சசிகலா நியமனம்; தேர்தல் கமிஷன் முடிவு என்ன? பதைபதைப்போடு காத்திருக்கும் தினகரன்

பன்னீர்செல்வம் கோஷ்டியினர் கொடுக்கும் நெருக்கடி தாங்க முடியாமல், அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலர் தினகரன் நிம்மதி இழந்து தவிப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.அக்கட்சி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:சசிகலா ஜெயிலுக்குப் போனதால், திடுமென கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டு, அன்றைய தினமே, கட்சியின் துணைப் பொதுச் செயலர் ஆனவர், சசிகலாவின் அக்கா மகன் தினகரன். அவர் தலைமையில்தான், இன்று, அ.தி.மு.க.,வே இயங்கி வந்தாலும், அவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை கண்காணித்துக் கொண்டும், கட்சி நிர்வாகத்தை கவனிப்பதையும் செய்து வருகிறார். நிம்மதி இழந்த தினகரன் இதில், கட்சி நிர்வாகத்தை கவனிப்பதில் அவருக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படுகிறது.

கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை, யார் யாரெல்லாம் எப்படி இருக்கின்றனர் என்பதே தெரியாமல் தவித்து வருகிறார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் மனநிலை மற்றும் செயல்பாடுகளை அறிய ஆங்காங்கே ஆள் போட்டு, விவரங்கள் திரட்டினாலும், கிடைக்கும் விவரங்கள் அவருக்கு திருப்தி இல்லை. நம்பிக்கை ஊட்டுவதாகவும் இல்லை.காரணம், மாநில, மாவட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர், பன்னீர்செல்வம் அணியினரோடு நல்ல தொடர்பில் இருப்பதாக அவருக்கு வந்து சேரும் தகவல்கள்தான். இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தல் வேறு விரைவில் வர இருப்பதால், அதற்கும் தயாராக வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க., உள்ளது.

எதிரணியான பன்னீர்செல்வம் அணி வேறு, தொடர்ந்து எல்லா நிலைகளிலும் கிலியூட்டி வருவது, தினகரனை ஏகத்துக்கும் நிம்மதி இழக்க வைத்துள்ளது. சசி நியமனம் செல்லாமல் போனால்.., இதற்கிடையில், கட்சியின் பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதே செல்லாது என்று, தேர்தல் கமிஷனில், பன்னீர்செல்வம் அணியினர் புகார் கொடுத்து, அந்த புகார் மீது விளக்கம் கேட்டுள்ளது, தேர்தல் கமிஷன். பிப்., 28க்குள், சசிகலா, அதற்கு பதில் கொடுத்தாக வேண்டும். அந்த பதில், தேர்தல் கமிஷனுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், உட்கட்சி தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தி, புதிய பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு விடும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், சசிகலா, பொதுச் செயலர் பதவி இழப்பது மட்டுமல்ல, அவரால் நியமிக்கப்பட்டிருக்கும் துணைப் பொதுச் செயலர் தினகரன் உள்ளிட்ட பலரும் பதவி இழக்க நேரிடும். பன்னீர் தரப்பு படுவேகம் அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீதான உத்தரவு செல்லாமல் போகும். பதவி பறிக்கப்பட்டவர்களுக்காக போடப்பட்ட உத்தரவு செல்லாது. இதனால், கட்சி, பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டுக்குள் செல்ல முழுமையான வாய்ப்பு உள்ளது.

அதை நோக்கித்தான், பன்னீர்செல்வம் தரப்பினர் வேக வேகமாக காய் நகர்த்துகின்றனர். தொண்டர்களின் ஆதரவு தமக்கு பெரிதாக உள்ளது என்று நம்பும் பன்னீர்செல்வம் தரப்பு, தேர்தல் மூலம் பொதுச் செயலர் பதவியை பிடித்து, கட்சி நிர்வாகத்தைக் கொண்டு வந்துவிட்டால், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களும் முழுமையாக தங்கள் பக்கம் வந்து ஆட்சி அதிகாரமும் தங்கள் கரங்களுக்குள் வந்து விடும் என்று நினைத்து, அதன் வழி செயல்படுகின்றனர்.இது எதுவும் நடந்து விடக் கூடாது என்று தினகரன் தரப்பினர் ஆர்வப்பட்டாலும், பன்னீர்செல்வம் தரப்பினரின் நடவடிக்கைகளை தடுக்க முடியாததால், முடிவு தனக்கு சோகத்தை அளித்து விடுமோ என்று அஞ்சி தொடர்ந்து பதட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடுதான், கட்சியின் மாவட்டச் செயலர்களை அழைத்து, தினகரன் பேசியிருக்கிறார். ஆனால், மாவட்டச் செயலர்கள் அனைவரும், தினகரனுக்கு முழு விசுவாசமாக இருப்பார்கள் என சொல்ல முடியாததால், தேர்தல் கமிஷன் உத்தரவுகளுக்குப் பின், கட்சியில், எதிர்பாராத நிகழ்வுகள் பல நடக்கலாம்.இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

%d bloggers like this: