மலச்சிக்கல்!

லச்சிக்கல்தான் பலருக்கும் மனச்சிக்கலைக் கொண்டுவரும் பிரச்னை. நவீன வாழ்க்கைமுறை தரும் டென்ஷன், பதற்றம், தூக்கமின்மை முதல் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் வரை பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. காரணம் என்னவெனக் கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலில் இருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.

மலச்சிக்கல் என்றால் என்ன?


உணவு உண்ட 16-ல் இருந்து 24 மணி நேரத்துக்குள், அது ஜீரணமாகி, கழிவு வெளியேற வேண்டும். கழிவை, பெருங்குடல், மலக்குடலுக்குள் தள்ளி, அது மலத்தை வெளியேற்ற வேண்டும். மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் கழிப்பதில் சிக்கல். மலம் இறுகிப்போவது, மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் இருப்பது போன்ற நிலைகள் ‘மலச்சிக்கல்’ என அழைக்கப்படுகின்றன.
மலச்சிக்கல் ஏற்பட என்ன காரணம்?
இப்போதைய அவசர உலகில் மலம் கழிப்பது ஒரு தொல்லையாகக் கருதப்படுகிறது. மலம் கழிப்பதை அடக்கிவிடுவது மட்டும் அல்லாமல் மலம் கழிக்கும்போது, தேவையான நேரத்தையும் நாம் செலவிடுவது இல்லை. அவசர அவசரமாக மலம் கழித்துவிட்டு வந்துவிடுகிறோம்.
தவறான உணவுப் பழக்கங்கள் மிக முக்கிய காரணம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்களைத் தவிர்ப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
போதுமான அளவு நீர் அருந்தாமை.
குளிர் பானங்கள், மதுபானங்கள் அருந்துவது.
ஸ்ட்ரெஸ், டென்ஷன் போன்ற மனரீதியான பிரச்னைகள் இருப்பது.
காபி, டீ என ஏதாவது ஒன்றை அருந்தினால்தான் மலம் கழியும் என்று ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி,  தொடர்ந்து செய்வது.
ஒருமுறைக்கு மேல் மலம் கழிப்பது ஏதேனும் பிரச்னையா?
இல்லை. இது ஒவ்வோர் இடத்துக்கும் தகுந்தது போலவும், நாம் உண்ணும் உணவுக்கு தகுந்தபடியும் மாறும்.  நம் நாட்டின் உணவுமுறை, வாழ்க்கைமுறையைப் பொறுத்தவரை, ஒரு நாளில் ஒரு முறையோ, இரு முறையோ, சமயங்களில் மூன்று முறையோகூட மலம் கழிக்கலாம். உடலில் ஏற்படக்கூடிய கழிவின் அளவைப் பொறுத்து இது மாறுபடும். ஒரு நாள் ஒருமுறைகூட மலம் கழிக்காமல் இருந்தால், கவனிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளில், இரண்டு நாள்கள்கூட மலம் கழிக்காமல் இருப்பர். அது அவர்களின் வாழ்க்கைமுறை.

நீண்ட நாள்களாக மலச்சிக்கல் இருப்பது ஏன்? அதற்காக என்ன செய்ய வேண்டும்?

நம் உணவில் அதிக நார்ச்சத்து இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற அளவு தண்ணீர் பருக வேண்டும். அப்படிச் செய்யாமல், நீர்ச்சத்து குறையும் நேரத்தில், மலம் கெட்டியாக மாறிவிடுகிறது. இதனால், மலம் கழிப்பது சிரமமாகிறது. 
அடுத்ததாக, நாம் உண்ணும் கடின உணவும், திரவ உணவும் சிறுகுடல் தாண்டி பெருங்குடல் செல்லும்போது அரைக்கூழ் நிலையில் இருக்கும். அங்குதான், உடலுக்குத் தேவையான நீர் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒருவர் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதபோது, மலத்தில் இருந்து அனைத்து நீரும் எடுத்துக்கொள்ளப்பட்டு, மலம் கட்டியாக மாறி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும்.
நாம் நம் வேலைகளுக்காக மலம் கழிப்பதைத் தள்ளிப்போடுவதுதான் மலச்சிக்கலுக்கு முக்கியமான காரணம். நம் குடலில் மலம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ, அவ்வளவு நேரமும் குடலால் தண்ணீர் இழுக்கப்படும். நேரம் ஆக ஆக, மலம் கடினமாக மாறிவிடுகிறது.
எனவே, சரியான அளவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ள உணவுகளைத் தினசரி உண்ண வேண்டும்.

சர்க்கரை நோய்க்கும் மலச்சிக்கலுக்கும் தொடர்பு இருக்கிறதா?

ஆம், நீண்ட நாள்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் குடல் வேலை செய்வதற்கு நரம்புகள் மிக முக்கியம். நீண்ட காலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நரம்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு, அட்டோனோமிக் நியூரோபதி (Autonomic Neuropathy) என்று பெயர்.
நாள்பட்ட மலச்சிக்கல் புற்றுநோயாக மாறும் என்பது சரியா?
மலச்சிக்கல் இருந்தால் புற்றுநோய் வரும் என்று கிடையாது. மாறாக, மலச்சிக்கல் புற்றுநோய்க்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம்.
மருந்துகளுக்கும் மலச்சிக்கலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ன மருந்துகளால் மலச்சிக்கல் ஏற்படலாம்?
சில மருந்துகளுக்கும் மலச்சிக்கலுக்கும் தொடர்பு இருக்கிறது. அலுமினியம், கால்சியம் கலந்து உள்ள ஆன்டாசிட் மருந்துகள், இரும்புச் சத்து மாத்திரைகள்,  மனஅழுத்தத்துக்கான மருந்துகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

மலச்சிக்கலுக்கான காரணத்தைக் கண்டறிவது எப்படி?
மலச்சிக்கல் ஏற்படக்கூடிய உறுப்பு பெருங்குடல் பகுதி. பெருங்குடலில் ஏதேனும் பிரச்னை இருந்து, அதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறதா, இல்லை சரியான உணவு உண்ணாமல் மலச்சிக்கல் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். பெருங்குடலில் பிரச்னை இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால், காலனோஸ்கோப்பி (Colonoscopy) மூலமாக அறிந்துகொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலுக்குத் தீர்வு தருமா?
ஒரே இடத்தில் இருந்து வேலை செய்பவர்கள் முக்கியமாக உடற்பயிற்சி செய்யவேண்டும். ஆரோக்கியமற்ற செடன்டரி (Sedentary) வாழ்க்கைமுறை உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை அதிகமாக வருகிறது. அதனால், தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.

மலச்சிக்கலுக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்படும்?
மருந்துகள் தற்காலிகமானவைதான். முதலில், சீரான வாழ்க்கைமுறை அவசியம். இதற்கு, போதுமான அளவு தண்ணீர், சரியான உணவு முக்கியம். நாம் சாப்பிடும்போது, தட்டில் அதிகமாக அரிசி அல்லது கோதுமை உணவு இருக்கும். காய்கறிகள் குறைவாக இருக்கும். ஆனால், காய்கறிகள் அதிகமாகவும் மற்றவை குறைந்த அளவும் உண்டால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். வயதைப் பொறுத்து, அடிப்படை பிரச்னையைப் பொறுத்து, மலச்சிக்கலின் தன்மையைப் பொறுத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.  மலச்சிக்கலுக்கு சுயமாக சிகிச்சை செய்துகொள்வது மிகவும் தவறு. வயிற்றுப்போக்குக்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வது பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளைப் பாதிக்கும்.

மலச்சிக்கல் இருப்போர் சேர்க்க வேண்டிய உணவுகள் என்ன?
வாழைக்காய், வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு, முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், பீன்ஸ், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், கீரை வகைகள், நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுக்கலாம். தண்ணீரைத் தவிர, பழரசம், பழங்கள் போன்றவற்றில் உள்ள நீர்ச்சத்தும் உடலுக்கு மிக அவசியம்.

%d bloggers like this: