Advertisements

உளவுத்துறைக்கு வரத் தயங்கும் உயர் அதிகாரிகள்!

ழுகார் காட்சியளித்ததும், ‘‘உள்ளாட்சித் தேர்தல் வருமா?’’ என்று கேள்வியை வீசினோம்.         ‘‘ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அனல் பறக்கப் போகிறது. உள்ளாட்சித் தேர்தலா இப்போது முக்கியம்?’’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டவர், ‘‘நீர் நல்லாத்தான் தலைப்பு போட்டீர். ‘121 முதல்வர்கள்… 1 எம்.எல்.ஏ’ என்று! அதுதான் இப்போது நடக்க ஆரம்பித்துள்ளது’’ என்ற பீடிகையுடன் தொடங்கினார் கழுகார்.
‘‘அப்படியா?’’

‘‘ஆட்சிக் கவிழ்ப்பு பூச்சாண்டியை சில அமைச்சர்களே இப்போது காட்டிவருகிறார்கள். இதனால், எடப்பாடி பழனிசாமி தன் முதல்வர் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என நினைக்க ஆரம்பித்துவிட்டார். வரிசையாக சில விஷயங்களைச் சொல்கிறேன்…
தமிழகத்தின் சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவிகளைப் பிடிக்கப் பெரிய லெவலில் மூட்டைகளுடன் பலர் அலைகிறார்கள். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பிடி, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வசம் உள்ளது. இந்த விவகாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் புறக்கணித்துவிட்டு அன்பழகனே எல்லாம் செய்துகொள்கிறார் என்று கோட்டை வட்டாரத்தில் சொல்கிறார்கள். அதேபோல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் துறையில் கான்ட்ராக்டர் பிரச்னை கொடிகட்டிப்பறக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனிக் கச்சேரி நடத்திவருகிறார். இதையெல்லாம் பார்த்து எடப்பாடி பழனிசாமி, முகம் வெளிறிப் போயிருக்கிறாராம்.
122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவில் ஆட்சி நிற்கிறது. ஆறு எம்.எல்.ஏ-க்கள் ஆட்டம் காட்டி னால், ஆட்சி காலி. இதைப் புரிந்துவைத்திருக்கும் சில அமைச்சர்கள், ஐந்து எம்.எல்.ஏ-க்களைத்  தங்கள் கஸ்டடியில் வைத்துக்கொண்டு, பூச்சாண்டி காட்டுகிறார்களாம். செல்வாக்கான அமைச்சர் ஒருவருக்கு, முதல்வர் பதவி மீது ரொம்ப நாள் காதல். அவர் கண்ணசைவில் ஆறு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களாம். சசிகலா சிறைக்குப் போவது உறுதியானவுடன்… ‘முதல்வர் நான்தான்’ என்று சொன்னபடி, தில்லாலங்கடி வேலையில் இறங்கினார். அதுவரை அவரின் அடைகாத்தலில் இருந்த ஆறு எம்.எல்.ஏ-க்களில் மூன்று பேரை முதற்கட்டமாக ஓ.பன்னீர்செல்வம் அணிக்குப் போகச் சொன்னாராம். அடுத்த கட்டமாக, மீதி மூவரை போகச் சொல்லிவிட்டு… ‘பன்னீர் முகாமில் உள்ள ஆறு பேர் என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் நம் அணிக்கு வரவேண்டுமானால், எனக்கு முதல்வர் பதவி வேண்டும்’ என்று பேரம் பேசுவதுதான் இவரின் திட்டமாம். சசிகலா மின்னல் வேகத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்துவிட்டார். இரண்டு நாட்கள் சசிகலா தாமதம் செய்திருந்தால், அந்த அமைச்சர் தனது திருவிளையாடல்களை அரங்கேற்றியிருப்பார். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனதால், தற்போது கடுங்கோபத்தில் இருக்கிறாராம் அவர்.
முதல்வரை தனது துறையில் தலையிட அனுமதிப்பதில்லையாம். அதிகாரிகளிடம் எரிந்து விழுகிறார். கிராம லெவலில் நடந்துவரும் ஓர் அரசுத் திட்டத்தை, லோக்கல் கட்சிக்காரர்கள் கான்ட்ராக்ட் எடுத்து நாலு காசு பார்த்து வந்தார்கள். இப்போது அந்த நிலையை மாற்றி, மாவட்ட லெவல் என்று ஆக்கி விட்டார்களாம். கான்ட்ராக்ட் மூலம் வருமானம், ஒரு சில பணக்காரர்களுக்குப் போகப்போகிறது. இப்படி அந்த அமைச்சர் பற்றி விலாவாரியாகச் சொல்கிறார்கள். இப்படி கோட்டையில் அமைச்சர்களுக்குள் அதிரடிகள் தொடங்கிவிட்டன!’’
‘‘முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு வாரியத் தலைவர் பதவி அறிவிப்பு வெளியாகப் போகிறது என்றெல்லாம் சொன்னார்களே? எங்கே பிரேக் விழுந்தது?’’
‘‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கன்சல்ட் பண்ணாமலேயே அவரது துறையில் வாரியப் பதவியை வழங்க முதல்வர் பழனிசாமி ரெடியானாராம். தகவல் தெரிந்ததும், வேலுமணி டென்ஷன் ஆகிவிட்டாராம். அவரை கூல் செய்வதற்காக பத்து தடவைக்கு மேல் எடப்பாடி பழனிசாமி போன் செய்துள்ளார். ஆனால், அவரால் தொடர்புகொள்ளவே முடியவில்லையாம். இதனால் கோகுல இந்திராவுக்கான ஆர்டர் மார்ச் 9-ம் தேதி வரை நட்டாற்றில் நிற்கிறது.’’
‘‘கோகுல இந்திராதான் தினகரனுக்கு மிக வேண்டியவர் ஆச்சே?”
‘‘ஆமாம்! காலம் கடந்தாலும் நல்லது கனியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாராம் கோகுல இந்திரா!”
‘‘சமீபத்தில்கூட சேலத்தில் நடந்த அரசு விழாவில் எடப்பாடி பழனிசாமியும் வேலுமணியும் ஒன்றாக மேடையில் இருந்தார்களே?’’
‘‘ஆமாம். அது வேறு… இது வேறு!

வேறு சில அமைச்சர்களின் கதைகளைச் சொல்கிறேன். தந்தைக்காக மகன்… அண்ணனுக்காக தம்பி என்று கான்ட்ராக்ட்களில் அமைச்சர்கள் இருவரின் பெயர் ரிப்பேர் ஆகிவருகிறது. டெல்டா ஏரியா அமைச்சர் ஒருவரின் தந்தை, அந்த ஏரியாவில் பிரபல கான்ட்ராக்டர். அவர்தான் கான்ட்ராக்ட்களை மற்றவர்களுக்குப் பிரித்துக்கொடுத்து, கமிஷனை கலெக்ட் செய்வாராம். அண்மையில், அவருக்கும் சில கான்ட்ராக்டர்களுக்கும் திடீர் உரசல். அமைச்சருக்குத் தகவல் போனதும், போலீஸில் புகார் தரச் சொல்லிவிட்டாராம். ‘தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பதாக’ ஒரு அரசு அதிகாரி புகார் தர, அமைச்சரின் தந்தையோடு மோதிய கான்ட்ராக்டர்கள் மீது வழக்கு பாய்ந்தது. தமிழகம் முழுக்க உள்ள கான்ட்ராக்டர்களுக்கு இந்த விவகாரம் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் இன்னோர் அமைச்சர். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அந்த அமைச்சரின் அண்ணன் சதிராட்டம் போடுகிறாராம். அந்த ஏரியாவில் அரசு கான்ட்ராக்ட் எதுவானாலும் அண்ணாரின் கையில்தான் ரிமோட் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.’’
‘‘அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமியால் லகான் போட முடியவில்லை என்பது தெளிவாகிறது. அவர் ஒரு சூழ்நிலைக் கைதிபோல தெரிகிறார். வேறு யார்தான் லகான் போடமுடியும்?’’
‘‘அம்மா இல்லை, சின்னம்மாவும் சிறைக்குப் போய்விட்டார், அடுத்து ஆட்சிக்கு வருவோமோ மாட்டோமோ என்ற கலக்கத்தில் பலரும் கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், யார் பேச்சையும் யாரும் கேட்பது இல்லை என்கிறார்கள்!’’
‘‘ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் உண்ணா விரதத்துக்கு கும்பல் அலைமோதியதாமே?” என்றோம்.
‘‘ஆமாம்! இது பன்னீர்செல்வம் அணியே எதிர்பாராத கூட்டமாம். உண்ணாவிரதத்துக்கு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கலாம் என்று முதலில் தினகரன் திட்டமிட்டாராம். ஆனால், அனைத்து ஊர்களிலுமிருந்து வந்த உளவுத்துறை ரிப்போர்ட், பன்னீர் போராட்டத்துக்கு ஆதரவு அதிகம் என்பதுபோலவே இருந்தது. அதற்கு அனுமதி மறுப்பதன் மூலம் பிரச்னை அதிகமாகலாம் என்று யோசித்த தினகரன் தரப்பு, அமைதியாக இருந்துவிடுவதே நல்லது என்று முடிவெடுத்துவிட்டதாம். நிறைய ஊர்களில் லோக்கல் ஆட்கள் முதன்முதலாகத் தங்கள் படங்களைப் போட்டு போஸ்டர்கள், கட் அவுட்டுகள் வைத்து மகிழ்ந்தார்கள். இவை அனைத்தும் சேர்ந்து பன்னீருக்கு செல்வாக்கை கூட்டிக் கொடுத்து விட்டது. அ.தி.மு.க-வில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்,         எம்.எல்.ஏ-க்கள் ஆகியோரால் யாரெல்லாம் அடக்கிவைக்கப்பட்டு இருந்தார்களோ, அவர்கள் அனைவருக்கும் ஆபத்பாந்தவராக மாறிவிட்டார், பன்னீர்!”
‘‘இந்தப் போராட்டத்தில் எவ்வளவு பேர் பங்கேற்றதாக உளவுத்துறை சொல்கிறதாம்?”
‘‘தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டதாக உளவுத்துறை ரிப்போர்ட் போட்டுள்ளது. எப்போதும், யதார்த்த நிலையைவிட மூன்று, நான்கு மடங்கு குறைத்துச் சொல்வதுதான் உளவுத்துறையின் வழக்கம். பன்னீர் ஆட்களிடம் விசாரித்தால், தமிழகம் முழுவதும் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டனர் என்கிறார்கள்!”
‘‘ஜெயலலிதா விவகாரம் தவிர மற்றவற்றில் உஷாராக இருக்கிறாரே பன்னீர்?”
‘‘நீர் சொல்வது சரிதான்! மத்திய அரசுக்கு எதிரான எந்த விவகாரத்தையும் கையில் எடுப்பதில்லை. நெடுவாசல் போராட்டம் பற்றி மனுஷன் இதுவரை வாயே திறக்கவில்லை. நேரிலும் போகவில்லை. அதேபோல், இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இளம் மீனவர் பிரிட்ஜோ மரணம் அடைந்தார். இந்த விஷயத்திலும் மத்திய அரசைக் கண்டித்து பன்னீர் ஏதும் பேசவில்லை. பி.ஜே.பி-யின் மனம் நோகாமல் செயல்படும் ஆளாக பன்னீர் இருப்பதுதான் ஆளும்கட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.”
‘‘அதிகாரிகளின் பணியிடமாற்றம் பல இடங்களில் நடந்தாலும் உளவுத்துறையில்  உயர் அதிகாரிகளை நியமிக்காமல் வைத்துள்ளார்களே?’’
‘‘ஆமாம். உளவுப்பிரிவில் கூடுதல் டி.ஜி.பி பதவியும் ஐ.ஜி பதவியும் காலியாக உள்ளன. ஐ.ஜி-யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தார். அவரை மாற்றிவிட்டார்கள். அவரது இடத்துக்கு யாரையும் நியமிக்கவில்லை. கூடுதல் டி.ஜி.பி-யாக சட்டமன்றத் தேர்தலின்போது கரன் சின்கா இருந்தார். அதன்பிறகு அவரும் போய்விட்டார். டி.ஐ.ஜி-யும் இல்லை. அந்த இடம் இரண்டு ஆண்டுகளாகக் காலியாக இருக்கிறது. உளவுத்துறையில் எஸ்.பி-யாக கண்ணன் இருக்கிறார். உளவுத்துறையில் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் ஈஸ்வரமூர்த்தி, இப்போது கூடுதல் பணியாக இதைக் கவனித்துவருகிறார்.”
‘‘அரசையே இயக்கக்கூடிய உளவுத்துறையின், முக்கியப் பதவிகள் காலியாகக் கிடக்கின்றன. ஏன், ஆள் கிடைக்கவில்லையா?”

‘‘ஆமாம். யாரும் வர மறுக்கிறார்களாம். ‘ஸ்திரத்தன்மை இல்லாத ஆட்சியில் உளவுத்துறையில் இயங்க முடியாது. மேலும், யார் சுப்பீரியர் என்று தெரியாத அரசாங்கத்திலும் உளவுத்துறையை நிம்மதியாகக் கவனிக்க முடியாது’ என்றாராம் ஒரு அதிகாரி. இந்த ஆட்சி பற்றி போலீஸ் வட்டாரத்தின் கருத்து இதுதான்!
தமிழகக் காவல் துறையில் கூடுதல் டி.ஜி.பி ரேங்க்கில் இருந்த சஞ்சீவ் குமார், உடல்நலம் சரியில்லாமல் கடந்த வாரம் இறந்தார். அவரின் கடைசி ஆசை… உளவுப்பிரிவின் டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெறவேண்டும் என்பதுதான். தமிழகத்தில் ஆறு டி.ஜி.பி-க்கள் வரை அந்த அந்தஸ்தில் இருக்க முடியும். ஆனால், தற்போது மூன்று டி.ஜி.பி பதவிகள் காலியாக உள்ளன. இந்த வருடத்தில், மேலும் நான்கு ஐ.பி.எஸ்-கள் ஓய்வுபெறுகிறார்கள். இதையெல்லாம் கணக்குப்போட்ட மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் தமிழகக் காவல் துறைக்கு, சீனியாரிட்டி முறையில் ஐந்து பேரை டி.ஜி.பி-யாக நியமித்துக்கொள்ள ஒப்புதல் தந்ததாம். இந்தப் பட்டியலில் சஞ்சீவ் குமார் பெயரும் உண்டு. மத்திய அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் யார் யார் டி.ஜி.பி என்பதை முடிவுசெய்ய… ஜனவரியில் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால், இந்த நிமிடம் வரை அந்தக் கூட்டம் நடக்கவில்லை. தமிழக அரசு நிர்வாகம் சரியில்லாமல் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா?’’
“காஞ்சி மடத்துக்குச் சென்று ஜெயேந்திரரை டி.டி.வி.தினகரன் சந்தித்தாராமே?”
“ஆமாம். பிப்ரவரி 8-ம் தேதி, காஞ்சி மடத்துக்கு தினகரன் சென்றுள்ளார். அங்கு ஜெயேந்திரரையும் விஜயேந்திரரையும் சந்தித்த தினகரன், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்ததற்காக நன்றி தெரிவித்தாராம். மடத்துக்கும் தங்களுக்கும் இருக்கும் கசப்பை மறக்க வைக்கவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. ஆனால், தினகரனுக்கு ஜெயேந்திரர் பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்ததாகக் கிளப்பிவிட்டு விட்டார்கள். ‘தினகரன் மொத்தமே ஐந்து நிமிடங்கள்தான் இருந்தார். அவருக்குப் பெரியவர் பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்யவில்லை. காபி கொடுத்தார், பழங்கள் கொடுத்தார் என்று கிளப்புவது எல்லாம் வதந்தி’ என்று அகில இந்திய காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவையின் பொதுச்செயலாளர் வலசை ஜெயராமன் சொல்கிறார். பி.ஜே.பி-யிடம் நெருக்கம் காட்ட தினகரன் நினைக்கிறார். அதற்கு ஜெயேந்திரர் பிடிகொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். தங்கள் தரப்பு சந்தித்துவரும் நெருக்கடிகளைச் சொல்லி தினகரன் புலம்பியதாகவும், தினகரன் வைத்த சில கோரிக்கைகளை பி.ஜே.பி-யின் அகில இந்திய தலைமைக்குக் கொண்டுசெல்வதாக ஜெயேந்திரர் வாக்குறுதி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், தினகரன் வெறும் ஐந்து நிமிடங்களே ஜெயேந்திரருடன் பேசியதாகவும், தினகரனுக்கு ஜெயேந்திரர் குங்குமம் வைக்கவில்லை எனவும், ஸ்பெஷல் பழங்கள் தரவில்லை எனவும் காஞ்சி மடம் தரப்பில் சொல்கிறார்கள்” என்றபடி பறந்தார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: