Advertisements

ஏ.சி…யோசி…

ஏர்கண்டிஷன் இருக்கிற இடங்களைப் பார்ப்பது முன்பு அரிதாக இருந்தது. இப்போது ஏர்கண்டிஷன் இல்லாத இடங்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.அந்த அளவுக்கு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், பேருந்துகள், சின்ன கடைகளில்கூட குளிர்சாதனங்களின் (Air Conditioner) பயன்பாடு பலமடங்கு அதிகரித்துவிட்டது.வர்த்தக நிறுவனங்களையும், பணக்காரர்களையும் தொடர்ந்து இப்போது

பலருடைய வீடுகளுக்குள்ளும் குடிவந்துவிட்டது குளிர்சாதன வசதி. குளிர்சாதன வசதிகளின் அதீத பயன்பாடு ஏதேனும் பிரச்னைகளை உண்டாக்குமா? எப்படி கையாள வேண்டும்? என்று நுரையீரல் மருத்துவர் வினோத்குமாரிடம் கேட்டோம்…
‘‘குளிர்சாதனங்களில் உள்ள ஃபில்டர்(Filter) என்ற கருவி வளிமண்டல காற்றினை சுத்தமாக்குவது மற்றும் அறைக்குள் அலர்ஜி உண்டாகாமல் தடுப்பது போன்ற பணிகளை செய்கிறது.நாம் பயன்படுத்தும் சிறிய அளவிலான குளிர்சாதனங்களில் உள்ள ஃபில்டரை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் அதிக நாட்கள் பயன்படுத்தும்போது, அந்த குளிர்சாதனங்களில் இருந்து வரும் காற்றை சுவாசிக்கும் நபர்களுக்கு மூக்கடைப்பு, தலைவலி, தலை பாரம், மூச்சுத்திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகள் ஏற்படுகிறது.Centralised Air conditioner-ஐப் பயன்படுத்தும்போது, அதிலுள்ள ஃபி்ல்டர்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் அதிக நாட்கள் பயன்படுத்தும்போது, அந்த இடங்களில் உள்ள குறைந்த வெப்ப நிலையில் பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா போன்றவை வளர்வதற்கான சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு Legionella Pneumonia என்கிற நோய் ஏற்படுகிறது.
குளிர்சாதனங்களை பயன்படுத்தும்போது கொசுவர்த்திச்சுருள், எலி, கரப்பான் பூச்சி போன்ற பிற பூச்சிகளைக் கொல்லும் மருந்துஸ்பிரேக்களை அடிக்கக்கூடாது. அப்படி ஸ்பிரே செய்வதால் அதிலுள்ள வேதிப்பொருட்கள் நாம் சுவாசிக்கும் காற்றோடு கலக்கிறது.இதனால் மூச்சுத்திணறல், Pulmonary Edema போன்ற நோய்கள் ஏற்படுகிறது. ரயில்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் அதிக நபர்கள் பயணம் செய்யும்போது, அதில் ஒருவருக்கு காசநோய், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தால், அங்கே உள்ள குளிர்ந்த காற்றின் மூலம் அந்த நோய் சுலபமாக மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது.இதுபோல குளிரூட்டிகளைப் பயன்படுத்தும் அதிக மக்கள் கூடும் பிற இடங்களில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இதுபோன்ற தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நோய்த் தொற்றுகள் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு சுலபமாக பரவக்கூடும் என்பதால்தான், அவர்கள் இருக்கும் குளிர்சாதன அறைக்குள் வெளிநபர்களை அனுமதிப்பதில்லை.
இவை அனைத்துக்கும் மேலாக இதுபோன்ற பூட்டிய குளிர்சாதன அறைகளுக்குள் அதிக நேரம் பணிபுரிபவர்கள் நல்ல காற்றோட்டமுள்ள மரங்கள் நிறைந்த இடங்களில் காலை, மாலை நேரங்களில் யோகா, நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதோ அல்லது சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருப்பதோ அவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க உதவும்.
இதற்கு காரணம் உண்டு.இயற்கையின் படைப்பில் உயிர்வாழ்வதற்கு ஏற்றாற்போல் வளிமண்டலம் பல்வேறு வாயுக்களின் கலவையாக உள்ளது. இந்த வளிமண்டல காற்றில் நைட்ரஜன் – 78 %, ஆக்சிஜன் – 21 %, கார்பன் டை ஆக்ஸைடு – 0.033 %, ஆர்கான் – 0.934 %, நியான் – 0.0018 %, ஹீலியம் – 0.00052 %, மீத்தேன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளது. இவற்றில் வளிமண்டலத்தில் உள்ள 21 % ஆக்சிஜனே நாம் உயிர் வாழ்வதற்குப் போதுமான சரியான அளவு.
நாம் சுவாசிக்கும் இந்த சுத்த காற்று மூக்கின் வழியே நுரையீரலுக்குச் சென்று, பின்னர் ரத்தத்தோடு கலக்கிறது. ரத்தத்தில் சாதாரணமாக ஆக்சிஜன் 95% மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். ரத்தத்தில் 95% க்கு கீழ் 85% வரை இருந்தால் சுவாசம் சார்ந்த நோய்கள் ஏற்படுகிறது. ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு 85% க்குக் கீழே சென்றால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும். அதனால் நாம் சுவாசிக்கும் காற்றுக்கும், இருக்கும் இடத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு.அதனால் ஏ.சி பயன்பாட்டை முடிந்தவரைக் குறைத்து, இயற்கையோடு இணைந்து வாழ்வதே நமது உடல்நலனைப் பாதுகாக்க சரியான வழிமுறை’’ என்கிறார் வினோத்குமார்.     

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisements
%d bloggers like this: