Advertisements

தெரிந்த விரதங்கள்… தெரியாத திருக்கதைகள்!

புராண முனிவராம் வேத வியாசர் முதற்கொண்டு முனிவர்கள் பலரும், மகரிஷிகளும் தங்களது நிகழ்கால அனுபவங்களையும், தங்களுடைய ஞான திருஷ்டியால் அறிந்துணர்ந்த அருள் சம்பவங்களையும் புராணங்களாகவும், ஞானநூல்களாகவும் தொகுத்தளித்துள்ளார்கள். அவற்றில் கூறப்பட்டிருக்கும் திருக்கதைகள் யாவும் வெறும் கதைகள் மட்டுமேயல்ல; நமக்கான வாழ்க்கைப் பாடங்கள்; பூமியில் பிறந்த மனிதர்கள் யாவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை – தர்மங்களைப் போதிக்கும் பொக்கிஷங்கள்.

விரதக்கதைகளும் அப்படித்தான்! தெய்வ விரதங்கள் நம் தேகத்தைச் செம்மையாக்கும் எனில், அந்த விரதங்களுக்கான காரணக் கதைகளும், அவற்றின் மகிமையைச் சொல்லும் திருக்கதைகளும் நம் உள்ளத்தைச் செம்மையாக்குவன. அப்படியான சில அற்புத விரதங்களும் விரதக்கதைகளும் இங்கே உங்களுக்காக.
கடவுள் பக்தியோடு நமது கலாசார மாண்பையும் எடுத்துச் சொல்லும் இந்தத் திருக்கதைகளை நீங்கள் படித்தறிவதோடு, உங்கள் சந்ததிக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
விரத வழிபாடுகளின் தத்துவங்களை, தாத்பரியங்களை அறிந்து வழிபடும்போது, அதற்கான பலன்களும் பன்மடங்காகப் பெருகும்!

மாங்கல்ய பலம் அருளும்…சாவித்ரி விரதக் கதை!


மா
சி மாதம் நிறைவடைந்து பங்குனி துவங்கும் வேளையில் கடைப்பிடிக்கப்படுவது சாவித்திரி விரதம். காரடையான் நோன்பு என்றும் சொல்வார்கள்.
பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் விரதம் இது. கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்; மனதுக்கினிய கணவர் வாய்ப்பார்.
காமாட்சியம்மனை (அம்பாளை) பிரார்த்தித்துச் செய்யப்படும் இந்த வழிபாட்டின் சிறப்பம்சங்கள் `காரடை’ நைவேத்தியமும், நோன்புச்சரடும். அதேபோல், விரதக் கதையைப் படிப்பதோ அல்லது கேட்பதோ மிக அவசியம்!

திருக்கதை…

மாளவ தேசத்தின் மன்னன் அஸ்வபதி. அவனுடைய மனைவி மாளவி. இந்தத் தம்பதிக்கு சாவித்ரிதேவியின் திருவருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குச் சாவித்ரி என்றே பெயரிட்டு, சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர்.

 

கல்வி ஞானத்தில் சிறந்தவளாக வளர்ந்த சாவித்ரி பருவ வயதை அடைந்தாள். சுயம்வரம் நடந்தது. ஆனால், அதில் கலந்துகொண்ட இளவரசர்கள் எவரும் சாவித்ரியின் மனதுக்குப் பிடித்தமானவர்களாக இல்லை.
இந்த நிலையில் ஒருநாள், கானகத்தில் ஓர் இளைஞனைக் கண்டாள் சாவித்ரி. வீரனாகவும் அழகனாகவும் திகழ்ந்த அவனையே தன் கணவனாக மனத்தில் வரித்தாள். அதுபற்றி பெற்றோரிடமும் கூறினாள்.
இந்நிலையில் அஸ்வபதியின் அரண்மனைக்கு நாரதர் விஜயம் செய்தார். அவரை வரவேற்று முறைப்படி உபசரித்த அரச தம்பதி, சாவித்ரி காட்டில் கண்ட இளைஞனைக் குறித்து விவரித்தனர். நாரதர் புன்னகைத்தார்.
சாவித்ரி கானகத்தில் கண்டது சாளுவதேசத்தின் ராஜகுமாரனான சத்தியவானையே என்றும், தற்போது அவனும் அவனுடைய பெற்றோரும் பகைவரிடம் தேசத்தை இழந்து, காட்டில் உறைகின்றனர் என்றும் தெரிவித்தார். அத்துடன், ‘‘சத்யவான் சிறந்த குணவான், வீரன் என்றாலும் அவனுக்கு ஆயுள் இன்னும் ஒரு வருடமே’’ என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
அஸ்வபதியும் மாளவியும் நடுங்கினர். அற்ப ஆயுள் கொண்ட சத்யவானை மறந்துவிடும்படி சாவித்ரியைப் பணித்தனர். ஆனால், அவளோ தனது நிலையில் உறுதியாக இருந்தாள். அஸ்வதிபதியும் அவரின் மனைவியும் மேற்கொண்டு அவளுக்கு அறிவுரை சொல்ல யத்தனித்தபோது, அவர்களைத் தடுத்த நாரதர், ‘‘மன்னா! விதியை மதி வெல்லாது. அகிலம் காக்கும் சாவித்ரிதேவியின் திருவுள்ளம் நமக்குத் தெரியாது. அவள் அருளால் பிறந்த உன் மகள் மகா பதிவிரதை. இவளால் சத்யவானின் குடும்பத்துக்கு நன்மை உண்டாகலாம். ஆகவே, இந்தத் திருமணத்தை நீ தடுக்காதே!’’ என்றவர், ‘‘அம்மா! இங்கே வா!’’ என்று சாவித்ரியை தனியே அழைத்தார்.
அவளிடம், ‘‘எம்பெருமாட்டியான சாவித்ரிதேவி அமைதியே வடிவானவள். சங்கு – சக்கரம் கொண்டவள். பக்தர்களைக் காக்க கதாயுதமும் தாமரையும் தாங்கியவள். மறக்காமல் அவள் வடிவத்தை மனதில் நினை.
சாவித்ரிதேவியின் புண்ணிய நாமத்தை ஐந்து லட்சம் முறை உருவேற்று. அவள் அருளால் சர்வ மங்கலங்களும் உண்டாகும்!’’ என்று உபதேசித்த நாரதர், அதற்குரிய வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தார்.
அத்துடன், ‘‘சாவித்ரி! இப்போது நான் சொல்வது மிக முக்கியம். உன்னுடைய மந்திர அனுஷ்டானங்களை அடுத்தவர் அறியாதபடி நடந்துகொள். இல்லையெனில் உன்னிடம் வளரும் சக்தி வீணாகிவிடும்!’’ என்று எச்சரிக்கையும் செய்தார் நாரதர்.
பின்னர், ‘‘உன் மகளின் விருப்பப்படியே கல்யாணத்தை முடித்து வை!’’ என்று அஸ்வபதிக்கு அறிவுரை கூறிச் சென்றார் நாரதர்.
நாரதர் அறிவுறுத்தியபடியே, வெகுவிரைவில் மகளையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு, சத்யவானும் பார்வையற்ற அவனுடைய பெற்றோரும் வாழ்ந்த காட்டை அடைந்தார் அஸ்வபதி.
அரண்மனையில் வாழவேண்டிய சத்யவான் குடும்பம் ஒரு குடிசையில் வாடுவதைக் கண்டு மனம் பரிதவித்தது அஸ்வபதிக்கு. அவர், சத்யவானின் தந்தையான துய்மத்சேனரைக் கட்டியணைத்து கண்ணீர் உகுத்தார்.
‘‘நான் உதவி செய்கிறேன். எதிரியின் மீது படையெடுங்கள்; நாட்டைக் கைப்பற்றுங்கள்’’ என்றும் வேண்டிக்கொண்டார். ஆனால், துய்மத்சேனரோ மறுத்துவிட்டார்.
பிறகு, தன் பெண்ணின் விருப்பத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டார் அஸ்வபதி.
துய்மத்சேனர் நெகிழ்ந்தார். ‘‘அஸ்வபதி… கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? இருந்தாலும், அரசையும் கண்களையும் இழந்து காட்டில் வாழும் எங்கள் துயரில் பங்கெடுக்க உங்கள் மகளைத் தியாகம் செய்ய எப்படி மனம் துணிந்தது உங்களுக்கு?’’ என்றார்.
‘‘துய்மத்சேனரே! இன்று உருண்டு ஓடும் செல்வம், நாளைக்கே திரும்பி வரும். நான் செல்வத்தைப் பற்றிச் சிந்திக்க வில்லை. நான் பேசுவது கல்யாணம் பற்றித்தான். குணநலன்களில் சிறந்த சத்யவானை மருமகனாக அடைவது பற்றி!’’ என்றார் அஸ்வபதி.

தலை அசைத்து இதற்கு ஒப்புக்கொண்ட துய்மத்சேனர், மகனை அழைத்து அவனது அபிப்பிராயத்தைக் கேட்டார். அவனோ தற்போதைய தனது நிலையைக் கருதி தயங்கினான். அப்போது நாரதர் அங்கு வந்துசேர்ந்தார்.
‘‘தயங்காதே இளைஞனே. அவளை மணம் செய்துகொள்!’’ என்று அன்புக்கட்டளையிட்டதுடன் அவர்களை ஆசீர்வதிக்கவும் செய்தார்.
நல்லதொரு முகூர்த்தத்தில் சத்யவானுக்கும் சாவித்ரிக்கும் காட்டில் கல்யாணம் நடந்தது. ஒருசில நாள்களில் அஸ்வபதி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பினார்.
‘மனதுக்குப் பிடித்த வாழ்வு. சாவித்ரிதேவியின் அருளால் கிடைத்த அற்புத வாழ்க்கை!’ என்று எண்ணியவாறு மாமனார்- மாமியாருக்கு மனமுவந்து பணிவிடை செய்தாள் சாவித்ரி; கணவனைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றினாள். அவளது கனிவான சேவைகளால், ‘காட்டில் வசிக்கிறோம்’ என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்படவில்லை.
எனினும், சாவித்ரியின் உள்மனம், சாவித்ரிதேவியின் திருவடிகளை இறுகப் பிடித்திருந்தது. நாரதர் உபதேசித்த மந்திரத்தை முறையாக உருவேற்றினாள். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் தூங்கினாள். மற்ற நேரமெல்லாம் தேவியின் மந்திரத்தை உருவேற்றிக் கொண்டிருந்தாள். நாரதர் குறித்த நாளும் நெருங்கியது. சத்யவானின் வாழ்நாளில் – நான்கு நாள்களே பாக்கி இருந்தன.

சாவித்ரி அஞ்சினாள். மூன்று நாள்களும் உணவு, தண்ணீர் உட்கொள்ளவில்லை. ‘‘அபயம்… அபயம்! சாவித்ரிதேவியே, என்றும் உள்ளவளே, மந்திர வடிவானவளே, முக்தி கொடுப்பவளே, பாவங்கள் போக்கிக் காப்பாற்றுபவளே, காப்பாற்று அம்மா! காப்பாற்று!’’ என்று அரற்றியபடி இருந்தாள்.
நான்காம் நாள். அதிகாலையில் எழுந்து நீராடினாள் சாவித்ரி. பூஜையை முடித்தாள். மாமனார் – மாமியாரை வணங்கினாள். அவர்களது அனுமதியுடன், தானும் சத்யவானுடன் கிளம்பினாள்.
‘‘என்ன இது? என்றும் இல்லாத திருநாளாக இன்று நீயும் என்னுடன் வருகிறாய். ஏன்?’’ என்று கேட்டான் சத்யவான்.
‘‘என்னவோ தெரியவில்லை. இன்று முழுவதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது’’ என்றாள் சாவித்ரி. சத்யவான் சிரித்தான்.
காட்டுக்குள் நுழைந்தனர். சற்று நேரம் விறகு வெட்டினான் சத்யவான். ‘‘வெட்டியது போதும். நான் கட்டி வைக்கிறேன்!’’ என்ற சாவித்ரி விறகுகளைக் கட்டத் தொடங்கினாள். சற்று நேரத்தில் ‘‘சாவித்ரி!’’ என்று காடே அதிரும்படி கத்தினான் சத்யவான். விறகை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்த சாவித்ரி திடுக்கிட்டபடி கேட்டாள்.
‘‘என்ன..? என்ன நடந்தது?’’
‘‘சாவித்ரி! கால்களில் பலமில்லை. கைகளில் சக்தி இல்லை. கண்கள் பஞ்சடைத்துப் போய்விட்டன. ஐயோ! அம்மா! அம்மா!’’ என்று உளறியபடியே மெள்ளச் சாயத் தொடங்கினான் சத்யவான்.
அவனைத் தாங்கிப்பிடித்த சாவித்ரி, தன் மடிமேல் கிடத்திக் கொண்டாள். அவள் உடல் நடுங்கியது. நாலா பக்கமும் பார்வையை வீசினாள். எருமை மாட்டின்மீது இருந்த யமன், பாசக்கயிற்றை வீசி சத்யவானின் உயிரைப் பற்றிக்கொள்வது தெரிந்தது. மடியில் இருந்த கணவனின் உடல் கட்டை போல் ஆனது.
‘‘ஐயோ!’’ என்று அலறினாள் சாவித்ரி.
யமன் நகர்ந்தான். சாவித்ரியின் வயிறு பற்றி எரிந்தது. புகைந்தது மனம். பொங்கி எழுந்தது புலம்பல். மணாளன் உடலை மென்மையாகக் கீழே இறக்கி வைத்துவிட்டு, எமதர்மனைப் பின்தொடர்ந்து ஓடினாள் சாவித்ரி.
‘‘ஐயா! ஐயா! யார் ஐயா நீர்?’’ – சாவித்ரி.
திடுக்கிட்ட யமன் திரும்பினான். உத்தமியான சாவித்ரியை உற்றுப் பார்த்தான். ‘‘அம்மா! என் உருவத்தைப் பார்க்கும் அளவுக்குப் புண்ணியம் செய்தவள் நீ. அதனால் என்னை ‘யார் நீ?’ என்று கேட்கவும் செய்கிறாய். நான் தென்திசை அதிபதி யமன். பாவிகளின் உயிரைப் பறிக்க என் தூதர்கள் வருவார்கள். சத்யவான் புண்ணியவான். அதனால் அவன் உயிரைப் பறிக்க நானே வந்தேன்!’’ என்று பதில் சொன்னான்.
‘‘ஐயா! உங்களுக்குத் தர்ம தேவன் என்று பெயர். யமதர்மன் என்றும் அழைப்பார்கள். நீங்கள் முறை தவறலாமா? என் கணவருடன் என்னையும் கொண்டு போங்கள். அதுதான் தர்மம்!’’ என்று சொல்லிக் குமுறினாள் சாவித்ரி. அவள் அழுகை விண்ணிலும் மண்ணிலும் எதிரொலித்தது. நாரதர் உபதேசித்த மந்திரத்தை இடைவிடாமல் உருவேற்றியதால் அவள் உடல் முழுவதிலும் சாவித்ரிதேவி வியாபித்து இருந்தாள். அந்த உணர்வே அவளின் ஆன்மக் குரலை, எங்கும் பரப்பியது.

அவளது இந்தச் சிறப்பை யமதர்மனும் உணர்ந்தான். மேலும், நிலை தடுமாறாத அவளது பேச்சைக் கேட்டு வியக்கவும் செய்தான்.
‘‘அம்மா! நீ சொல்வது சரியில்லை. உனக்கு இன்னும் ஆயுள் உள்ளது. இதற்குள் உன்னைக் கொண்டு போக எனக்கு உரிமை இல்லை. உத்தமமானவர்களைப் பார்த்த பின் அவர்களை வெறுங்கையோடு அனுப்புவது பாவம். ஆகையால், புண்ணியசாலியான நீ, வேறு ஏதாவது வேண்டுமானால் கேள்… தருகிறேன்!’’ என்றான் எமன்.
‘பளிச்’சென்று கேட்டாள் சாவித்ரி. ‘‘என் மாமனார் – மாமியாருக்குக் கண் தெரிய வேண்டும்!’’ என்றாள்.
‘‘அப்படியே நடக்கும்!’’ என்று வரம் தந்த யமன், மேலே நடக்கத் தொடங்கினான்.
பின்தொடர்ந்தாள் சாவித்ரி.
‘‘பெண்ணே! என்னைப் பின்தொடர்ந்து வருவது சரியில்லை அம்மா!’’ என்று தடுத்தான் யமன்.
‘‘தர்மதேவனே! என் மாமனாரின் ஆட்சி மறுபடியும் அவர் கைக்கு வருமாறு அருள்புரிய வேண்டும்!’’ என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் சாவித்ரி.
‘‘அப்படியே ஆகும்!’’ என்ற யமன், மேலே பயணத்தைத் தொடர்ந்தான். வாய் திறந்து அழுதபடியே அவனைப் பின்தொடர்ந்தாள் சாவித்ரி.
அப்போதும் யமதர்மன் தடுத்தான். ‘‘என்ன இது… ஸ்தூலமான உடம்போடு எனது உலகத்துக்கு நீ வருவது சரியல்ல; விரோதம். சொன்னால் புரியவில்லையே உனக்கு. என்னைப் பின்தொடராதே!’’ என்று சத்தமாகச் சொன்னான் யமன்.
சாவித்ரியோ அடுத்த வரத்தைக் கேட்டாள்: ‘‘ஸ்வாமி! என் பெற்றோருக்கு ஆண் குழந்தைகள் பலர் பிறக்க வேண்டும். அருள் செய்யுங்கள்!’’
‘‘உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்ற யமன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். கணவனுக்காகக் காலனைப் பின்தொடர்ந்தாள் சாவித்ரி.
அவள் இன்னமும் தன்னைப் பின்தொடர்வதைக் கண்ட யமன், ‘‘சாவித்ரி! நீ செய்வது அதர்மம்!’’ என்று கடிந்துகொண்டான்.
‘‘தர்மதேவதையே! எது அதர்மம்? மாங்கல்யப் பிச்சை கேட்கும் எனது செயலா அதர்மம்!’’ என்று வாதம் செய்த சாவித்ரி, தொடர்ந்து யமதர்மனை துதிக்கவும் செய்தாள். (யமாஷ்டகம் என்ற பெயரில் மிகவும் பிரபலமானது இந்தத் துதி)
‘‘பிரம்ம நிஷ்டரே! உங்களை அடைக்கலம் அடைகிறேன். அவரவர் செய்த செயல்களுக்கு ஏற்றபடி கர்மபலனைத் தரும் தர்மதேவதையே, தவம் செய்து தர்மத்தை வழிபட்டுச் சூரிய பகவான் பெற்றெடுத்த ஸ்வாமியே, அடைக்கலம்! சாட்சி மாத்திரமாகவே இருந்துகொண்டு, எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கும் வித்தகரே, அடைக்கலம்! நாசத்தை உண்டாக்கும் நமன் என்று பெயர் பெற்றவரே, அடைக் கலம்! காலத்துக்கு ஏற்றபடி காரியங்களைச் செய்து முடிவை உண்டாக்குபவரே, அடைக்கலம்! தகுதியற்றவர்களைத் தண்டிக்கும் தண்டாயுதம் தாங்கியவரே, அடைக்கலம்! வணங்கியவர்களைப் புண்ணியசாலிகளாக வாழ வைப்பவரே, அடைக்கலம்! பிரம்மத்தை தியானிக்கும் ஸ்வாமியே, அடைக்கலம்!’’ என்று துதித்தாள் சாவித்ரி. (யமாஷ்டகத்தின் கருத்துச் சுருக்கம் இது).
மேலும், ‘‘தர்மத்தின் வடிவமே! உங்களை தரிசனம் செய்தவர்கள், நினைத்ததையெல்லாம் அடைவார்கள் என்று புனிதமான வேதம் சொல்வது பொய்யாகலாமா? காப்பாற்றுங்கள்!’’ என்று அலறினாள் சாவித்ரி.
சாவித்ரியின் அலறல், அந்தகனை ஆட்டிப் படைத்தது. உத்தமியை உற்றுப்பார்த்தான். நடுங்கினான். குரூரமாகச் சூலம் ஏந்திய கோலத்தில் சாவித்ரியின் தலைக்கு மேல், உக்கிரமான வடி வில் காட்சியளித்தாள் சாவித்ரி தேவி. கற்பில் சிறந்தவள் சிந்திய கண்ணீர், தன் வாழ்வையே சிதற அடித்துவிடும் என்பதை உணர்ந்தான் யமன்; உள்ளம் நடுங்கியது.
‘‘பெண்ணே! சாவித்ரிதேவியின் அருளால் அவதரித்தவள் நீ. அந்த நீலமேனியாள் அருள் உன்மேல் நிழலாடுகிறது. உன் கணவனைத் திருப்பித் தந்தேன். குழந்தைகள் பலரைப் பெற்று, உன் கணவனுடன் நீண்ட காலம் வாழ்! உன்னைப் போல் சாவித்ரிதேவியை வழிபடும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வார்கள்; அவர்களின் கணவருக்கு ஆயுள் வளரும். ஆகாய வடிவிலான சாவித்ரிதேவியின் திருக்கரத்தில், கால தத்துவம் இருப்பதைப் பார்!’’ என்று சுட்டிக்காட்டிய யமன் அப்போதே அங்கிருந்து தன் உருவத்தை மறைத்துக்கொண்டான்.
மகிழ்ச்சியுடன் திரும்பினாள் சாவித்ரி. தரையில் கிடந்த கணவ னின் உடலை பழையபடி, தன் மடி மேல் வைத்துக்கொண்டாள். சற்று நேரத்தில், தூங்கி எழுபவன் போல விழித்தெழுந்தான் சத்யவான்.
மேலும் யமதர்மன் அளித்த வரத்தின்படி, சத்யவானின் பெற்றோருக்குப் பார்வையும் அவர்கள் தேசமும் மீண்டும் கிடைத்தன. மிக சந்தோஷமான வாழ்க்கை, அவர்கள் வசமானது!
சாவித்ரி வரம் வாங்கிய விதத்தை வேறுவிதமாகவும் சொல்வர்.
சாவித்ரியிடம், “சத்யவானின் உயிரை திருப்பித் தர முடியாது. வேறு வரம் வேண்டுமானால் கேட்டு வாங்கிக்கொள்” என்று யமதர்மன் வாக்களிக்க, “என் குழந்தையை என் தந்தையார் தன் மடியில் வைத்துக் கொஞ்சுவதை நான் பார்க்க வேண்டும்” என்று சாவித்ரி சாமர்த்தியமாக ஒரு வரத்தைக் கேட்டு, சத்யவானின் உயிரை மீட்டாள் என்றும் இந்தக் கதையைச் சொல்வது உண்டு.
எது எப்படியோ, சாவித்ரியின் இறை பக்தியும், பதிபக்தியுமே அவள் கணவனை மீட்டுக்கொடுத்தன என்பதில் மாற்று இல்லை. சாவித்ரி விரதம் கடைப்பிடிக்கும் பெண்மணிகள், அற்புதமான இந்தத் திருக்கதையையும் அவசியம் படித்து வழிபடுங்கள். அம்பாளின் திருவருளால், உங்களது வாழ்வில் சகல நலன்களும் உண்டாகும்.

ஹோலி பண்டிகையின் திருக்கதை!
மாசி மாத பௌர்ணமி அன்று ஹோலி கொண்டாடப் படும். வடக்கே மும்பை, கொல்கத்தா முதலான பகுதிகளில், மூன்று நாள்களுக்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிடும்.
வண்ண வண்ணப் பொடிகளையும் சாயம் கலந்த தண்ணீரையும் ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொள்வார்கள். ஒரே குதூகலமாக இருக்கும். இந்த ஹோலி பண்டிகையைக் குறித்த வரலாறு:
நாராயண நாமத்தையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த பக்த பிரகலாதனின் திருக்கதை தெரியும்தானே. அவன்மீது கடுங்கோபம் கொண்ட இரண்யகசிபு, அவனை ஹோலிகா என்ற அரக்கியிடம் ஒப்படைத்தான்.

அவள், இரண்யகசிபுவின் உறவுக்காரப் பெண். குழந்தைகளைக் கொன்று தின்பதே இவள் வழக்கம். நெருப்பும் இவளை எரிக்க முடியாது! பிரகலாதனைக் கையில் தூக்கிக்கொண்ட ஹோலிகா, ‘‘மன்னா! இன்னும் சற்றுநேரத்தில், இந்தப் பயல் சாம்பலாகப் போகிறான்!’’ என்று கூவியபடியே, கொழுந்து விட்டு எரியும் தீயில் குதித்தாள். தீயால் தன்னை எரிக்க முடியாது என்ற தைரியம் அவளுக்கு.
ஆனால், இறைசக்தி அவளது வல்லமையை நீக்கியது. தீயில் குதித்த மறுகணம், அவளை எரித்துச் சாம்பலாக்கினார் அக்னி பகவான். பிரகலாதனோ எந்தத் தீங்கும் இல்லாமல், தீயிலிருந்து வெளி வந்தான். இதையொட்டி, இன்னும் வடமாநிலங்களில் ‘ஹோலிகா’ கொடும் பாவி கட்டிக் கொளுத்துகிறார்கள்.
ஆக, நல்லவற்றுக்கு அழிவு கிடையாது; தீயவற்றுக்கு என்றும் வாழ்வு கிடையாது என்பதை விளக்கும் விதமாகக் கொண்டாடப்படுகிறது ஹோலி பண்டிகை.

அமாவாசை ஏற்றம் பெற்ற திருக்கதை!

ங்கை, காவிரி போல புண்ணியவதி, அச்சோதை என்ற தெய்வ மங்கை. மரீசி மகரிஷியின் மக்களான பித்ரு தேவதைகளிடம் பக்தி கொண்ட அவள், பித்ரு தேவதைகளை தரிசிக்க விரும்பினாள். அதற்காக அவள் `அச்சோதம்’ என்ற நதிக்கரையில் கடுந்தவம் செய்தாள்.
அதனால் மனமிரங்கிய பித்ரு தேவதைகள், ஒரே நேரத்தில் அவளுக்குக் காட்சி அளித்தனர். ‘என்ன களை… என்ன அழகு… என்ன கம்பீரம்!’ என்று அவர்களைப் பார்த்து வியந்தாள் அச்சோதை. அவர்களில் `மாவசு’ என்ற பித்ரு தேவதையின் கம்பீரமான வடிவம், அவளை மிகவும் கவர்ந்தது. உடனே அவள் மனம் பேதலிக்கத் தொடங்கியது. ‘இவரே (மாவசு) எனக்குக் கணவராக வாய்த்தால் வாழ்க்கை எவ்வளவு இன்பமயமாக விளங்கும்!’ என்று நினைத்தாள்.
அதை உணர்ந்த மாவசு, ‘தெய்வ மங்கை ஒருத்தி, இப்படி நடந்துகொள்கிறாளே!’ என்று கோபம்கொண்டான். ‘‘மனிதப் பிறவி போல் நடந்துகொண்ட உனக்கு இனி சொர்க்கத்தில் இடம் இல்லை!’’ என்று கூறி அவளைப் பிடித்து பூமியில் தள்ளினான்.
அதனால் அலறித்துடித்த அச்சோதை, ‘‘இந்தச் சிறு தவறுக்கு இவ்வளவு கடும் தண்டனையா? எனது இத்தனை வருட தவத்துக்கு பலனே கிடையாதா?’’ என்று கேட்டாள்.

மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. சொர்க்கத்திலிருந்து பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த அச்சோதை, அந்தரத்தில் அப்படியே அசையாமல் நின்றாள். அங்கிருந்தபடி அவள் மீண்டும் கடுந்தவம் புரிந்தாள்.
தவத்தை மெச்சிய மாவசு அவளுக்கு தரிசனம் தந்தான். ‘‘மகளே! உன் தவறை மன்னித்தோம். உனக்குச் சோதனை ஏற்பட்ட நாள் இனி அமாவாசை என்று உலகத்தாரால் அறியப்படட்டும்!’’ என்று கூறி மறைந்தான்.
அச்சோதை மீண்டும் தவத்தைத் தொடர்ந்தாள். அதன் பலனாக பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், பித்ரு தேவதைகள் அனைவரும் அவளுக்கு மீண்டும் தரிசனம் கொடுத்தனர். மீண்டும் ஒருமுறை அவர்களிடம் மன்னிப்புக் கோரிய அச்சோதை, அவர்களது ஆசீர்வாதத்தை வேண்டினாள்.
பித்ரு தேவதைகள் அப்படியே செய்ததுடன், ‘‘அச்சோதை! பாவத்துடன் உன்னை நெருங்கும் தேவர்களின் பாவத்தை ஏற்று, அவர்களைப் புனிதப்படுத்துவாயாக! துவாபர யுகத்தில் நீ, மீன் வயிற்றில் பிறப்பாய். அப்போது உன் பெயர் மச்சகந்தியாக இருக்கும். பராசரன் என்ற முனிவரை மணந்து, வியாசர் என்ற மாமுனிவரின் தாய் ஆவாய். பின்பு சந்தனு மகராஜாவின் தேவியாகி இரண்டு புத்திரர்கள் பெறுவாய்! அதன் பிறகு புண்ணிய நதியாக மாறுவாய்! உனக்கு இக்கட்டு நேர்ந்த அமாவாசை தினத்தில் எவரெவர் தம் முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்கிறார்களோ, அவர்களை நாம் ஆசீர்வதிக்கிறோம். அந்த முன்னோரும் தங்கள் சந்ததியை வாழ வைப்பார்கள்!’’ என்று வாழ்த்தி மறைந்தனர்.
அமாவாசை தினம் புண்ணியம் பெற்றது இப்படித்தான். இந்த தினத்தில் பிதுர்களுக்கு உரிய வழிபாடுகளைச் செய்து, அவர்களின் ஆசியைப் பெற வேண்டும். இதன்மூலம் நமது வாழ்க்கை மட்டுமல்ல, நம் சந்ததியினரின் வாழ்க்கையும் வளம் பெறும்.

ஆனந்தம் அருளும் அங்காரக சதுர்த்தி!

சிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒருநாள்… நர்மதையில் நீராடிக்கொண்டிருந்த தேவ மங்கை ஒருத்தியைக் கண்டு மோகித்த பரத்வாஜர், அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று, இல்லறம் நடத்திவந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததும் அந்தப் பெண் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு, நர்மதைக் கரைக்குச் சென்று தவத்தைத் தொடர்ந்தார்.
இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி அரவணைத்து வளர்த்தாள். குழந்தையின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு ‘அங்காரகன்’ என்று பெயர் சூட்டினாள்.
அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒருநாள், ‘`அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!’’ என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ‘`குழந்தாய்… உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!’’ என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.
அங்கு முனிவரைச் சந்தித்தவள், ‘’முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’ என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக்கொண்டார்.
அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்துவைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

இதன் பிறகு… தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். ‘தவமே சிறந்த வழி’ என்ற பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார்.
அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது.
மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாதக் கமலங்களை பணிந்த அங்காரகன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றியதுடன், சில வரங்களையும் வேண்டினான்.
‘`விக்னராஜனே… நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வமங்கலமான திருவுருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், ‘மங்களன்’ என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!’’ என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.
அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ‘’அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், ‘அங்காரக சதுர்த்தி’யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்னங்களை அடியோடு விலக்குவேன்!’’ என்று அருளி மறைந்தார்.
விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் அந்த விநாயகருக்கு, ‘மங்கள விநாயகர்’ என்ற பெயர் வந்தது.
இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்… விரைவிலேயே, நவகிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.
எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; விநாயகருக்கு மிக உகந்தது.
இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது.

சங்கடஹர சதுர்த்தி விரத மகிமையை பல்வேறு நூல்கள் விளக்குகின்றன.
மாசி மாதம்- தேய்பிறையில்… செவ்வாய்க்கிழமையுடன் கூடி வரும் சதுர்த்தி திதி துவங்கி ஒரு வருட காலம் விதிப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
இந்த விரதத்தை துவங்கும் நாளன்று, சூரியன் உதிப்பதற்கு ஐந்து நாழிகைக்கு முன்பே உறக்கத்திலிருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து புண்ணிய நதியில் நீராட வேண்டும். பிறகு, சிவ சின்னங்களை அணிந்துகொண்டு விநாயகரை தியானிக்க வேண்டும்.விநாயகரின் ஓரெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களில் ஏதாவது ஒன்றை… இவற்றை அறியாதவர்கள், விநாயகரின் புனித நாமங்களை அன்று முழுவதும் இடைவிடாமல் ஜபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதே மேல். அன்று இரவு உறங்குவதும் கூடாது. விநாயகப் புராணத்தைப் பாராயணம் செய்வது நல்லது.
இவ்வாறு இந்த அரிய விரதத்தை மன உறுதியோடு ஓராண்டு காலம் கடைப்பிடித்தால், இன்னல்கள் அகலும். செல்வம், கல்வி மற்றும் செல்வாக்கு ஓங்கும். கூன் – குருடு போன்ற குறைபாடுகள் நீங்கி நலம் பெறலாம். கடன் தொல்லை, நோய், பகை முதலானவை அகன்று நலமுடன் வாழலாம். இதுவே சங்கடஹர சதுர்த்தியின் சாரம்.
விப்ரதன் என்ற வேடன், `முற்கல’ முனிவரிடம் கணேச மந்திர உபதேசம் பெற்று ஆயிரம் ஆண்டுகள் தியானித்தான். அதன் பலனாக ‘புருசுண்டி’ என்ற பெயருடன், விநாயகரை குருவாகக்கொண்டு ஞானோபதேசம் பெற்று முக்தி அடைந்தான். அவன் அனுஷ்டித்தது சங்கடஹர சதுர்த்தி விரதம்.
ரசன் கிருதவீர்யன், அத்ரி முனிவரிடம் இந்த விரதத்தை உபதேசமாகப் பெற்று புத்திரப்பேறு எய்தி மகிழ்ந்தான்.
சூரசேனன் எனும் அரசன், இந்திரன் வாயிலாகக் கேட்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்று முக்தி அடைந்தான்.
பெற்ற அன்னையையே கொலை செய்த ‘புதன்’ எனும் அந்தணன், குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டான். இவன் மேல் இரக்கம்கொண்ட சூரசேன மகாராஜா… அந்தணனுக்கு, கணபதி மந்திரம் உபதேசித்து, சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்குமாறு பணித்தார். அதன்படியே செய்து நோய் நீங்கி பல்லாண்டு வாழ்ந்து முடிவில் முக்தி அடைந்தான் அந்தணன் புதன்.

ஸ்ரீசத்யநாராயண விரதக்கதை!
கவான் ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த மகிமை பெற்றது இது. மாதந்தோறும் பௌர்ணமி அன்று மாலையில் சந்திர உதய காலத்தில் சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி, தீபாவளி ஆகிய நாள்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், இதன் மகிமையைச் சொல்லும் கதையையும் அவசியம் படிக்க வேண்டும்.
நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் ‘சத்ர’ யாகம் நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள், அரசர்கள், அடியார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் சூதபௌராணிகர் (புராணங்களையெல்லாம் சொல்பவர்) என்பவர் இந்தக் கதைகளைக் கூறியதாக ஞான நூல்கள் தெரிவிக்கின்றன.

மிகுந்த செல்வம், பலம் பொருந்திய ஏராளமான படைகள், அன்பான மனைவி – குழந்தைகள் என எல்லாம் கொண்டவன் மன்னன் துங்கத்வஜன்.
கர்வம் மிகுந்த இந்த மன்னன், ஒருநாள் காட்டில் வேட்டையாடி விட்டுத் தண்ணீர் குடித்துக் களைப்பைத் தீர்த்துக்கொண்டு திரும்பும்போது, ஆலமரம் ஒன்று தென்பட்டது, அங்கிருந்து பல்வேறு குரல்கள் கேட்டன. மன்னன் ஆல மரத்தை நோக்கிப் போனான். மர நிழலில் இடையர்கள் பலர் ஒன்று சேர்ந்து, சத்யநாராயண பூஜை செய்து கொண்டிருந்தனர்.
அருகில் நெருங்காமல் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில் உட்கார்ந்த மன்னன், அந்த பூஜையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.

பூஜை முடிந்தது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரசாதம் சாப்பிட்டார்கள். சற்றுத் தூரத்தில் இருந்த மன்னனைப் பார்த்த அவர்கள், பிரசாதத்தை ஓர் இலையில் வைத்து அவனிடம் கொடுத்தார்கள். அதை வாங்கிய அரசன் சாப்பிடவில்லை.
‘ஹும்! இடையர்கள், தந்ததை நாடாளும் மன்னனான நான் சாப்பிடுவதா? இதனால் என்ன லாபம்?’ என்று கர்வதோடு பிரசாதத்தை அங்கேயே போட்டுவிட்டு, அரண்மனைக்குத் திரும்பினான். அங்கே அவனை அதிர்ச்சி வரவேற்றது. அவனது நாட்டை, மாற்றான் ஒருவன் கைப்பற்றிவிட்டான். தங்களுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி, மன்னனின் மனைவி-மக்கள் எங்கேயோ ஓடி மறைந்து விட்டார்கள்.
இப்படியான அடி, மன்னனை சிந்திக்க வைத்தது. ‘‘இதற்கெல்லாம் காரணம், எனது அகம்பாவம்தான். சத்ய நாராயண பூஜையை அலட்சியப்படுத்தி, இடையர்கள் தந்த பிரசாதத்தைச் சாப்பிடாமல் தூக்கிப் போட்டுவிட்டு வந்ததன் விளைவே இது!’’ என்று சொல்லிக்கொண்டு ஆலமரத்தை நோக்கி ஓடினான் மன்னன்.

மரத்தடியை அடைந்ததும், ‘‘தெய்வமே! மன்னித்துவிடு. தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது ஏது? உத்தம பக்தர்களான இடையர்களைப் போய், தாழ்வாக நினைத்தேனே! அவர்களை அவமானப்படுத்தியது, ஆண்டவனான உன்னையே அவமானப்படுத்தியதற்குச் சமம் என்பதைப் புரிந்து கொண்டேன். பெருமாளே! இன்று முதல் நானும் சத்யநாராயண பூஜையை முறையாகச் செய்வேன்!’’ என்று அழுது தொழுதான்.
கையில் கிடைத்தவற்றைக் கொண்டு சத்யநாராயண பூஜைக்கு ஏற்பாடு செய்த மன்னன், இடையர்களை அழைத்து, எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் சத்ய நாராயண பூஜையைச் செய்தான். நைவேத்தியப் பிரசாதத்தைத் தானும் உண்டு, அவர்களுக்கும் கொடுத்தான்.
அவமானப்படுத்தியபோது தண்டித்த ஆண்டவன், மன்னன் திருந்தியபோது அவனுக்கு அருள் பொழியவும் தவறவில்லை. பகைவரால் கைப்பற்றப்பட்ட நாடு, விரைவில் அந்த மன்னனுக்குக் கிடைத்தது.  பயம் நீங்கியதால் மனைவி, மக்களும் திரும்பி வந்தார்கள். அதன் பிறகு சத்யநாராயண விரதத்தைத் தொடர்ந்து செய்து, முக்தி அடைந்தான் அந்த மன்னன்.

தொகுப்பு: சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

Advertisements
%d bloggers like this: