மாந்திரீகம் மன நோயை குணப்படுத்துமா

மன நோய்களின் வகைகள் என்ன?
மன நோய்கள் தீவிர மனநோய், மிதமான மனநோய் என இரு வகையாக பிரிக்கப்படுகிறது. தீவிர மனநோய் பிரிவில் மனச்சிதைவு, மனச்சோர்வு, மனஎழுச்சி (பைபோலார் நோய்)ஆகியநோய்கள் உள்ளன.
மிதமான மனநோய் எவ்வாறு வெளிப்படும்?


மிதமான மனநோய் பாதித்தவர், தான் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பர். அவை ஏன் ஏற்பட்டது என்ற காரணத்தை அறிந்தோ அல்லது சரிவர புரிந்து கொள்ளாமலோ இருப்பர். யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுவர். அவர்கள் நடவடிக்கைகள் பார்ப்பவர்களுக்கு பெரும்பாலும் வித்தியாசமாகத் தோன்றாது.
தீவிர மனநோயின் அறிகுறிகள் என்னென்ன ?
இதன் அறிகுறிகள் சிந்தனை அல்லது நடவடிக்கைகளில் வெளிப்படும். சிந்தனை பிரச்னையால் உண்டாகும் “டெலுயூசன்” எனப்படும் அறிகுறி மற்றும் உணர்தல் மூலம் உண்டாகும் “ஹலுசினேசன்” அறிகுறிகளுடன் காணப்படுவர்.
‘டெல்யூசன்’ என்றால் மாற்ற இயலாத தீவிரமான ஒரு சிந்தனை என்று பொருள். உதாரணமாக தங்களை சுற்றியுள்ளோர் தனக்கு தீங்கு செய்ய முயல்கின்றனர், தாங்கள் ஒரு விஷேச சக்தியோ தெய்வத்தின் அருளையோ பெற்றவர்கள், தங்களால் எதையும் சாதிக்க இயலும் என்பது போன்ற சிந்தனைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நோயால் பாதித்தவர்கள் தானாக பேசுதல், சிரித்தல், சைகை செய்தல் போன்றவற்றை செய்வர். அவர்களின் சிந்தனையில் குழப்பம் மற்றும் சந்தேகம் மிகுந்து காணப்படும்.
‘ஹலுசினேசன்’ என்பது பல்வேறு வகையில் உணரப்படும் மாய ஒலி, அசரீரி, கண்ணில் உருவங்கள் தோன்றுதல், வித்தியாசமான வாசனைகள் நுகர்தல் போன்றவை ஆகும். தீவிரமனநோய் பாதித்தவர்களின் காதுகளில் யாரோ பேசுவது போலவோ, உத்தரவிடுவது போலவோ கேட்கும். சிலசமயங்களில் உருவங்களும் தெரியலாம்.
‘பைபோலார் வியாதி’ என்றால் என்ன?
இதுதீவிர மனநோய்களில் ஒன்று. மனஎழுச்சி (மேனியா) நோயால் அவதியுறுபவர்கள் அதிக மகிழ்ச்சியுடனோ அல்லது உத்வேகத்துடனோ இருப்பதுபோல் உணர்வர். தூக்கமின்மை, தேவையற்ற விஷயங்களை அதிகம் பேசுதல் போன்ற பாதிப்புகள் இருக்கும். யாராவது அவர்களை கட்டுப்படுத்த முயன்றால் கோபம் வரும். காரணமின்றி அதிக குதூகலமாக உணர்வதால் தாராளமாகச் செலவு செய்வர். இதே நோய் மனச்சோர்வாக வெளிப்படும். இந்நிலையில்மன எழுச்சி நோயில் காணப்படும் அறிகுறிகள், முற்றிலும் மாறும். சோகமாக இருத்தல், யாருடன் பேசாமல் இருத்தல், தற்கொலை எண்ணங்கள், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை, தோல்வி மனப்பான்மை போன்றவை காணப்படும். மனஎழுச்சி மற்றும் மனச்சோர்வுநிலைகள் மாறி மாறி வரும் வாய்ப்புகள் அதிகம். இதுவே ‘பைபோலார்’ நோய் எனப்படுகிறது.
‘போபியா’ என்றால் என்ன ?
இது மன நோய்களில் மிதமான வகையைச் சேர்ந்த நோய். குறிப்பிட்ட செயலை செய்யவேண்டிய நேரத்தில் அல்லது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி உண்டாகும் அளவுக்கு அகதிகமான அச்சம் ‘போபியா’ எனப்படுகிறது. விலங்குகள், இருட்டு, உயரமான இடங்கள், குறுகலான பாதைகள், மூடியிருக்கும் அறை, கூட்டத்தின் நடுவில் இருத்தல், புதிய நபர்களுடன் பேசுதல் போன்ற நேரங்களில் அச்சம் ஏற்படும்.
இதனால் அவர்கள் பயம் ஏற்படுத்தும் சூழலை முற்றிலும் தவிர்த்துவிடுவர். தவிர்த்தல், ‘போபியா’ வியாதியின் ஒருமுக்கிய அறிகுறியாக விளங்குகிறது. விற்பனைப் பிரதிநிதி ஒருவர் பயணம் செய்வதற்கு அஞ்சி, அதனை தவிர்த்தால் அவர் வேலைக்கே ஆபத்து ஏற்படலாம்.
மன நோய் பாதித்தவர்களின் குடும்பத்தினர் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?
மன நோய் பாதித்தவர்கள், எந்த ஒரு செயலையும் வேண்டுமென்றே செய்வதில்லை. குடும்பத்தினர் இதனை உணர்ந்து துவக்கத்திலேயே மருத்துவ உதவி அளிக்க முற்பட்டால், நிச்சயம் குணமடைவர். அனைத்து வியாதிகளைப் போன்றே மனநோய்களும் ஏற்படுகின்றன.
மருந்து சாப்பிடும் போது மற்ற நோய்கள் குணமடைவது போல், மனநோய்க்கும் மருந்துகள், சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவர் உதவியின்றி மாந்திரீகம், பேய் ஓட்டுதல், வழிபாட்டு தலங்களில் தங்க வைத்தல் என காலம் தாழ்த்தினால் நோயிலிருந்து மீண்டுவர தாமதம் ஏற்படும்.
டாக்டர் குமணன், மதுரை
kums2sarad@gmail.com.

%d bloggers like this: