Advertisements

கைவசம் இருக்கட்டும் மிளகு

பண்டைய காலத்தில், சாம்பார் தாளிக்க, கடுகு, மிளகு, வெந்தயம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம் உட்பட, ஒன்பது வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. உண்ட உணவு, விரைவில் செரிமானம் ஆக, இது உதவியது.
காலமாற்றத்துக்கு ஏற்ப, கடுகு, கருவேப்பிலை, சின்னவெங்காயம் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. மிளகின் அருமை, பலருக்கு தெரியாமல், பொங்கல் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் சாப்பிடும் போதும், மிளகும், கருவேப்பிலை போன்று, தனியே எடுத்து வைக்கப்படுகிறது.

பத்து மிளகிருந்தால், பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என, நம் முன்னோர் சொல்லியது நினைவிருக்கலாம். காரணம், அன்றாட வாழ்க்கையில் சந்திக்க கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கு, மிளகு, முக்கிய மருத்துவமாக பயன்படுகிறது. மிளகு, வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி, உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு, வீக்கத்தைக் கரைக்கிறது. இதன் காரமும், மணமும், உணவைச் செரிக்க வைக்கிறது.
வாயு தொல்லை நீங்கும்
உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து, நீர் விட்டு நன்கு காய்ச்சி, நீர் மூலம் ஒத்தடம் கொடுத்தால், சிறந்த பயன் தரும்.
தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வு தொல்லைகள் நீங்க, மிளகை நன்கு பொடி செய்து, 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர், 600 மி.லி. சேர்த்து, 30 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி வடிகட்டி, 25 மி.லி. அளவு, மூன்று வேளை அருந்தி வர, நிவாரணம் கிடைக்கும்.
தலைமுடி வளர்ச்சி
சிலருக்கு, தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போல் மாறி விடும். இதற்கு, மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து தேய்த்து வந்தால், முடி முளைக்கும். சாதாரண ஜலதோசத்துக்கும், காய்ச்சலுக்கும், நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும் மற்றும் மஞ்சள் பொடி கலந்து, இரவில் ஒரு வேளை அருந்தி வர, நல்ல பலன் தரும்.
மிளகுத்தூளும், சாதாரண உப்பும் தூளும் கலந்து பல் துலக்கி வர, பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும். மிளகை அரைத்து, நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகை சுட்டு, அதன் புகையை நுகர்ந்தால், தலைவலி நீங்கும்; சளியும் குணமாகும்.
பசியெடுக்க தூண்டும்
தினமும் மிளகை, நீரில் கலந்து, அந்த நீரை காய்ச்சி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தினால், உடல் நல்ல ஆரோக்கியம் அடையும். பல நோய்களுக்கு முக்கிய காரணமாயிருப்பது அஜீரண கோளாறு. இதனால் வருவது தான் வாயுத்தொந்தரவு, புளிப்பு ஏப்பம், அத்துடன் அதிக கொழுப்பான உணவை சாப்பிடுவதால் இருதயத்தில், இரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இவற்றுக்கெல்லாம் சிறந்த மருந்து மிளகுதான்.
வயிற்றுக்குள் மிளகை அனுப்பினால், உடலில் ஏற்படும் நச்சுதன்மையை விரட்டியடிக்கும் ஆற்றல் இருக்கிறது. உஷ்ணதன்மையும், கார தன்மையும் மிளகுக்கு இருப்பதால் மாரடைப்பை தடுக்கும் சக்தி படைத்தது. மிக முக்கியமாக உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்கும் ஆற்றல் படைத்தது.
பசியில்லாமல் இருந்தால், ஒரு ஸ்பூன் மிளகை வறுத்துப் பொடி செய்து, கைப்பிடியளவு துளசி இலையை போட்டு கொதிக்க வைத்து, சூடு ஆறியவுடன், தேனில் கலந்து குடித்தால் சரியாகும்.

Advertisements
%d bloggers like this: