Advertisements

மது… மயக்கம் என்ன?

மதுவை மறக்க வேண்டும் என்று உறுதியாக நினைப்பவர்களில் 95 சதவிகிதத்தினர் நிச்சயமாகத் திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன!
மதுவின் உச்சம் தொட்டு, உண்மைகள் அறிந்து, உளப்பூர்வமாகவே அதை மறக்க நினைக்கும் மனிதர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன, சாந்தி ரங்கநாதனின் டி.டி.கே. மருத்துவமனை உள்பட சில அமைப்புகள்.குடியிலிருந்து விடுபட வீட்டில் இருப்போரின் உறுதுணை அவசியம். நண்பர்களின் ஆதரவும் அவசியம். அதோடு, சம்பந்தப்பட்ட நபரின் உறுதியான கட்டுப்பாடு மிகமிக அவசியம்.
குடி மறக்க என்ன சிகிச்சை?சிகிச்சைக்காக வருபவர்களில், மிதமான குடிகாரர்கள் எனில் ஒரு மாதம் சிகிச்சை தேவைப்படும். மொடாக் குடிகாரர்களாக இருந்தாலோ மூன்று மாதம் வரை தங்கியிருந்து சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். முதலில் மதுவினால் குடிகாரரின் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுத்தன்மையைப் போக்கி, ஆரோக்கியத்தை மீட்க சிகிச்சை அளிக்கிறார்கள். அதோடு மனநல ஆலோசனை(கவுன்சிலிங்), உரை நிகழ்ச்சிகள், தியானம் என பலவித முறைகள் கையாளப்படுகின்றன.

மனைவியே முதல் மருத்துவர்!

பல பெண்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகே கணவருக்கு குடிப்பழக்கம் – அதுவும் மொடாக்குடி – இருக்கிற விஷயம் தெரிய வருகிறது. மணமான மயக்கத்தில் குடியைப் பெரிதாக கண்டுகொள்ளாத பெண்களே பெரும்பான்மை. எதையும் தள்ளிப்போடாமல் குடும்பப் பெரியவர்கள் உதவியுடன் பலரது அதீத குடிப்பழக்கத்தைக் கொண்டு வர முடியும்.
ஆனால், பல பெண்கள் தங்களுக்கு உள்ளேயே சோகம் சுமந்துகொண்டு, கணவனுக்கு அவப்பெயர் வரக்கூடாது எனத் தவிப்பார்கள். கணவனின் ஆரோக்கியம், குடும்பத்தின் எதிர்காலம் ஆகிய காரணங்களை கண் முன் நிறுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் கடமை பெண்கள் கையில்தான் இருக்கிறது. தம்பதியின் பெற்றோர்களும் இதை சாதாரண விஷயமாகக் கருதிவிடாமல், ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மனம் – நல்ல மருந்து!
மதுவிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் குடி மறக்கச் செய்யும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டாலே 95 சதவிகிதம் திருந்திவிடுவார்கள். கஞ்சா, பிரவுன் சுகர் போன்ற போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது சற்றே கடினம். குடி மட்டுமே என்றால் நிச்சயம் நல்ல நிவாரணம் பெற முடியும்.  அண்மைக்காலமாக இதில் சிக்குபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்தான். ‘ஜஸ்ட் ஃபார் ஏ ஃபன்’ என்று வேடிக்கையாகத் தொடங்குவதுதான், இறுதியில் வாழ்க்கையையே  வறட்சியாக்கி விடுகிறது. அதனால், எந்த வயதிலும், எந்த இடத்திலும் மனக் கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.
புரிதல் தேவை பாதிக்கப்பட்டவர்கள் ‘மொடாக்குடி என்பது ஒரு நோய்’ என்பதைப் புரிந்து ஏற்றுக்கொண்டாலே, அதற்கு சிகிச்சை எடுக்கத் தயாராகி விடுவார்கள்.  இதைப் புரிய  வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், விடாமுயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
நம் ஊரில் அதீதமாகக் குடித்துவிட்டு, ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கையையே சிதைப்பவர்களை ‘திமிர் பிடிச்சு திரியறான்’ என்கிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பா உள்பட வளர்ச்சியடைந்த பகுதிகளில் குடியினால் ஏற்படும் விடமுடியா அடிக்‌ஷனை ‘நோய்’ என்றே கருதுகிறார்கள். அதனால் குடிகாரர் ஒருவித பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என  சமூகமும் மருத்துவ உலகமும் புரிதலோடு, அவரை மீட்கும் நடவடிக்கையில் இறங்குகிறார்கள்.
குடி என்பது ஒரு நோய் என்பதால் அதற்கு ஏற்ப  சிகிச்சை திட்டமிடப்படுகிறது. உடல், மனம் – இரண்டுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்போது, முழுமையாகவே குணம் அடைகிற வாய்ப்பு உருவாகிறது.புள்ளிவிவரம் சொல்லும் நம்பிக்கை!
* குடிமீட்பு மையங்களுக்கு வருகிறவர்களில் பாதிக்கும் அதிகமானோர்(55 சதவிகிதம்), நல்ல முறையில் குணமடைந்து திரும்புகின்றனர்.
* சிகிச்சை பெறுபவர்களில் 25 சதவிகிதம் பேர் நண்பர்களோடு சேர்கையில் மீண்டும் குடிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
பெண்கள்?
நம் நாட்டில் பெண்கள் அதிகம் குடிப்பதில்லை என்பது மிக நல்ல விஷயம். குடிமீட்புக்கு அழைத்து வரப்படுகிறவர்களில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே பெண்கள். இவர்கள் பெரும்பாலும், கணவரோடு சேர்ந்து குடிகாரர்களாக மாறியவர்களாகவே இருப்பார்கள். அண்மைக்காலத்தில் மது சேர்ந்த பார்ட்டி கலாசாரம் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் இந்த அளவு அதிகரிக்கக்கூடும். கலாசாரக் காவலர் பார்வை போல அல்லாமல், மதுவினால் பெண்ணுக்கு ஏற்படுகிற  உடலியல் மற்றும் பிரச்னைகள் மிக அதிகம் என்கிற கோணத்திலேயே, மதுவை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
காரணம் ஆயிரம்!
மகிழ்ச்சி, சோகம், தனிமை, பிரச்னை போன்ற  விஷயங்களை கையாளக் கற்றுக்கொள்ளும் மனம் இன்றி இருப்பதால், ‘பிரச்னையா இருக்கறதாலே குடிக்கிறேன்’ என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் சிகிச்சை முடிந்த பிறகும், குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஃபாலோ அப் அவசியம் தேவைப்படுகிறது.
குடும்பத்தினருக்கும் ஆலோசனை அவசியம்!
குடிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல… அவர்களது குடும்பத்தினருக்கும் ஆலோசனை அவசியம். அவர்களால்தான், மீண்டும் அவர் குழிக்குள் விழாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள முடியும். குடிக்கிற மனம் இருக்கிற ஒருவருக்கு அதை மறக்கிற மனமும் உண்டு என்கிற நம்பிக்கையோடு செயல்பட்டால், நிச்சயம் மீண்டும் நல்வாழ்வுக்குத் திரும்ப முடியும்.

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisements
%d bloggers like this: