Advertisements

நோய்களுக்கு ‘நோ’ சொல்லும் நேச்சுரல் ஆன்டிபயாட்டிக்ஸ்!

லைவலி, காய்ச்சல் என்றால் மாத்திரை எடுத்துக்கொள்கிறோமே அந்த மாத்திரையின் மூலம் எது என்று எப்போதாவது யோசித்திருப்போமா? ‘மருந்து கம்பெனி தயாரிக்கிறது, அதை நாம் பயன்படுத்துகிறோம்’ என்ற எண்ணம்தான் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. மாத்திரை, மருந்துகளின் மூலம் இந்தப் பூமியில் இயற்கையாக வளர்ந்துகிடக்கும் தாவரங்கள்தான்.

 

ஆரம்பத்தில், மூலிகை இலை, தண்டு, வேர், காய், விதை உள்ளிட்டவற்றை மருந்தாக, கஷாயமாக, லேகியமாகச் செய்து சாப்பிட்டோம். இன்றைக்கு அந்த மூலிகைகளின் நோய்த் தீர்க்கும் மூலக்கூறைத் தனியே பிரித்தெடுத்து, அதற்கு காப்புரிமையும் வாங்கிக்கொண்டு, செயற்கையாகத் தயாரித்து விற்கின்றன மருந்து கம்பெனிகள். நமது அன்றாட உணவு வகைகளே நம் நோய்களுக்கு மருந்தாக உள்ளன. கிருமிகளை அழித்து உடலைக் காக்கும் காய், கனிகளைத் தெரிந்துகொள்வோம்.

இஞ்சி
இஞ்சியில், `ஜிஞ்சரால்’ எனும் வேதிப்பொருள் உள்ளது. இது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. மாரடைப்பைத் தடுக்கிறது. மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. குழந்தைகளின் தொப்புளைச் சுற்றி இஞ்சிச் சாற்றைப் பற்றுப்போடுவதன் மூலம் அவர்களின் அஜீரணத்தைச் சரிபடுத்தலாம்.

செம்பருத்தி
செம்பருத்திப் பூவில் பாலிஃபீனால், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். புற்றுநோய் செல்களைத் தடுக்கும். ஃப்ரீரேடிக்கல்ஸைக் கட்டுப்படுத்தும். இதன் இலையைத் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்டி குடிநீருக்குப் பதிலாக எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் வெப்பம் இயல்புநிலையில் இருக்கும். செம்பருத்தி, முடி வளர்ச்சியை அதிகரித்து நரைமுடிப் பிரச்னையைக் குணமாக்கும். காய்ந்த மொட்டுகளை ஊறவைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துத் தலையில் தடவினால், கூந்தல் கறுப்பாகும். மாதவிடாய் சரியாக வருவதற்கு அரைத்த செம்பருத்தி விழுதை வெறும் வயிற்றில் உண்ணலாம்.

தேன்
தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. இதில், 17 முதல் 70 சதவிகிதம் வரை நீர்ச்சத்து உள்ளது. தேனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டால், உடல் இளைக்கும்; உடல் உறுதியாகும். ஆஸ்துமா பிரச்னைக்குத் தேன், முட்டை மற்றும் பால் சேர்த்து பருகலாம். வாந்தி, ஜலதோஷம் போன்றவற்றுக்குத் தேனுடன் எலுமிச்சைப்பழச் சாறு கலந்து பருகலாம். மிதமான சூட்டில், பாலோடு தேன் சேர்த்து பருகும்போது ரத்தச்சோகையும் சரியாகும்.

மாதுளம் பழம்
மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த உற்பத்தியையும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகின்றன. மாதுளைச் சாற்றில் தேன் கலந்து பருகும்போது, இதயம் பலம்பெறும்; நரம்புத் தளர்ச்சி மற்றும் ஜீரணப் பிரச்னைகள் நீங்கும். பித்தப் பிரச்னைகள் சரியாக, மாதுளைச் சாற்றோடு கற்கண்டுப் பொடி கலந்து பருகலாம். மாதுளம் பழம் சாப்பிட்டால் இதயத்துக்கும் மூளைக்கும் சக்தி கிடைக்கும்.

பூண்டு
தினசரி பூண்டு எடுத்துக்கொள்வது அனைத்து வகையான பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். நோய்க்கிருமிகளை மட்டும் அல்ல… உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கும் தன்மை பூண்டுக்கு உண்டு. சளி, ஃப்ளூ, பல் வலி போன்றவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும். உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால், பூண்டின் முழுப் பலனும் கிடைத்துவிடாது. எனவே, தினசரி ஒன்றிரண்டு பூண்டைத் தோல் உரித்து, சாலட், சூப் போன்றவற்றில் போட்டுச் சாப்பிடுவது நல்லது. பூண்டைப்போலவே, வெங்காயமும் சிறந்த ஆன்டிபயாட்டிக் உணவு.

மஞ்சள்
மஞ்சள்  மிகச் சிறந்த கிருமி நாசினி. இதில் உள்ள குர்குமின், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள மஞ்சள், இருமலுக்குச் சிறந்த மருந்து. சளி, இருமலினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால், தேனுடன் மஞ்சள் தூள் கலந்து சாப்பிடலாம். ஆயுர்வேத பாரம்பர்யத்தில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் சிறந்த பொருளாக மஞ்சள் கருதப்படுகிறது.

முட்டைகோஸ்
முட்டைகோஸில் உள்ள கந்தகம், கிருமிகளை அழிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இவை மட்டும் இன்றி, பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பினை முட்டைகோஸ் ஈடுசெய்யும். அல்சரைக் குணப்படுத்தும் குளூட்டமைன் சத்தும் இதில் உள்ளது.

எலுமிச்சைப் பழம்
இதில் உள்ள சிட்ரிக் அமிலம், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தைச் சுத்திகரித்து, நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சைச் சாற்றில் மருதாணி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து, காலில் தடவுவதன் மூலம் பாதவெடிப்புகள் சரியாகும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, முகப்பொலிவைத் தரும். பருக்களை நீக்கும்.

தயிர்
தயிரில், `புரோபயாட்டிக்’ எனப்படும் நல்ல பாக்டீரியா நிறைந்துள்ளது. இது, உடலில் உள்ள  கெட்ட பாக்டீரியாவை நீக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துன்றன. மேலும், இதில் உள்ள லேக்டோபேசியல் (Lactobacil) செரிமானத்தைத் தூண்டி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்துவிடும்.

அன்னாசிப் பழம்
ஆன்டிஃபங்கல் தன்மை கொண்டது. அன்னாசிப் பழத்தில் வைட்டமின் பி, புரோமெலின் சத்து அதிகமாக உள்ளன. புரோமெலின், கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். ஜீரண மண்டல உறுப்புகளை வலுவாக்கும். அன்னாசிப் பழத்தில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

Advertisements
%d bloggers like this: