Advertisements

ஆயுளைக் கூட்டும் ‘உயிர்’ உணவுகள்!

புத்தம்புதிய, பசுமையான பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள்  மற்றும்   முளைவிட்ட பயறுகளை ‘உயிர் உள்ள உணவுகள்’  (live foods) என்று கூறுகிறோம். ஏனெனில், அவை சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன.

மனிதனின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலுக்குப் பசுமையான உணவு மிக அவசியமானதாகும். இந்த ‘உயிர் உணவு’ கருத்தாக்கம் நேற்று, இன்று தொடங்கியது அல்ல… உயிர் உணவுகளின் தேடல் என்பது ஆதிமனிதன் காலத்திலேயே தொடங்கிவிட்டது. உயிர் உள்ள உணவுகளை, அவற்றின் இயல்பான நிலையில் உண்ணும்போது அதிகபட்ச ஊட்டச்சத்தினைப் பெறலாம்.
உயிர் உணவின் நன்மைகள்


பசுமையான உணவுகள் தங்கள் செல் கட்டமைப்பில் ஆக்சிஜன் வளம் நிறைந்ததாக உள்ளன. தாவரங்கள், சூரிய ஒளியில் இருந்து தங்களுக்குத் தேவையான ஆற்றலைத் தயாரித்துக்கொள்வதை  ஒளிச்சேர்க்கை (photosynthesis) என்று சொல்கிறோம். இப்படி, தனக்கான ஆற்றல் மற்றும் ஆக்சிஜன் நிறைந்தவை இந்த உயிர் உணவுகள். இவற்றைச் சமைக்கும்போது, அவற்றில் உள்ள ஆக்சிஜனோடு ஊட்டச்சத்துகளும் வெளியேறிவிடுகின்றன.
உணவு என்சைம்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டுவரும், ஹோவெல் என்ற ஆராய்ச்சியாளர், ‘உயிர் உள்ள உணவுகளில் உள்ள ஆக்சிஜன், சத்துகளை நன்றாகச் செறிக்கவும், உறிஞ்சவும், நம் உடல் பயன்படுத்தவும் உதவுகின்றன’ என்று கண்டறிந்துள்ளார். புத்தம்புதிய, சமைக்காத உணவுப் பொருள்களில் உள்ள என்சைம்களை ‘லைஃப் ஃபோர்ஸ்’ என்கிறார் அவர். அவற்றைச் சாப்பிடும்போது, அந்த மூலக்கூறுகளை நம்முடைய உடல் முழுமையாகப் பெற்றுக்கொள்கிறது. அதுவே, சமைக்கும்போது, அவற்றில் உள்ள உயிர்த்தன்மை, அனைத்து வைட்டமின்கள், தாதுஉப்புகள், நுண்ஊட்டச்சத்துகள் என அனைத்தும் விரயமாகின்றன அல்லது வேறு உருவம் பெற்று படிப்படியாக அழிந்துபோகின்றன என்கிறார் அவர்.
உணவில் உள்ள இயற்கையான சத்துகள், ஃபைட்டோகெமிக்கல்கள், (phytochemicals) மற்றும் அந்த உணவில் உள்ள தூய, வடிகட்டப்பட்ட தண்ணீர் நம்மைத் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கச் செய்கின்றன. இவை, நோய் எதிர்ப்புச்சக்தியை வழங்குவதுடன், உடலில் காலம்காலமாகத் தேங்கியிருக்கும் நச்சுகளையும் அகற்றி நம் உடலைப் பாதுகாக்கின்றன.
ஆக்சிஜன் நிறைந்த உணவுகள், ரத்தச்சோகை நோயாளிகளுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன என்றும் அவர் தன்னுடைய ஆராய்ச்சி முடிவில் தெரிவித்திருக்கிறார்.
உயிர் உணவுகளை நமது உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நாம் மிக எளிதாக நம் எடையைக் குறைக்கலாம். உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் உடல் எடை குறைக்க  எளிதான வழி இது. இந்த உணவுகள் முதுமையைத் தாமதப்படுத்துகின்றன. மேலும், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நாளடைவில் குறைந்து, சருமமும் பளபளப்பு அடைகிறது. இளமையாகவும் வலிமையாகவும் நம்மால் உணரமுடியும்.
உயிர் உணவுகள் பல நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், ஒற்றைத்தலைவலி, ஆஸ்துமா, மூட்டுவலி, ஒவ்வாமை, பெருங்குடல் அழற்சி, மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் பல இவற்றுள் அடங்கும்:
உயிர் உள்ள உணவுகளின் பட்டியல்
* கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, கோஸ், செலரி, கோதுமைப் புல், எலுமிச்சைப் புல் போன்ற கீரைகள்.
* கேரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், வெள்ளரிக்காய், புரொக்கோலி,  வெண்டைக்காய், முள்ளங்கி, குடமிளகாய், காலிஃபிளவர், மஞ்சள் பூசணி போன்ற காய்கறிகள்.
* முளைவிட்ட தானியம், பயறு வகை உணவுகள், வைட்டமின்கள், தாதுஉப்புகள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்களின் உறைவிடமாக இருக்கின்றன.
* அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* பாதாம், வால்நட், பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ் வகைகள் மற்றும் ஆளிவிதை, சூரியகாந்தி விதை போன்ற எண்ணெய் வித்துகளில் உயிர்சத்து நிறைவாக உள்ளது.
இவ்வளவு ஆற்றல்மிக்க உயிர் உணவுகளுக்குத் திடீரென்று மாறுவது என்பது கடினமான செயல். ஒரே நாளில் மாறுவதும் முடியாத ஒன்று. உணவுப் பழக்கத்தில் படிப்படியாக மாறுதல் கொண்டுவருவோம். அதையும் இன்றே தொடங்குவோம். ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்க்கை, நம் வசப்படும்.

Advertisements
%d bloggers like this: