கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கான உணவு பட்டியல்

* நான் மூன்று மாத கர்ப்பமாக உள்ளேன். சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
உலக அளவில் அதிக பெண்கள் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் தாயையும், குழந்தையையும் பாதிக்கும். உணவுக் கட்டுப்பாடு, இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
* கர்ப்ப கால சர்க்கரை நோயை கண்டறிவது எப்படி ?


கர்ப்பமடைந்த பின் முதல் முறையாக மருத்துவரிடம் செல்லும் போது சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய வேண்டும்.
50 கி., குளுக்கோஸ் சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும். அதில் 140 மி.கி., அளவு ‘டி.எல்.,’ இருந்தால், உங்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதன் பிறகு குளுக்கோஸ் ‘டாலரன்ஸ் டெஸ்ட்’ என்ற குளுக்கோஸ் தாங்கும் சோதனை செய்து உங்கள் ரத்த சர்க்கரை அளவை சோதனை செய்ய வேண்டும்.

* கர்ப்ப கால சர்க்கரை நோய் எவ்வாறு குழந்தையை பாதிக்கும் ?

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது. இல்லாவிட்டால் குழந்தையை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. குழந்தையின் எடை அதிகமாகி ‘சிசேரியன்’ மூலம் குழந்தையை பிரசவிக்கும் நிலை ஏற்படலாம். குழந்தை பிறந்தவுடன் அதன் ரத்த சர்க்கரை அளவும்,
கால்சியம் அளவும் குறையும். குழந்தைக்கு இருதய துடிப்பு, நுரையீரல் பிரச்னைகள் ஏற்படலாம். வயிற்றிலேயே குழந்தை இறக்கும் வாய்ப்பு உண்டு.
* கர்ப்ப கால சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவு பட்டியலை கூறவும் ?
காலை 7:00 மணி : ஒரு டம்ளர் பால், கோதுமை ‘ரஸ்க்’ அல்லது இரண்டு துண்டு கோதுமை ‘பிரட்’, ஊற வைத்த பாதாம் பருப்பு. காலை 9:00 மணி : 1) இட்லி, மூன்று தோசை, மூன்று சப்பாத்தி, கோதுமை பிரட் (பீனட் பட்டர் தடவியது), உப்புமா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை காய்கறி கலந்து உண்ண வேண்டும். தொட்டுக் கொள்ள தக்காளி, கொத்தமல்லி, கத்தரிக்காய் சட்னிகள், பாசிப்பருப்பு சாம்பார் போன்றவற்றில் ஒன்றினை எடுத்துக்கொள்ளலாம்.
2) இரண்டு முட்டையின் வெள்ளைக் கரு மட்டும்
3) தயிர் அல்லது காய்கறி ‘சூப்’பில் ஒரு கிண்ணம்.
காலை 11:00 மணி: ஆப்பிள், கொய்யா, மாதுளை பழங்களில் ஏதாவது ஒன்று அல்லது காய்கறி ‘சாலட்’ ஒரு கிண்ணம் அல்லது ஊற வைத்து முளைகட்டிய ஏதாவது ஒரு பயறு வகையில் ஒரு கிண்ணம்.
மதியம் 12:00 மணி :காய்கறி சூப் அல்லது சர்க்கரை கலக்காத எலுமிச்சை ஜூஸ்
மதியம் 1:30 மணி : கைக்குத்தல் அல்லது சாதாரண அரிசி சோற்றில் ஒரு கப், மூன்று சப்பாத்தி. இவற்றுடன் பருப்பு கூட்டு, மீன் குழம்பு, காய்கறி கூட்டு, ஒரு கிண்ணம் தயிர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று.
மதியம் 2:30 மணி : ஒரு டம்ளர் மோர்
மாலை 4:30 மணி : 1) கோதுமையுடன் வெந்தய இலை சேர்த்த இரண்டு ரொட்டி (சிறிய அளவு) அல்லது காய்கறி சேர்த்த அவல் உப்புமா ஒரு கிண்ணம் அல்லது வேகவைத்த சுண்டல் ஒரு கிண்ணம் அல்லது பிரட் துண்டுகள்.
2) டீ அல்லது பால் 1 டம்ளர்.
மாலை 6:15 மணி : 15 நிமிடங்கள் நடக்க வேண்டும்
இரவு 8:00 மணி : 1) மூன்று தானிய ரொட்டி அல்லது மூன்று சப்பாத்தி அல்லது காய்கறி சேர்த்த தோசையில் மூன்று.
2) ஒரு டம்ளர் பால், என்ற உணவு பட்டியலை பின்பற்ற வேண்டும்.
அசைவ உணவு உண்பவர்கள் வாரம் இருமுறை கோழி, மீன் குழம்பு எடுத்துக் கொள்ளலாம். மா, பலா, வாழை, சப்போட்டாவை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு, சேணைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது.
பழச்சாறு, சர்க்கரையை உடனடியாக அதிகரிப்பதால் அதனை தவிர்க்க வேண்டும். கருப்பட்டி, வெல்லம், சீனி, வனஸ்பதி, ஐஸ்கிரீம், பேரிச்சம் பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், குளிர்பானங்கள், தேன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
டாக்டர் சுஜாதா சங்குமணி, மதுரை
sangudr@yahoo.co.in.

%d bloggers like this: