கரையினால் உடலில் உள்ள எல்லா ரத்தக்குழாய்களும் பாதிக்கப்படுவதைப்போல மேகுலாவின் ரத்தக்குழாய்களும் பாதிக்கப்படும். அதன் சுவர் பகுதியில் ஒரு செல்லுக்கும் இன்னொரு செல்லுக்கும் இடையிலுள்ள டைட் ஜங்ஷன் பகுதி தளர்வடைவதால் உள்ளே ரத்தத்தில் உள்ள தண்ணீர் தளர்ந்த இடைவெளிகள் வழியே திசுக்களில் கசிந்து, அந்தத் திசுக்கள் வீங்கு
வதற்குப் பெயர்தான் மேகுலர் இடிமா.
இது ஆரம்பக்கட்டத்தில் தளர்வாக இருக்கும். அதை ஸ்பான்ஜ் இடிமா(Sponge edema) என்று சொல்வார்கள். போகப் போக கட்டித்தட்டிப் போய்விடும். இடிமாவைச் சுற்றி சுவர்கள் எழும்பும். அதற்குப் பெயர் சிஸ்டாயிட் மேகுலர் இடிமா(Cystoid Macular Edema). சிஸ்ட் என்றால் நீர்க்கட்டி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நிறைய நீர்க்கட்டிகள் சேர்ந்து பூ போன்ற தோற்றத்தில் இருப்பதை ஃபிளவர் பெட்டல் அப்பியரன்ஸ்(Flower petal appearence) என்று சொல்வோம். அதாவது, மேகுலா பகுதி ஒரு பூ மாதிரி தெரியும். இதைத் தவிர்த்து நீரிழிவினால் வரும் மேகுலர் இடிமா, குணப்படுத்தக்கூடியது என்றால் அது Clinically Significant macular Edema எனப்படுகிறது.
இடிமா பிரச்னைக்கான சிகிச்சை லேசர் முறைதான். லேசர் என்பது அறுவை சிகிச்சைதான். ஆனால், மயக்க மருந்து கொடுக்கப்படாது. சாதாரண பரிசோதனையில் மருத்துவர் கண்ணுக்குள் டார்ச் அடித்துப் பார்ப்பது போல கண்ணுக்குள் பச்சை நிற லைட் செலுத்தப்படும். அவ்வளவுதான். இப்போது கண்ணுக்குத் தெரியாத விளக்குகளும் வந்திருக்கின்றன.
எப்படி இருந்தாலும் லேசர் என்பது சூடு. அதன் காரணமாக திசுவில் சிறிது காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் இப்போது Subthreshold laser photocoagulation  எனப்படுகிற முறையில் அதாவது முழு பவர் இல்லாமல் குறைந்த பவர் கொண்டு செய்யப்படுகிறது. பார்ப்பதற்கு லேசர் மாதிரியே தெரியாது.
அதுதவிர கண்ணுக்குள் செலுத்தப்படுகிற பிரத்யேக இன்ஜெக்‌ஷன் வெளிநாடுகளில் இருந்து இப்போது இறக்குமதி செய்யப்படுகிறது. கண்ணுக்குள் போடப்படுகிற ஊசி என்றாலும் வலி இருக்காது. ஜெல் போன்ற மருந்தைச் செலுத்தி கண்ணை மரத்துப் போகச் செய்த பிறகே ஊசி போடப்படும். அந்த மருந்தானது நேரடியாக கண்ணுக்குள் போய் விழித்திரைக்குள் போய் ரத்த நாளங்களை சரி செய்யும்.
ஏன் ஊசி மூலம் செலுத்துகிறோம் என்றால் வாய் வழியே எடுத்துக் கொள்கிற எந்த மருந்தும் விழித்திரைக்குள் போகாது. பிளட் ரெட்டினல் பேரியர் என ஒன்று இருக்கிறது. அதனால்தான் கண்ணுக்குள் நேரடியாக ஊசி மூலம் மருந்தைச் செலுத்துகிறோம். இதேபோல கண்ணுக்குள் ஸ்டீராய்டு இம்பிளான்ட் என்பதும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது,  கண்ணுக்குள்ளேயே ஸ்டீராய்டு மருந்து செலுத்துகிற முறையும் இருக்கிறது. வாய் வழியே எடுத்துக் கொள்கிற ஸ்டீராய்டு மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் கண்களுக்குள் செலுத்தப்படுகிறது. 3 முதல் 5 மாதங்கள் வரை சிறிது சிறிதாக மருந்தை விடுவிக்கும்.
இதுவும் தண்ணீரைக் குறைக்கும். நீரிழிவால் மட்டுமின்றி, ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்றவற்றாலும் கண்ணுக்குள் தண்ணீர் சேரலாம். இதுதவிர கண்ணுக்குள் வீக்கம் அல்லது தொற்று எதுவானாலும் மேகுலாவில் ரத்த ஓட்டம் அதிகம் என்பதால் மேகுலாவின் ரத்த நாளங்கள் சீக்கிரமே பாதிப்புக்குள்ளாகும். தண்ணீர் சேர்வதும் இருக்கும். அதன் காரணமாக நோயாளிகளுக்கு பார்வை குறைந்து கலர் சரியாக தெரியாத நிலை(Dyschromatopsia) ஏற்படலாம்.
மேகுலா வழியேதான் நிறங்களைப் பார்க்கிறோம். பார்வை லேசாக மங்குதல் மைக்ராப்சியா அல்லது மேக்ராப்சியா… குட்டியாகத் தெரியும் அல்லது பெரிதாகத் தெரியும் இவற்றில் ஏதேனும் ஒன்று நடக்கும். கண்ணுக்குள் சவ்வுப் பகுதி(மெம்ப்ரேன்) ஒன்று உருவாகலாம். எபிரெட்டினல் மெம்ப்ரேன் பிரச்னையால்கூட நரம்பை இழுத்து தண்ணீர் சேர்வது நடக்கலாம். அப்படி இருந்தால் அந்த  மெம்ப்ரேனை அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்தால்தான் தண்ணீர் குறையும்.
மாலைக்கண்ணின் ஒரு பிரிவில்கூட சிலருக்கு தண்ணீர் சேர்கிற பிரச்னை இருக்கும். பொதுவாக மாலைக்கண் நோய்க்கு சிகிச்சை கிடையாது. ஆனால், கண்களில் தண்ணீர் சேர்ந்தவர்களுக்கு மட்டும் டிராப்ஸ் கொடுத்து மையப்பகுதியில் ஏற்படுகிற பார்வை இழப்பை ஓரளவு சரி செய்ய முடியும். அதற்கு கண்ணைத் தொடாமல் ஓ.சி.டி எனப்படுகிற சிகிச்சையின் மூலம் லேசர் கிரணங்களை உள்ளே செலுத்தி கண்ணின் பயாப்சி செய்து கண்டுபிடிக்க முடியும். மேகுலர் இடிமாவுக்கு FFA கை நரம்பில் ஊசி போட்டு செய்கிற சோதனையும் ஒன்று. இன்னொன்று ஓசிடி.
இவை தவிர்த்து வயதாவதால் தலைமுடி நரைக்கிற மாதிரி ஏஜ் ரிலேட்டட் மேகுலர் டீஜெனரேஷன்(Age-related macular degeneration(AMD)) என்கிற நிலையினால் கண்ணுக்குள் மெம்ப்ரேன் வந்தாலும் அதன் பக்கவிளைவாக தண்ணீர் சேர்வதும் நடக்கலாம். குறிப்பாக ரெட்டினல் ஆஞ்சியோமேட்ரிஸ் ப்ராலிஃபெரேஷன்(Retinal Angiomatous Proliferation(RAP)) என்கிற நிலையிலும் மேகுலர் இடிமாதான் முதல் அறிகுறி.

நன்றி குங்குமம் டாக்டர்

%d bloggers like this: