Advertisements

எம்.எல்.ஏ-க்கள் காட்டில் அடைமழை ஆரம்பம்!

ழுகார் வரும்போதே ஜெயலலிதா பற்றிய மருத்துவ அறிக்கைகளையும் கொண்டுவந்திருந்தார். ‘‘மறுபடி மறுபடி அறிக்கைகள் வெளியிட்டு மாட்டிக் கொள்கிறார்கள். இந்தச் சுழலில் இருந்து இந்த ஆட்சியும் அ.தி.மு.க-வும் அப்போலோவும் விடுபடவே முடியாது” என்றபடியே செய்திகளைக் கொட்டினார். 

‘‘தமிழக கவர்னர் நியமனத்தில் மத்திய அரசு இப்போதுதான் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதாம். கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு மூத்த பி.ஜே.பி நிர்வாகிகளின் பெயர் பட்டியல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டேபிளில் பல மாதங்களாகத் தூங்குகிறது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாகத்தான், அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்களாம். இடையில், உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் வந்ததால், மத்திய பி.ஜே.பி-யின் கவனம் அந்தப் பக்கம் திரும்பிவிட்டது. 11-ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியாகிறது. அதன் பிறகே, தமிழக கவர்னர் யார் என்பதை முடிவுசெய்வார்களாம்.’’

‘‘யாரை நியமிக்க இருக்கிறார்களாம்?’’
‘‘குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் படேல் பெயரை இறுதிசெய்ய இருக்கிறார்களாம். 2014-ம் ஆண்டில் மோடி பிரதமர் ஆனபோது, அவருக்குப் பதிலாக ஆனந்திபென் படேல் குஜராத் முதல்வர் ஆக்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தினார்கள். அதனால், அவரது ஆட்சி மீது விமர்சனங்கள் அதிகமானது. அதனால், ‘75 வயதைத் தாண்டியதை’க் காரணமாகக் காட்டி அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டார். இப்படி ரிட்டையர்டு ஆனவர்களை கவர்னர் போஸ்டில் உட்கார வைப்பது பி.ஜே.பி-யின் வழக்கம். வரும் டிசம்பரில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. படேல் இடஒதுக்கீடு விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கலாம் என பி.ஜே.பி நினைக்கிறது. அதற்கு வசதியாக ஆனந்திபென் படேலை, தமிழக கவர்னராக நியமித்து அதை சமாளிக்க நினைக்கிறார்கள். டெல்லிக்கு அவரை அழைத்து அமித் ஷா பேசிவிட்டாராம். அவரும் ‘தயார்’ என்றாராம்.’’
‘‘பாத்திமா பீவிக்குப் பிறகு, ஒரு பெண் கவர்னர் தமிழகத்துக்குக் கிடைக்கலாம்.’’
‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று அரசு விழாக்களில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டார். சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில், 1,450 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களைத் தொடங்கிவைத்தார். ஜெயலலிதாவைப்போலவே வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் தொடங்கி வைத்துள்ளார். இனி, மாவட்டம்தோறும் திட்டங்கள் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிகள் வரிசை கட்டுமாம். பட்ஜெட்டுக்கு முன்பே, மூவாயிரம் கோடி ரூபாய்க்குப் புதிய திட்டங்களைத் தொடங்க இருக்கிறார்களாம். எல்லாம் கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதிகள்தான்.’’
‘‘என்ன வாக்குறுதிகள்?’’
‘‘கூவத்தூர் ரிசார்ட்டில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்திருந்தபோது, பல வாக்குறுதிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அதில், ஒரு வாக்குறுதி ‘இனி நான்கு ஆண்டுகளில் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நாங்கள் உங்களுக்குச் செய்துதருவோம். இனி, அந்தந்தத் தொகுதிக்குள் நடக்கும் டெண்டர் வேலைகளை அந்தந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-க்களே கவனித்துக்கொள்ளுங்கள்’ என்பதுதான். ‘இதுவரை டெண்டர் வேலைகளில் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும்தான் கோலோச்சி வந்தார்கள். அதைப் பிடுங்கி உங்களிடம் தருகிறோம்’ எனச் சொன்னால், எம்.எல்.ஏ-க்கள் குஷியாக மாட்டார்களா?’’
‘‘ம்!’’
‘‘அதனால்தான் இனி மாவட்டம்தோறும் திட்டங்களை அறிவிக்க உள்ளார்கள். தொகுதிக்குத் தொகுதி பாலங்கள், கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன் மூலம் எம்.எல்.ஏ-க்கள் காட்டில் அடைமழைதான். ‘எடப்பாடி ஆட்சியை ஆதரித்த 122 எம்.எல்.ஏ-க்களுக்கான அரசாகத்தான் இருக்கும்’ எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அதன் தொடக்கம்தான் இந்த நலத்திட்ட தொடக்க விழா. எம்.எல்.ஏ-க்களை மட்டும் அல்ல… கட்சியின் நிர்வாகிகளையும் குஷிப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.’’
‘‘அவர்களுக்கு என்ன திட்டமாம்?’’
‘‘மாவட்டம்தோறும் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை முதலில் நிரப்ப முடிவாகியுள்ளது. அதன் முதற்கட்டமாக, சமூகநலத் துறை மூலம் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, மாவட்டத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை நியமிக்க உள்ளார்கள். இந்தப் பணிக்கு முதல் தகுதியே அ.தி.மு.க-வினர் தரும் பரிந்துரைதானாம். ஒவ்வொரு போஸ்டிங்குக்கும் இரண்டு லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டதாம். அணி மாறும் ஐடியாவில் உள்ளவர்களையும் இதன் மூலம் அமுக்கிவிடலாம் என்று கணக்கும் போட்டிருக்கிறார்கள். டெண்டர், போஸ்டிங் என அ.தி.மு.க-வினர் ஒரு ரவுண்டு வந்துவிடுவார்கள். ஆட்சியையும் சத்தம் இல்லாமல் நகர்த்திக்கொண்டுபோய்விடலாம் என்பதுதான் திட்டமாம்.’’
‘‘இதை எல்லாம் தெரிந்து கொண்டுதான் ஸ்டாலின் அறிக்கை விட்டாரா?’’
‘‘ஆமாம்! ஸ்டாலின் தனது அறிக்கையில்கூட ‘அ.தி.மு.க ஆட்சியில், டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை மருந்துக்குக்கூட இல்லை. டெண்டர் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து ஆளுங்கட்சிக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்குப் பணிகளைக் கொடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், டெண்டர் பணிகளை அமைச்சர்கள் சொல்பவர்களுக்கோ, அ.தி.மு.க-வினரின் விருப்பத்துக்கு உரியவர்களுக்கோ வழங்கப்படும் நிலை உள்ளது. புது வகையான நிபந்தனைகளைப் புகுத்தி, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்கிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 122 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுக்காகத்தான் டெண்டர் விஷயத்தில், அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால், டெண்டர் விவரங்களை தி.மு.க-வினர் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். தக்க நேரத்தில் உரிய ஆதாரங்களுடன் முறைகேடுகளை வெளியிடுவார்களாம்.’’
‘‘அமைச்சர்களுக்கு ஏதும் இல்லையா?’’
‘‘அமைச்சர் பதவி, சுழல் விளக்கு பந்தா போதாதா? அதை வைத்துதான் நிறைய சாதித்துக்கொள்ள முடியுமே! அமைச்சர்களுக்கு புதிதாக விலையுயர்ந்த டொயட்டோ கிரிஷ்டா கார்கள் 15 வந்து இறங்கிவிட்டன. மேலும் பதின்மூன்று கார்கள் அடுத்த வாரம் வர உள்ளன. அவரவர் துறையில், காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் பெறப்பட்டு, அதையெல்லாம் நிரப்புவதற்கு ஒப்புதலையும் வழங்கிவிட்டார்கள். விரைவில் அரசு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வரிசையாக வெளிவரும் என்கிறார்கள். ‘எல்லோரையும் அவிழ்த்துவிட்டு விட்டார்கள். என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்’ என்று சொல்லி வருகிறாராம் மாவட்டச் செயலாளர் ஒருவர்.’’
‘‘அ.தி.மு.க அலுவலகம் தினமும் பரபரப்பாக உள்ளதே?’’
‘‘டி.டி.வி.தினகரன் தினம்தோறும் கட்சி அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, மாவட்டவாரியாக கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகளை வரச் சொல்லி, அவர்களிடம் பேசுகிறார். ‘உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள்… நான் செய்து கொடுக்கிறேன்’ என்று இறங்கிவந்து பேசுகிறார். 96-ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு இதேபோல் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து மனுக்களை வாங்கினார் ஜெயலலிதா. அதே பாலிசியை இப்போது தினகரன் கையாண்டு வருகிறார். ஆனால், கூட்டம்தான் குறைவாக இருக்கிறது.’’
‘‘சசிகலா விவகாரத்தில் தேர்தல் கமிஷன் என்ன செய்யப் போகிறதாம்?’’
‘‘ ‘சசிகலாவை பொதுச்செயலாளராக  நியமித்தது சட்டப்படி சரிதான்’ என்று தேர்தல் கமிஷனுக்கு தினகரன் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், தினகரன் கடிதம் அனுப்பியதே சட்டப்படி செல்லாது என்று திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் அவர் அப்செட் ஆகிவிட்டார். ‘இப்படி சிக்கல் ஏற்படும் என்று முன்னரே தெரியாதா?’ என்று மூத்த நிர்வாகிகளிடம் சத்தம் போட்டுள்ளார் தினகரன். மீண்டும் அடுத்த கடிதத்தை தலைமை நிலையச் செயலாளர் பெயரில் அனுப்பும் திட்டத்தில் உள்ளார்கள். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டுத்தான் அ.தி.மு.க குறித்த முடிவுகளை தேர்தல் கமிஷன் எடுக்க உள்ளது.’’
‘‘சசிகலாவுக்கு எழுதிய கடிதத்துக்கு சசிகலா பதில் அனுப்பவில்லையா?”
‘‘இதுவரை இல்லை!” என்ற கழுகாரிடம், அதிகாரிகள் மாற்றம் பற்றிய தகவல்களைக் கேட்டோம்!
‘‘அதிகாரிகள் இடமாற்றம் எதிர்பார்த்த ஒன்றுதான். கூவத்தூர் ரிசார்ட்டில் நடந்த சம்பவங்கள்தான் அதிகாரிகள் இடமாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள். சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே, காவல்துறை வாகனங்கள் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸ் எதிரில் அணிவகுத்தன. வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணனும், காஞ்சிபுரம் எஸ்.பி முத்தரசியும் சசிகலாவை உடனடியாக ரிசார்ட்டிலிருந்து கிளம்ப வலியுறுத்தினார்கள். இதை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர். அதோடு நிற்காமல் உடனடியாக அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் ரிசார்ட்டிலிருந்து கிளம்பச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார் செந்தாமரைக்கண்ணன். அப்போது, கடுமையான வார்த்தைகளால் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் செந்தாமரைக்கண்ணனை அர்ச்சனை செய்தார்கள். அடுத்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி முத்தரசி, ‘ரிசார்ட்டில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இதுதான் இறுதியான முடிவு’ என்று அமைச்சர்களிடம் சொன்னார். ‘இன்னும் கொஞ்சநாள் பொறுங்க… நீங்க என்ன கதி ஆக போறீங்கன்னு பார்க்கலாம்’ என எம்.எல்.ஏ-க்கள் குரலை உயர்த்தினார்கள். முத்தரசியும் வேறுவழியில்லாமல் காவல்துறையினரை வெளியேறச் செய்தார். எம்.எல்.ஏ-க்களும் மந்திரிகளும் இருக்கும் ரிசார்ட்டினுள் காவல்துறையினரை குவித்தது, யாருடைய அனுமதியும் இல்லாமல் எம்.எல்.ஏ-க்களின் அறைகளை சோதனையிட்டது, எம்.எல்.ஏ-க்களை மிரட்டி வெளியேற்ற சொன்னது என எதையும் அமைச்சர்கள் ரசிக்கவில்லை. இதுதான் செந்தாமரைக்கண்ணனும் முத்தரசியும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதற்குக் காரணம் என்கிறார்கள். சில தினங்களுக்கு முன் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை அமைச்சர்கள் சென்று சந்தித்து வந்தார்கள். அப்போது அதிகாரிகள் இடமாற்றம் குறித்து சசிகலா அமைச்சர்களிடம் பேசினாராம். அதன்பிறகுதான் மாற்றம் இருந்தது என்கிறார்கள்”
‘‘அதிகாரிகள் தரப்பில் என்ன சொல்கிறார்களாம்?”
‘‘அதிகாரிகள் தரப்பில், ‘எம்.எல்.ஏ-க்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. கோர்ட் உத்தரவைப் பின்பற்ற வேண்டும். அதன்படியே நாங்கள் செயல்பட்டோம்’ என்று சொல்கிறார்களாம்.’’
“இதோடு அதிகாரிகளின் மாற்றம் நின்றுவிடுமா?”
“இதுதான் தொடக்கம். இனி அடுத்தடுத்து அறிவிப்பு வந்துகொண்டே இருக்கலாம் என்கிறார்கள். ஜெயலலிதா காலத்தில் பதவியில் அமர்ந்த அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருக்கமானவர்கள். அவர்கள் பன்னீருக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புண்டு. இதனால் ஆட்சிக்கே ஆபத்து வரலாம். அதனால் இப்போதிலிருந்தே அதிகாரிகளை மாற்றிவிட்டால் சர்ச்சை இருக்காது என நினைக்கிறார்கள்” என்றபடி பறந்தார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: