Advertisements

ஆபரேஷன் 2.0 கலக்கும் ரோபோட்டிக் சர்ஜரி

தொழில்நுட்பம்தான் எத்தனை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. காலம்தான் எத்தனை விதமாக மாறிக்கொண்டிருக்கிறது. ரோபோக்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றன என்றார்கள். ரோபோக்கள் சமையல் செய்கிறது என்றார்கள். ரோபோக்கள் கார் ஓட்டுகிறது என்றார்கள். சமீபகாலமாக ரோபோக்கள் மருத்துவத்துறையிலும் வந்து விட்டது

என்கிறார்கள்.கம்பவுண்டர் போல டாக்டருக்கு உதவியாக கத்தி, கத்தரிக்கோல் எடுத்துக் கொடுக்கிறது என்றார்கள். பிறகு, செவிலியர்கள் போல பஞ்சு வைத்து துடைப்பது போன்ற பணிகளைச் செய்கிறது என்றார்கள். அதன்பிறகு சக மருத்துவர் போல நோயாளிகளின் ரிப்போர்ட்களைப் படிப்பது போன்ற வேலைகளைச் செய்கின்றன என்றார்கள். இப்போது ‘ஐ’ வசனம் போல அதுக்கும் மேல என்ற நிலை வந்துவிட்டது.
ஆமாம்… ரோபோக்கள் இப்போது டாக்டர்களாகவும் முன்னேறி, அறுவை சிகிச்சைகள் அளிக்கும் சர்ஜனாகவும் மாறிவிட்டன. இதன் அடுத்த  கட்ட ஆச்சரியமாக மிகவும் நுட்பமான கண் அறுவை சிகிச்சை செய்வதிலும் ரோபோட்டிக் சர்ஜரி சமீபத்தில் வெற்றியடைந்திருக்கிறது. வில்லியம் பேவர் என்ற பாதிரியாருக்கு இங்கிலாந்தில் நடந்த கண் அறுவை சிகிச்சை ரோபோட்டிக் சர்ஜரியின் மூலம் நடந்திருக்கிறது.தொழில்நுட்ப ரீதியாக லேட்டஸ்ட் வெர்ஷனை 2.0 என்று குறிப்பிடுவார்கள். ரோபோக்களின் ஆதிக்கம், கண் அறுவை சிகிச்சையிலும் கால் பதித்திருப்பதை ஆபரேஷன் 2.0 என்றே குறிப்பிடலாம். அறுவை சிகிச்சை நிபுணர் செழியனிடம் ரோபோட்டிக் சர்ஜரி பற்றிப் பேசினோம்…‘‘16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியர் லியானார்டோ டாவின்சி ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வேலைசெய்யும் வகையில் சிறு கருவி ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார். அதன் அடிப்படையில் சர்ஜரி ரோபோவைக் கண்டு பிடித்துள்ளனர்.
சிறுதுளை வழியாக, நோயாளியின் உடலினுள் ரோபோவின் கைகளைப் பொறுத்தி, அதன் உதவியுடன் கம்ப்யூட்டர் மூலம் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதையே ரோபோட்டிக் சர்ஜரி(Robotic Surgery) என்கிறோம். இதில் வழக்கமான அறுவை சிகிச்சைபோன்றே நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து படுக்க வைப்போம். பின்னர் நோயாளியின் உடலின் அடி வயிற்றுப் பகுதியில் சிறு துளையிட்டு அதன் வழியாக 4 ரோபோ கைகள் உள்ளே வைக்கப்படும். அந்த நான்கில் ஒன்றில் கேமராவும் மற்ற மூன்றில் கத்தரிக்கோல், பிற உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.இவை மருத்துவரின் கைகள் போல் செயல்படும். கேமரா வழியாக திரையில் 3டி வடிவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பகுதி மற்றும் ரோபோட்டிக் கைகள் தெளிவாகத் தெரியும். உள்ளிருக்கும் கைகள் வெளியே கன்சோல்(Console) கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
மருத்துவர் இந்த கன்சோலை இயக்கும்போது உள்ளிருக்கும் கைகள் இயங்கும். நோயாளியைச் சுற்றி மருத்துவர்கள் குழு ஒன்றும் நின்று கொண்டிருக்கும். அறுவை சிகிச்சை மேஜையின் அருகில் அமர்ந்திருக்கும் பிரதான மருத்துவர் வீடியோ கேம் போல ரோபோவின் கைகளை இயக்குவார்.’’வழக்கமான அறுவை சிகிச்சைக்கும் ரோபோட்டிக் சிகிச்சைக்கும் என்ன வித்தியாசம்?‘‘பொது அறுவை சிகிச்சை முறையில் நோயாளியின் குறிப்பிட்ட உறுப்பின் மேல்தோலை கிழித்து மருத்துவர் நேரடியாக அறுவை சிகிச்சை செய்கிறார். இவ்வாறு நேரடியாக செய்யும்போது, உள்ளுறுப்புகளின் ஆழமான பகுதிகள் தெளிவாக தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், ரோபோட்டிக் சிகிச்சை யில் கேமரா பொருத்தப்படுவதால் ஒவ்வொரு ரத்தநாளங்களும் திரையில் தெளிவாகத் தெரியும். இதனால், துல்லியமாக அறுவை சிகிச்சையை செய்ய முடிகிறது.மேலும், ரோபோவின் கைகள், அறுவை சிகிச்சையின்போது மருத்துவரின் கைகளில் ஏற்படும் நடுக்கத்தைக்கூட சீர்படுத்தி, கைகளின் அசைவுகளை வரம்புக்குள் கொண்டுவருகிறது. உதாரணமாக, வயிற்றுக்குள் இருக்கும் கட்டியை அகற்றுவதற்கு ரோபோட்டிக் கன்சோலை அசைத்தால் உள்ளிருக்கும் கத்திரி துல்லியமாக அந்தக் கட்டியை வெட்டி எடுத்து விடும்.’’

நோயாளிக்கு என்ன பயன்?

‘‘சாதாரண அறுவைசிகிச்சையில் 6 இன்ச் முதல் 9 இன்ச் அளவில் வெட்ட வேண்டியிருக்கும். இதனால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படும். சிகிச்சைக்குப்பின் புண் ஆறுவதிலும் தாமதம் ஏற்படும். வலி, நோய்த்தொற்று, பக்க விளைவுகள் அதிகம் இருக்கும். மருத்துவமனையில் தங்கும் நாட்கள் 7 நாட்கள் வரை ஆகலாம்.இதனால் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப ஒரு 6 வாரங்களாவது பிடிக்கும். ஆனால், ரோபோட்டிக் சிகிச்சையில் மிக நுண்ணிய துளை இடப்படுவதால் ரத்தப்போக்கு குறைவதுடன், வலியில்லாமல் புண் விரைவில் ஆறிவிடும். 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதுமானது. ஒரு வாரத்திலேயே சகஜ வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம். பக்கவிளைவுகள், வலி போன்றவையும் மிகமிகக் குறைவு.

’’ரோபோட்டிக் சர்ஜரியின் எதிர்காலம் எப்படிஇருக்கும்?

‘‘ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில் முக்கிய பிரச்னை கட்டணம். ஒவ்வொரு அறுவை சிகிச்சை முடிந்தவுடன் ரோபோவின் கைகளை மாற்ற வேண்டும். ரோபோட்டிக் உபகரணங்களின் விலையும் அதிகமாக இருப்பதால் சிகிச்சைக்கான செலவும் கூடுதலாகிறது.இப்போது உலகிலேயே ஒரே ஒரு நிறுவனம்தான்  இந்த உபகரணங்களை தயாரிக்கிறது. எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும்போது, பெருமளவு நிறுவனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டால் குறைந்த விலையில் உபகரணங்கள் கிடைக்கத் தொடங்கும். அப்போது குறைந்த செலவில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை செய்ய முடியும்.25 வருடங்களுக்கு முன்பு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை கூட செலவு கூடுதலாகத்தான் இருந்தது. ஆனால், தற்பொழுது சிறு மருத்துவமனைகளும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கி விட்டன. ரோபோட்டிக் சர்ஜரியும் எதிர்காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு சாத்தியமாகும். ’’மருத்துவர்களைப் பொறுத்தவரை எது சௌகரியமானது?‘‘வழக்கமான அறுவை சிகிச்சையில் 5 மணிநேரம் நின்றுகொண்டே செய்ய வேண்டும். எளிதில் சோர்வடைந்துவிடுவோம். ரோபோட்டிக் சிகிச்சையில் சோர்வில்லாமல் வசதியாக உட்கார்ந்து கொண்டு, எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடிகிறது. ஒருநாளில் குறைந்தபட்சம் 3 அறுவை சிகிச்சைகள் கூட செய்துவிடலாம். பக்கவிளைவுகள் இல்லாததால், ஒரு நோயாளியை விரைவில் குணப்படுத்திவிட முடிகிறது. புண் சீக்கிரம் ஆறிவிடுவதால் நோய்த்தொற்று அபாயம் இல்லை. சீக்கிரமே வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளவும், நடக்கவும் ஆரம்பித்துவிடுவதால், விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்கள். இதனால் அவர்களை பராமரிக்கும் வேலையும் குறைந்துவிடுகிறது.’’
டாக்டர் ரோபோ
இங்கிலாந்தில் ரோபோட்டிக் சர்ஜரி சமீபத்தில் வெற்றி பெற்றிருப்பதைப் பற்றி கண் சிகிச்சை மருத்துவர் கௌசிக்கிடம் கேட்டோம்… ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின்போது அறுவை சிகிச்சை அரங்குக்கே நம்மை நேரடியாக அழைத்து விளக்கினார் என்பதும், ரஜினியின் 2.0 திரைப்படத்தில் ரோபோ அக்‌ஷய்குமாருக்கு லென்ஸ் பொருத்தும் பணிகளில் செயல்பட்டு வருபவர் டாக்டர் கௌசிக் என்பதும் கூடுதல் தகவல்.‘‘மூளை, காது, மூக்கு, கண், தொண்டை, இதயம், நுரையீரல், கல்லீரல், பித்தப்பை, கர்ப்பப்பை கோளாறு, எலும்பு மூட்டு, புற்றுநோய் என பல அறுவை சிகிச்சை களுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. உடலில் ஒவ்வோர் உறுப்புக்கும் ஏற்ப ரோபோட்டிக்ஸ் எந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது.
வாய், மூக்கு, காது, ஆசனவாய், ஆண் உறுப்பு, பெண் உறுப்பு அதன் வழியாக டியூப் விட்டு சிகிச்சை செய்யும் எண்டோஸ்கோப்பி(Endoscopy) சிகிச்சை, வாய் வழியாக உள்ளே டியூப் விட்டு இரைப்பை சிறுகுடல், பெருங்குடலில் செய்வது Gastroscopy சிகிச்சை, பெண் உறுப்பு வழியாக டியூப் செலுத்தி செய்யப்படும் Duodeno scopy என்ற கர்ப்பப்பை அறுவை சிகிச்சை, ஆசனவாய் மூலம் டியூப் உள்ளே விட்டு செய்யும் Proctoscopy சிகிச்சை, ஆண் உறுப்பு வழியாக உள்ளே டியூப் விட்டு சிறுநீரக கல் அகற்றும் URO Scopy சிகிச்சை, வாய் மூலம் டியூப் உள்ளே விட்டு நுரையீரல் பாதிப்புகள் சரி செய்யும் Bronchoscopy சிகிச்சை, உடலில் துளையிட்டு அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் Gall bladder stone முறை, குடல்வால் நீக்கம் அறுவை சிகிச்சை, சிறுநீரக கல் நீக்கம், கர்ப்பப்பை கட்டிநீக்கம், கழுத்தில் துளையிட்டு அதன்வழியாக செய்யப்படும் இதய அறுவை சிகிச்சை போன்றவற்றை ரோபோக்கள் செய்கின்றன.
’’கண் அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக்கின் பங்கு என்ன ?
‘‘பார்வை குறைபாட்டால் கண்ணாடி அணிவதைத் தவிர்க்கும் அறுவை சிகிச்சை, Cataract- Phaco பசையாக்கம் அறுவை சிகிச்சை, கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை, பெம்டோ கண்புரை அறுவை சிகிச்சை, லேசர் முறையை பயன்படுத்தி கண்புரை நீக்கும் அறுவை  சிகிச்சை, விட்ரெக்டொமி அறுவை சிகிச்சை, விழித்திரை அறுவை சிகிச்சை போன்ற வகைகளில் ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சை தற்போது பயன்பாட்டில் உள்ளது.’’
அறுவை சிகிச்சையை ரோபோக்கள் தனியே செய்துவிடுமா?
‘‘எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் எந்திரங்கள் தன்னிச்சையாக செய்துவிட முடியாது. முழுக்க முழுக்க மருத்துவரின் கட்டுப்பாட்டிலும்,  கண்காணிப்பிலுமே ரோபோக்கள் அறுவைச் சிகிச்சையை செய்யும். அதிலும் இந்த ரோபோட்டிக் முறையை முன் அனுபவம் அதிகம் பெற்ற மருத்துவர்களால்தான் சரியாக செய்ய முடியும்.’’

ரோபோட்டிக் சர்ஜரியில் தவறுகள் நடக்காதா?

‘‘ஒரு மருத்துவர்  செய்யக்கூடிய  அறுவை சிகிச்சையில் 100க்கு 2 தவறு நடந்தால், ரோபோ அறுவை சிகிச்சைகளில் 1000ல் இரண்டு என்ற மிக மிகக் குறைவான அளவில்தான் தவறுகள் நடக்கும். Zero error என்ற இலக்கை நோக்கி ரோபோட்டிக் சர்ஜரி ஆராய்ச்சிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.’’

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisements
%d bloggers like this: