வலிப்பு VS பக்கவாதம் ஒரு அலசல்

டல்நலம் தொடர்பான மூட நம்பிக்கைகளுள் முதன்மையானது காக்கா வலிப்பு. பேய் பிடித்திருப்பதால் வலிப்பு வருகிறது, இரும்பு கொடுத்தால் சரியாகிவிடும்… என்று பல கட்டுக்கதைகள் இதற்கு உண்டு. பக்கவாதம் மற்றும் வலிப்பு நோய் என இரண்டுமே மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள். இரண்டுக்குமான காரணங்களும், விளைவுகளும் வெவ்வேறானவை.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது வெடிப்பு காரணமாக ஏற்படுவது பக்கவாதம். மூளையின் மின்னணுத் தொடர்பில் பிரச்னை ஏற்படும்போது வருவது வலிப்பு. பக்கவாதம் காரணமாக மூளையின் செயல்திறன் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். வலிப்பின் தாக்கம் தற்காலிகமானது.

வலிப்பு
மூளை செல்கள் தகவல் பரிமாற்றத்துக்கு மின் தூண்டுகை செய்கின்றன. சிலருக்குக் குறிப்பிட்ட மூளைத் திசுக்களில் இந்த மின் தூண்டுகையானது அபரிமிதமானதாக உற்பத்தியாகிறது. இதனால் வலிப்பு ஏற்படுகிறது. வலிப்பில், 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
பரிசோதனை
சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், ஈ.ஈ.ஜி (EEG – Electroencephalogram Test) போன்ற பரிசோதனைகள் மூலம் வலிப்புக்கான காரணங்களைக் கண்டறியலாம்.

காரணம்
பிறவிக் குறைபாடு, மூளையில் காசநோய், தலையில் காயம் ஏற்படுதல், கிருமித்தொற்று, கட்டி, மூளையின் அபரிமிதமான வளர்ச்சி போன்றவை வலிப்பு நோய் வருவதற்கான முக்கியமான காரணங்கள். குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல் காரணமாகவும் வலிப்பு ஏற்படும்.
அறிகுறிகள்
குழப்பமான மனநிலை, பார்வைக் குறைபாடு, பதற்றம், வியர்வை, தடுமாற்றம் போன்றவை இதன் அறிகுறிகள். இவை தென்பட்டால்,  பாதுகாப்பான இடத்துக்குச் சென்று அமர்ந்துகொள்வது நல்லது.
திடீர் உடல் கட்டுப்பாடு இழப்பு, மயக்கம், வாயில் நுரை தள்ளுதல், படபடப்பு, பற்களைக் கடித்தல், கண் இமைக்காமல் ஒரே இடத்தை உற்றுப்பார்த்தல்.
முதலுதவி
* கழுத்து, மார்பு மற்றும் இடுப்புப் பகுதியில் உடை இறுக்கமாக இருந்தால் அவற்றைச் சரிசெய்து காற்றோட்டம் பெறச்செய்ய வேண்டும்.
* வலிப்பு வந்தவருக்கு தண்ணீர், சோடா என எதையும் கொடுக்கக் கூடாது.
* வலிப்பு வந்தவரின் தலையை ஒருபுறமாகச் சாய்த்து, தலையை சற்று உயர்த்தி, நேராகத் தரையில் படுக்க வைக்க வேண்டும்.
* தலைக்கு அடியில் மென்மையான தலையணை அல்லது மடிக்கப்பட்ட துண்டை வைக்கலாம்.
* வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்தில் படுக்க வைக்க வேண்டும்.
பல் கடித்தலை தடுக்க வேண்டும். வலிப்பு வந்தவருக்கு மூச்சு தடைபடாது இருக்கிறதா என உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
பக்கவாதம்
மூளையில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் தடைப்படுதல், ரத்தக் கசிவு, ரத்தக்குழாய் வெடிப்பு ஏற்படும்போது மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பது தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

காரணம்

வயது அதிகரித்தல், உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை, மது அருந்துதல், சிகரெட், உயர்ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், ஸ்லீப் ஆப்னியா, இதய நோய்கள்.

பரிசோதனை
சி.டி (CT Scan), எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (Angiogram) போன்ற பரிசோதனைகள் மூலம் மூளையில் எந்த இடத்தில் ரத்தம் உறைந்திருக்கிறது அல்லது கசிவு, வெடிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கண்டறியலாம்.
அறிகுறிகள்
பேச்சில் குழறல், புரிந்துகொள்ள முடியாமை, முகம், கை அல்லது காலில் ஒரு பக்கம் மட்டும் உணர்ச்சியின்மை அல்லது செயல் இழப்பு, இரண்டு கண்களாலும் பார்த்தலில் சிரமம், தலைவலி, நடக்க முடியாமை.

முதலுதவி
* கழுத்து, மார்பு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள உடையின் இறுக்கத்தைத் தளர்த்தி, காற்றோட்டத்தைச் சீராகப் பரவச்செய்ய வேண்டும்.
* பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு வாய் வழியாகத் தண்ணீர் மற்றும் உணவு என எதுவும் கொடுக்கக் கூடாது.
* பக்கவாதம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

%d bloggers like this: