Advertisements

பானையும் வாழ்க்கையும்!

மூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்த குட்டிக்கதை ஒன்று. மண்பானையிடம் ஒருவன் கேட்டானாம், ‘‘கொளுத்தும் வெயிலிலும்கூட நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் குளிர்ச்சியாய் இருக்கிறாய்?’’ என்று.
அதற்கு அந்த மண்பானை சொன்னது: ‘‘எனது ஆரம்பமும் மண்தான்; முடிவும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத் தையும் முடிவையும் உணர்ந்திருக் கிறானோ, அவன் எப்போதும் குளிர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனுமே இருப்பான்; வெம்மையிலும் வெறுப்பிலும் தகிப்பதில்லை!’’

மண்பானை சொன்னது அற்புதமான பாடம் நமக்கு. முதலும் முடிவும் மட்டுமல்ல நண்பர்களே… வாழ்வின் நடுப்பக்கத்திலும் நம்மை நாம் அறிய சில விஷயங்கள் உள்ளன.
அதில் முக்கியமானது, உண்மையை உள்ளபடி புரிந்துகொள்வது. 
ஒரு துறவிக்கு நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர்களில், சுரேஷ், ரமேஷ் என்று இரண்டு நண்பர்கள். வாரம் தோறும் குருநாதரைத் தரிசிப்பது அந்த நண்பர்களின் வழக்கம்.
ஒருநாள், குருநாதரிடம் சுரேஷ் கேட்டான்: ‘‘சுவாமி, பிரார்த்தனை பண்ணும்போது ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா?’’
குருநாதர் பலமாகத் தலையை அசைத்து, ‘‘கூடவே கூடாது’’ என்று கூறிவிட்டார்.
அடுத்ததாக ரமேஷ் கேட்டான்: ‘‘சுவாமி, ஸ்நாக்ஸ் சாப்பிடும்போது பிரார்த்தனை செய்யலாமா?’’
இதற்கு, ‘‘ஓ தாராளமாகச் செய்யலாமே’’ என்று மகிழ்ச்சியோடு அனுமதி அளித்தார் குருநாதர்.
சுரேஷுக்குக் குழப்பம். மீண்டும் குருநாதரிடம் சென்றான். ‘‘என்ன சுவாமி… அவன் கேட்டதுக்கு மட்டும் சரின்னு சொல்லிட்டீங்களே?’’ என்று கேட்டான்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அவனுக்குப் புரியவைத்தார் குருநாதர். அதாவது, ‘‘அவன் சாப்பிடும்போதும் பிரார்த்தனையை நினைக்கிறான். நீயோ, பிரார்த்தனை வேளையில் சாப்பாடு பற்றி எண்ணுகிறாய். இரண்டில் எது சிறப்பு என்பதை நீயே தீர்மானித்துக்கொள்” என்றார்.

புரிந்ததா நண்பர்களே? சுரேஷைப் போன்றுதான் பலரும் தவறானதைச் சரியானதாகவும், சரியானதைத் தவறாகவும் புரிந்துகொள்கிறார்கள். இன்னும் சிலருக்கு எது சரி, எது தவறென்பதே புரிவது இல்லை!
அடுத்த விஷயம்… நமது செயலை அன்பால் உன்னதமாக்குவது.
வீட்டைப் பூட்டிவிட்டு சுற்றுலா சென்று திரும்பியது ஒரு குடும்பம். அவர்கள் வீட்டுக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, சாவி தொலைந்துபோன விஷயம். மாற்றுச் சாவி ஒன்றும் உண்டு. ஆனால், அதுவோ வீட்டுக்குள் இருந்தது. வேறுவழியின்றி சுத்தியலால் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றது குடும்பம்.
உள்ளே வந்ததும் அலமாரியில் இருந்த மாற்றுச் சாவியை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்ட வீட்டுக்காரம்மாள், அதை மேஜையின் மீதிருந்த சுத்தியலின் அருகில் வைத்துவிட்டுச் சென்றார்கள்.
சுத்தியலுக்கோ கடும்கோபம். “நாம இல்லைன்னா இவங்க வீட்டுக்குள்ளேயே வந்திருக்க முடியாது. ஆனா, மரியாதை கொடுக்கிறது என்னவோ உனக்கா’’ என்று சாவியைப் பார்த்துக் கேட்டது.
அதற்கு, ஒரு புன்னகையோடு பதில் சொன்னது சாவி:  ‘‘நீ பூட்டோட மண்டையை உடைப்பாய். ஆனால், நானோ பூட்டோட இதயத்தைத் திறக்கிறேன். அதனாலதான் எனக்கு இந்த மரியாதை!’’
இங்கே செயல்பாடு ஒன்றுதான்; ஆனால், அணுகுமுறைகள் வெவ்வேறாக இருந்தன. எதையும் சாந்தமும், அன்பும் மேலிடச் சொல்லும்போதும், செய்யும்போதும் இலக்கை அடைவது எளிதாகும்; விளைவு நலமாகும்.
அந்தக் கல்லூரியில் வருஷத்துக்கு பாதிநாள் கூட வகுப்புகள் சரியாக நடக்காது. எப்போதும் ஏதேனும் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டியது இருக்கும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், பிரச்னையைச் சமாளிக்க தனக்குப் பதிலாக துணை முதல்வரை அனுப்பிவிடுவார் கல்லூரியின் முதல்வர்.

அந்தத் துணை முதல்வர், எப்போதும் வொயிட் அண்ட் வொயிட்டில்தான் கல்லூரிக்கு வருவார். முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் மாணவர்களும், அவரைப் பார்த்ததும் மிக பவ்வியமாக வணக்கம் வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக நகர்ந்துவிடுவார்கள். உடனே, துணை முதல்வர் மிகவும் கண்டிப்பானவர் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். மிகவும் சாதுவானவர் அவர். பிறகு எப்படி, அவரால் இந்தப் பசங்களை வழிக்குக் கொண்டுவர முடிந்தது?
எல்லோரிடமும் மிகவும் வாஞ்சையாகப் பேசுவார். அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களைத் திருத்த முயற்சிப்பார்.ஒரு கோஷ்டியைப் பற்றி வேறொரு கோஷ்டியினர் புகார் செய்தால், பொறுமையாக செவிமடுப்பார். அவர்களைப் பேசவிட்டு, அதில் இருந்தே தீர்வும் சொல்வார்.
ஆனால், நம்மில் பலரும் எதிரில் நிற்பவரைப் பேசவே விடுவதில்லை. தங்கள் கருத்தை சரியென்று நிரூபிப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். விளைவு, விவாதங்கள் கருத்துப் பகிர்தலாக இல்லாமல், கருத்துத் திணிப்பாகவே இருக்கும். முரண்பாட்டுக்கும், மன முறிதலுக்கும் அதுவே காரணமாகிவிடும்.
இந்த விஷயத்தில், அந்தக் கல்லூரி துணை முதல்வரின் ஆலோசனை நமக்கு உதவும். அவர் என்ன சொல்வர் தெரியுமா?
‘‘பொதுவா ஒருத்தரை முழுசா பேச விட்டுட்டோம்னாலே பாதி பிரச்னை தீர்ந்துடும். அதுக்கப்புறம் அவங்களைக் கையாள்றது ரொம்ப ஈஸி. பால் கறக்கணும்னா மாட்டோட மடியைப் பிடிச்சுக் கறக்கணும்; கொம்பைப் பிடிக்கக்கூடாது. இன்னிக்கு, நிறைய பேர் மத்தவங்க பிரச்னையைப் பற்றி கேட்பதற்குக்கூட தயார் இல்லை. அதான் பிரச்னையே’’ என்று சொல்வார்.
நிறைவாக ஒன்று… உலகில் எல்லாமே இரண்டாகவே உள்ளன. நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், பாவம்-புண்ணியம், பாஸிட்டிவ்-நெகட்டிவ், பூ-தலை எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.  வாழ்க்கையில் நமக்கு வரும் தடைகள், பிரச்னைகள், துயரங்கள் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும்போது, நாம் எப்படி செயல்படுகிறோம் என்பது இரண்டாம் பட்சம்தான். எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள் நண்பர்களே!

Advertisements
%d bloggers like this: