Advertisements

தினகரன் கையில் இரட்டை ரிமோட்!

.தி.மு.க-வின் சுப்ரீம் ஸ்டார் ஆகிவிட்டார் தினகரன். அவர் கையில் இப்போது இரண்டு ரிமோட்கள்’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘விளக்கம் ப்ளீஸ்’’ என்றோம்.
‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை உள்ளடக்கிய ஐவர் குழுதான் அ.தி.மு.க-வின் நிர்வாகத்தை இப்போது கவனிக்கிறது. இந்தக் குழுவுக்கு மேலே, தினகரன் சுப்ரீம் பவரில் இருக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில்

இருக்கிறார். சசிகலா சிறைக்குச் செல்லும்முன், அவரிடமிருந்து கட்சி நிர்வாக ரிமோட்டையும், ஆட்சி நிர்வாக ரிமோட்டையும் தன்வசம் வாங்கிக்கொண்டார் தினகரன், சசிகலா, ஒரு ரகசிய உத்தரவையும் தரவேண்டும் என தினகரன் எதிர்பார்த்தார். ‘ஆட்சியில் நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களின் தலையீடுகளை அனுமதிக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் என் மூலமாகவே செய்ய வேண்டும் எனக் கண்டிப்பாகச் சொல்லிவிடுங்கள். இல்லாவிட்டால், பெயர் கெட்டுவிடும்’ என சசிகலாவிடம் சொல்ல, அதை அவர் ஏற்கவில்லை. இருந்தாலும், ‘என் குடும்பத்தைச் சேர்ந்த யாருடைய சிபாரிசுகளையும் ஏற்க வேண்டாம்’ என சசிகலா கையெழுத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட வைத்துவிட வேண்டும் எனக் கடும் பிரயத்தனம் செய்துவருகிறார் தினகரன். சிறையில் சசிகலாவைச் சந்தித்தபோது, இதுபற்றி தினகரன் பேசியிருக்கிறார். ஆனால், ‘இப்படி எல்லா பிடிகளையும் தினகரன் கையில் கொடுப்பது நாளை உங்களுக்கே ஆபத்தாக முடியும்’ என்று சசிகலாவை மற்றவர்கள் எச்சரிக்கிறார்களாம்.’’
‘‘ஓஹோ!”
‘‘ஆனாலும் தினகரன், ஆட்சியிலும் கட்சியிலும் தன் பிடியை விடுவதாக இல்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, டெல்லி விசிட் என்கிற பெயரில் தனிக் கச்சேரி நடத்திவிட்டு வந்தார். ஆனால், தற்போதைய முதல்வர் பழனிசாமி டெல்லி கிளம்பியபோது, அமைச்சர்கள் சிலரை அவருடன் போகச் சொன்னார் தினகரன். ‘பன்னீர் போல, பழனிசாமி தனித்து செயல்பட்டுவிடக் கூடாது’ என்பதில் கவனமாக இருக்கிறார் தினகரன். கொங்கு மண்டலத்துக்கான சில திட்டங்கள் நீண்டகாலமாகக் கிடப்பில் இருப்பது தொடர்பாக, நிதித் துறையைக் கையில் வைத்திருந்த முதல்வர் பழனிசாமியை கொங்கு வேளாளக் கவுண்டர் சமூக வி.ஐ.பி-க்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்தத் தகவல் தினகரனுக்குப் போயிருக்கிறது. அதை அடுத்துதான், பழனிசாமி வசம் இருந்த நிதித் துறையைக் கழற்றி, அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கினார்கள். இப்போது, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, கட்சியை முழுமையாகக் கட்டுக்குள் எடுக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் தினகரன்.’’
‘‘சரிதான்.’’

‘‘ஆனால், குடும்பத்தில் ம.நடராசன், திவாகரன் இருவரும்தான் தினகரனுக்கு எதிராகக் கச்சைக்கட்டி நிற்கிறார்களாம். திவாகரன், தன் மகன் ஜெயானந்துக்கு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அல்லது மாணவர் அணி என ஏதாவது ஒன்றில் தலைமைப் பதவியை வாங்கித்தருவதில் தீவிரமாக இருக்கிறாராம். அதே நேரம், ஆட்சி நிர்வாகத்தில் நடராசன் மூக்கை நுழைக்க… பனிப்போர் உச்சகட்டத்தைத் தொட்டிருக்கிறது.’’
‘‘விரிவாகச் சொல்லும்!’’
‘‘தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் நிதித்துறை செயலாளர் சண்முகத்தை நியமிக்க வேண்டும் என்பது தினகரன் எதிர்ப்பு கோஷ்டியின் திட்டம். அதேபோல், தற்போதுள்ள பொறுப்பு டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனை மாற்றிவிட்டு ஜார்ஜை அந்த இடத்தில் அமரவைக்க வேண்டும் என்பதும் அவர்களின் திட்டம். ஏற்கெனவே, முதல்வர் அலுவலகத்தில் இருந்த அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர் வெங்கடரமணன் ஆகியோரைப் பணியைவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அங்கிருந்த ராமலிங்கமும் மாற்றப்பட்டார். இவர்களின் பணிகளை அங்கிருக்கும் சில அதிகாரிகள்தான் கூடுதலாகக் கவனித்து வருகிறார்கள். முதல்வரின் செயலாளர்களாக மூன்று அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும். இதேபோல், தலைமைச் செயலகத்தில் உயர்கல்வி, பொது உள்ளிட்ட முக்கிய துறைப் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருக்கின்றன. கூடுதல் பணியாக மற்ற ஐ.ஏ.எஸ்-கள்தான் அந்தத் துறைகளைக் கவனித்து வருகிறார்கள். இந்தப் பதவிகளில் அமர, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் ஏக போட்டி. போலீஸ் துறையில், உளவுத் துறை ஐ.ஜி பதவி காலியாக இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் டி.ஜி.பி-க்கள் அர்ச்சனா ராமசுந்தரம், கே.ராதாகிருஷ்ணன், ஜார்ஜ்,  டி.கே.ராஜேந்திரன்… ஆகியோர் ஓய்வு பெறப்போகிறார்கள். இவர்களில் சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி பதவியைப் பிடிக்க பலத்த போட்டி ஜார்ஜுக்கும்,  டி.கே.ராஜேந்திரனுக்கும்தான். இந்தப் பதவியில் அமர இருவரில் யாருக்கு சான்ஸ் அடிக்கிறதோ, அவருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கிடைக்கும். சென்னை போலீஸ் கமிஷனர் பதவியைக் குறிவைத்து இன்னொரு முக்கிய அதிகாரி சசிகலா தரப்பினரை வலம் வருகிறாராம். பல்வேறு அரசுத் துறைகளில் முக்கியப் பதவிகளைப் பிடிக்க சுமார் 50 அதிகாரிகள் கச்சை கட்டி இறங்கியிருக்கிறார்கள்.’’
‘‘பெரிய பட்டியல்தான். இதற்கும் சசிகலா குடும்ப பாலிடிக்ஸுக்கும் என்ன தொடர்பு?’’

‘‘சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த வெவ்வேறு சேனல்களை இவர்கள் அணுகிவருகிறார்கள். திவாகரன், நடராசன், அவரது சகோதரர்  எம்.ராமச்சந்திரன் மற்றும் இளவரசியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரின் பெயர்களைப் பயன்படுத்தி, ‘ப்ரஷர்’ கொடுத்து வருகின்றனர். முக்கியமாக உயர் கல்வித் துறையில்தான் மீடியேட்டர்கள் மூலம் பேரங்கள் நடக்கின்றன. தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் சில காலியாக உள்ளன. அதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியும் ஒன்று. இந்தப் பதவிக்குப் புதியவரைத் தேர்வுசெய்ய அமைக்கப்பட்டக் குழுவின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர், பொறியியல் துறையில் அனுபவம் இல்லாதவராம். அங்கு, பதவியைப் பெற முயலும் கும்பல் நெட்டித் தள்ளுகிறதாம். இதனால், சசிகலா உறவுகளுக்குள் போட்டி நடக்கிறது.’’
‘‘ம்.’’
‘‘கடந்த வாரம் முதல்வர் பழனிசாமியிடம் ஒரு குயர் நோட்டு அளவுக்குப் புது அதிகாரிகளின் பெயர்களை எழுதி போஸ்டிங் போடும்படி நடராசன், திவாகரன் தரப்பில் காய் நகர்த்தப்பட்டதாம். இதற்கு தினகரன், ‘நோ’ சொல்லியதோடு, ‘என் குடும்பத்தினர் யார் எது செய்யச் சொன்னாலும், செய்யவேண்டாம். நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன்’ என பழனிசாமியிடம் கறாராகச் சொல்லிவிட்டாராம். அதனால், அந்த ஃபைலை அப்படியே மூடி வைத்துவிட்டாராம் முதல்வர் பழனிசாமி.’’

‘‘அப்படியா?’’
‘‘தன்னிடம் சொல்லாமல் தமிழக கவர்னரை திவாகரனும், அவருடைய மகன் ஜெயானந்தும் தன்னிச்சையாகச் சென்று சந்தித்தது தவறு என்கிற ரீதியில் தினகரன் சுட்டிக்காட்டினாராம். தன்னுடன் வலம்வந்த டாக்டர் வெங்கடேஷிடமும் ‘ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்கிறேன். அப்போது வரலாம்’ என்று சொல்லி ஓரங்கட்டிவிட்டாராம் தினகரன். இப்போது அனைத்து விவகாரங்களிலும் தினகரனுடன் இருப்பவர் தளவாய்சுந்தரம்தான். இப்படி தினகரன் செய்வது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நாம்தானே இவரின் அரசியல் அனுபவங்களை வைத்து சசிகலாவிடம் சிபாரிசு செய்து துணை பொதுச்செயலாளர் பதவியில் உட்காரவைத்தோம். ஏற்றிவிட்ட ஏணியை இப்போது உதைக்கிறாரே? ஆட்சியைக் காப்பாற்ற நமக்குத் தெரியாதா?’ என்று கொதித்துப்போனார்களாம்.’’
‘‘தினகரனின் ரியாக்‌ஷன் என்ன?”
‘‘நடராசன் கண் அசைக்காமல், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எதையும் செய்யமாட்டார். அவர், தினகரனுக்கு எதிராகப் பேட்டி கொடுத்தது, முழுக்க முழுக்க நடராசனின் திருவிளையாடல்களில் ஒன்று என்றுதான் தினகரன் ஆதரவாளர்கள் முணுமுணுக்கிறார்கள். திவாகரன் தரப்பினர் சொல்லும் தகவல் அதிரவைக்கிறது. ‘தமிழகத்தைச் சேர்ந்த வி.வி.ஐ.பி ஒருவர், பக்கத்து மாநிலத்தில் உயர் பதவியில் இருக்கிறார். முதல்வர் பழனிசாமி மூலம் அவரை அணுகி பி.ஜே.பி மேலிடத்துடன் புதுத் தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார் தினகரன். இந்த சேனலைப் பிடித்து, தன் மீதுள்ள வழக்குகளைக் கிடப்பில் போடப் பார்க்கிறார். அதெல்லாம் எங்களுக்கும் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்’ என்கிறார்கள். பன்னீர் தரப்பினரும் தங்கள் பிரம்மாஸ்திரத்தை தினகரன் மீது வீசக் காத்திருக்கிறார்கள். ‘ஜெயலலிதா எதற்காக தினகரனை போயஸ் கார்டனை விட்டுத் துரத்தினார் என்ற தகவல் எங்களுக்கும் தெரியும். அந்தக் குடும்பத்து ரகசியங்களை வெளியில்விட்டால் அவர் தாங்க மாட்டார்’ என்கிறார்கள். எல்லா கண்களும் இப்போது தினகரனைக் குறிவைக்கின்றன. ‘தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவதற்கு டெல்லியில் தனி சேனல் போட்டு வருகிறார். இதெல்லாம் எதற்கு?’ என அவர்கள் கேட்கிறார்கள்’’

‘‘முதல்வரின் டெல்லி விசிட்டில் என்ன விசேஷம்?”
‘‘திங்கட்கிழமை மாலையில்தான் பிரதமரிடம் அப்பாயின்மென்ட். ஆனால், முதல்நாள் இரவே எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்துவிட்டார். தமிழ்நாடு இல்லத்தின் முதல் மாடியில் உள்ள ஸ்பெஷல் அறையில் தங்கினார். அவர் அறைக்குள் எம்.பி-க்கள், அதிகாரிகள் அடிக்கடி போய் வந்தனர். ஜெயலலிதா வந்தால், மீடியாக்களிடம் தமிழக போலீஸார் பயங்கர கெடுபிடி காட்டுவார்கள். பன்னீர்செல்வம் வந்தபோது அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் அதை விரும்பவும் இல்லை. ஆனால், இந்தமுறை பழனிசாமி வந்தபோது, பழையபடி போலீஸார் மீடியாக்களிடம் கடுமையாக நடந்துகொண்டனர். இதை பழனிசாமி தடுத்திருக்கலாம் என்று டெல்லி மீடியாவினர் வருத்தப்பட்டனர்.
பிரதமர் மோடி உ.பி தேர்தல் பிரசாரத்துக்கு செல்லத் திட்டம் வைத்திருந்தாராம். ஆனால், பிரதமரின் கோவை விசிட்டின்போது தமிழக முதல்வர் பழனிசாமி நேரடியாக டெல்லியில் சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டதால், வேறு வழியில்லாமல் நேரம் ஒதுக்கினாராம். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்திக்கவும் முதல்வர் அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார். கடைசி வரையில் இழுத்துவிட்டு, முதல்வர் டெல்லியில் இருந்தபோது, ‘இந்தத் திட்டத்தால் பாதிப்பு இல்லை’ என்கிற கோணத்தில் மத்திய அரசு சார்பில் அறிக்கையை விடச்சொல்லி இருக்கிறார், பிரதான். அறிக்கையும் வெளியானது.’’
டெல்லிக்கு விசிட் அடிக்கும் மாநில முதல்வர்கள், டெல்லிக்குப் போய் பணியாற்றும் தங்கள் மாநில கேடர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நேரில் வரவழைத்துப் பேசுவார்கள். மாநில அரசின் திட்டங்களுக்கு ஓகே வாங்குவதில் உள்ள நெளிவுசுளிவுகளை இந்த அதிகாரிகள் முதல்வரிடம் சொல்லுவார்கள். சென்னையில் இருந்து கிளம்பும்முன், டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகளுக்கு பிப்ரவரி 27-ம் தேதி இரவு, தமிழ்நாடு இல்லத்தில் டின்னருக்கு அழைப்பு விடுத்திருந்தார் முதல்வர் எடப்பாடி. சுமார் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் டின்னரில் கலந்துகொண்டனர். அவர்கள் முதல்வரிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு சகஜமாகப் பேசினர். இந்த டின்னர் நடந்த இடத்தில் மீடியாக்களுக்குத் தனியாக இடம் ஒதுக்கியிருந்தனர். தமிழகத்தில் நிறைவேற்றப்படாத திட்டங்கள், நிலுவைத் தொகைகளைப் பெறுவது குறித்து சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சில யோசனைகளை முதல்வரிடம் தெரிவித்தார்களாம். ஐ.பி.எஸ் அதிகாரிகளில் அர்ச்சனா ராமசுந்தரமும் வந்திருந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசுப்பணிக்கு வந்ததால், அவர்மீது கடுங்கோபத்தில் இருந்தார் ஜெயலலிதா. தமிழக அரசு அவரை சஸ்பெண்டு செய்தது. ஆனால், மத்திய அரசின் துணை ராணுவப் பிரிவு ஒன்றுக்குத் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் அவர். இந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் ஓய்வுபெறுகிறார். அந்த நேரத்தில் தனக்கு சிக்கல் வரக்கூடாது என்கிற நோக்கத்தில் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்தாராம் அவர்” என்றபடி பறந்தார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: