Advertisements

திருப்புமுனை தருமா திருவண்ணாமலை பூஜை?

ழுகார் உள்ளே நுழைந்ததும் சூடான சூப் கொடுத்தோம். ‘‘வரவேற்பு பலமாக இருக்கிறதே?’’ என்றபடி சிரித்தார் கழுகார். நாமும் சிரித்தோம். சூப்பை அருந்தும்போது அவருக்கு இருமல் வந்தது. ‘‘யாரோ நினைக்கிறார்கள்” என்றோம். ‘‘உமக்கு முழுக் கதையும் தெரிந்திருக்கிறது” என்று சொல்லி மீண்டும் சிரித்தார். நாம் பதில் சொல்லவில்லை. சூப்பை முழுமையாக அருந்தி முடித்தப் பிறகு, ‘‘சுவை நன்றாகத்தான் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘திருவண்ணாமலையை அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் இருக்கும் ஓரக்கண்டியம்மன் கோயிலுக்கு வந்து சென்ற மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டார்!”
‘‘தினகரனின் அரசியல் திருப்புமுனை திருவண்ணாமலையில்தான் தொடங்கியதோ?”
‘‘ஆமாம்! முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆலோசனைப்படிதான், திருவண்ணாமலை ஓரக்கண்டியம்மன் கோயிலுக்கு தினகரன் வந்தார். பங்குனி மாதப் பிறப்பன்று காலையில், ஓரக்கண்டியம்மன் கோயில் யாக பூஜையில் அமர்ந்து பயபக்தியுடன் வணங்கினார். ‘இந்த அம்மனை வணங்கிவிட்டு வேறு எந்தக் கோயிலுக்கும் செல்லக்கூடாது. அப்போதுதான் நினைத்த காரியங்கள் நடக்கும்’ என்று அவரிடம் கூறியுள்ளனர். இந்த யாகத்தில் தினகரன் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆட்கள் செய்துள்ளனர்!”

‘‘தினகரனும் கோயில் கோயிலாகச் செல்ல ஆரம்பித்துவிட்டாரா?”
‘‘ம்! பிரச்னைகள் வர வர, பிரார்த்தனைகளும் கூடத்தானே செய்யும். நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியைத் தற்கொலைக்குத் தூண்டிய  வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பர்வதமலை அடிவாரத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு வாரா வாரம் ஞாயிறன்று ராகு கால பூஜை செய்து வந்தார் கிருஷ்ணமூர்த்தி. கூடவே ஓரக்கண்டியம்மனுக்கும் பூஜைகள் செய்து வந்தார். வழக்குச் சிக்கல்களிலிருந்து தன்னை விடுவித்தது இந்த பூஜைகள்தான் என இவர் நம்பினார். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு தினகரனும் நெருக்கம். தினகரனுக்கு இந்தக் கோயிலின் மகிமையைச் சொல்லி யாகத்துக்கு சம்மதம் வாங்கினாராம் அக்ரி. ஓரக்கண்டியம்மன் வழிபாட்டைத் தொடர்ந்தால் முதல்வர் ஆக வாய்ப்பும் கிடைக்கும் என நம்புகின்றனர் தினகரன் குடும்பத்தினர்!”
‘‘ஆனால், வேட்பாளராக அவரை அறிவித்த கூட்டத்தில் பேசும்போது, ‘நான் முதலமைச்சர் ஆக மாட்டேன்’ என்று தினகரன் சொல்லி இருக்கிறாரே?”
‘‘முதலில் அப்படித்தான் சொல்வார். `பன்னீர் நன்றாக ஆட்சி செய்கிறார். அவரே முதல்வராக தொடர்வார்’ என நடராசன் சொன்னார். என்ன நடந்தது. ‘நான்தான் முதலமைச்சர்’ என்று சொன்னால் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் ஆர்.கே.நகரில் தேர்தல் வேலை பார்ப்பார்களா? இப்போதே கட்சிக்குள் குழப்பங்கள் வந்துவிடாதா? அதனால்தான் தினகரன் அடக்கி வாசிக்கிறார். மெதுவாக காய் நகர்த்துவதுதான் தினகரன் பாணி. விரைவில் சில அமைச்சர்கள் ‘தினகரன் முதல்வராக வேண்டும்’ எனப் பேச ஆரம்பிப்பார்கள் பாரும்.”
‘‘தினகரன்தான் வேட்பாளர் என்று எப்போது முடிவானது?”
‘‘இரண்டு வாரங்களுக்கு முன் சசிகலாவைச் சிறையில் சந்திக்கச் சென்ற போதே தினகரன் தனது ஆசையைச் சொல்லிவிட்டார். சசிகலா அதற்கு மனப்பூர்வமான சம்மதமும் சொல்லவில்லை; அதற்காக மறுப்பும் தெரிவிக்கவில்லை. அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம். யார் தடுத்தாலும், தான் போட்டியிடுவது என்பதில் தினகரன் உறுதியாக இருந்தார். சும்மா இருந்த சசிகலாவை சீண்டிவிட்டு, ‘பொதுச்செயலாளர் ஆகுங்கள்’, ‘முதலமைச்சர் ஆகுங்கள்’ என்று அவசரப்படுத்தியது தினகரன்தான். அவரே இப்போது துடிப்பதற்குக் காரணம், இன்னொரு பன்னீர்செல்வத்தை உருவாக்கி விடக்கூடாது என்பதுதான். ‘அடுத்த தேர்தலில் ஜெயிப்போமா, மாட்டோமா… இந்த நான்காண்டுகளை விட்டுவிடக் கூடாது’ என்பதுதான் தினகரனின் ஆசை!”

‘‘இதற்கு எடப்பாடி பழனிசாமியின் ரியாக்‌ஷன் என்ன?”
‘‘இதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்டால் அடுத்து முதலமைச்சர் பதவியைத்தான் குறிவைப்பார் என்பதில் எடப்பாடிக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ‘யார் வேட்பாளர்? யார் வேட்பாளர்?’ என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தாராம். முதலமைச்சர் சேலத்தில் இருக்கும் நேரமாகப் பார்த்து இந்த அறிவிப்பைச் செய்துவிட்டார்கள். ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், ‘தினகரனை வேட்பாளராகத் தேர்வு செய்ததாக’ அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். செங்கோட்டையனுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம், எடப்பாடியை காலி செய்வதில். இருவருக்கும் ஆகாது என்பதால் சந்தோஷமாக அறிவித்தார்.”
‘‘தினகரனுக்கு முன்பு யார் யார் பெயர்களையோ சொன்னார்களே?”
‘‘ஆமாம்! முதலில் ஆதிராஜாராம் பெயர் அடிபட்டது. அவர், அந்த வட்டாரத்து மக்களின் செல்வாக்கைப் பெற்றவர். தி.மு.க சார்பில் சிம்லா முத்துச்சோழன் நின்றால், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை நிறுத்தலாம் என்றும் சொல்லப்பட்டது. சசிகலாவுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருப்பதால் எம்.ஜி.ஆர் சென்டிமென்ட்டை பயன்படுத்த நினைத்தார்கள். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று லாஜிக் சொல்லப்பட்டது. எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவின்போது அவரது நினைவிடத்துக்கு வந்த சுதா, ‘புரட்சித்தலைவரின் குடும்பத்துக்கு மரியாதை செய்வது இல்லை. யாருக்கும் பதவி தருவது இல்லை’ என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். எனவே, ‘எம்.ஜி.ஆர். குடும்பத்துக்கு மரியாதை செய்வார்கள்’ என்றும் சொல்லப் பட்டது. ஆனால், தினகரன் யாருக்கும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. ‘தேர்தலில் நிற்பது, முதலமைச்சர் ஆவது’ என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.”
‘‘எடப்பாடி ஆட்கள் இப்போதே தங்கள் வேலைகளைத் தொடங்கி இருப்பார்களே?”
‘‘தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே கொங்கு வட்டாரத்து அ.தி.மு.க தலைகள் தனித்தனியாகப் பேச ஆரம்பித்து விட்டனர். இடைத்தேர்தலில் தினகரன் வென்று முதலமைச்சர் ஆகிவிட்டால், அடுத்த பிளவு அ.தி.மு.க-வில் உறுதி என்றே சொல்கிறார்கள்!”
‘‘அதுசரி! தினகரனுக்காக இந்தக் காரியங்களைக் கனகச்சிதமாகப் பார்ப்பது யார்?”
‘‘செங்கோட்டையனும் தளவாய் சுந்தரமும். ஐந்து ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தால் தட்டி வைக்கப்பட்டு இருந்தவர் செங்கோட்டையன். இப்போது தினகரன் தன்னிடம் ஆலோசனை கேட்பதை எல்லாம் தனக்கான இரண்டாவது இன்னிங்ஸாக செங்கோட்டையன் நினைக்கிறார். தளவாய் சுந்தரமும் தினகரனும் எப்போதும் நெருக்கமானவர்கள். இருவரும் எம்.பி-க்களாக இருந்த காலத்து நெருக்கம் அது. அதனால்தான் தளவாய் சுந்தரத்துக்கு டெல்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி பதவியைக் கொடுத்தார் தினகரன். இந்த இருவரும்தான் இப்போது தினகரனுக்கு எல்லாமும்!”

‘‘டெல்லி தலைமை தேர்தல் கமிஷனை நம்பித்தான் தினகரனின் அரசியல் எதிர்காலம் இருக்கிறதா?”
‘‘ஆமாம்! ‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லுமா, செல்லாதா?’ என்ற பிரச்னை, ‘இரட்டை இலை பன்னீர் அணிக்கா, சசிகலா அணிக்கா?’ என்று இப்போது மாறிவிட்டது. ‘பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால், சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனின் பதவியும் செல்லாது. சசிகலா அணியினரால் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மன்றக் குழுவும் கலைக்கப்பட்டுவிடும். மாறாக, ‘சசிகலா பொதுச்செயலாள ராகப் பதவி ஏற்றது செல்லும்’ என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு அளிக்குமேயானால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அ.தி.மு.க-வுக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் உரிமை கோரும் தகுதியை இழப்பார்கள். போட்டி அ.தி.மு.க என்ற இன்னொரு புதிய கட்சி உருவாகலாம். கட்சிகளின் தீர்மானங்களையும் சட்ட விதிகளையும் உற்றுநோக்கும் தேர்தல் ஆணையம், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டே தனது தீர்ப்பினை அளிக்கும் என்கிறார்கள்.”

‘‘விதிகள்தானே முக்கியம்?”

‘‘ஒரு விதி, ‘எந்த ஒரு தீர்மானத்தையும் செல்லத்தக்கதாக மாற்றவேண்டுமானால், அதனை பொதுக்குழுவுக்குக் கொண்டுவரலாம்’ என்று சொல்கிறது. ‘எல்லா விதிகளையும் மாற்றி அமைக்கும் முழு அதிகாரம் பொதுக்குழுவுக்கு உண்டென்றாலும்கூட, பொதுச்செயலாளர் நியமனத்தில் மட்டும், எந்த மாற்றமும் செய்ய முடியாது. அ.தி.மு.க-வின் அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த அடிப்படைக் கட்டமைப்பை எந்தக் காரணம் கொண்டும் மாற்ற முடியாது’ என்கிறது இன்னொரு விதி. ‘பொதுச்செயலாளர் பதவி ஏதாவதொரு காரணத்தால் காலியாகும் பட்சத்தில், முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட அவைத்   தலைவர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள்தான் கட்சியை வழிநடத்த முடியும்’ என்கிறது மற்றொரு விதி. ‘கட்சிப் பொறுப்புகளுக்கு வர விரும்புபவர்கள், ஏற்கெனவே ஐந்து வருடங்கள் கட்சி உறுப்பினராக முழுமையாக தொடர்ந்திருந்தால் மட்டுமே வரமுடியும்’ என்று கால நிர்ணயம் விதிக்கிறது மற்றொரு விதி. இவை எல்லாமே சசிகலாவுக்கு எதிராக இருக்கின்றன.”
‘‘ம்!”
‘‘அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று விதி தெளிவாகக் குறிப்பிடும்போது, ‘பொதுக்குழு உறுப்பினர்களால் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை தேர்தல் ஆணையம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது’ என்பது பன்னீர் அணியினரின் வாதம். ‘புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும்வரை, கட்சியின் அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள்தாம் கட்சியை வழிநடத்திச் செல்லமுடியும்’ என்ற சட்டவிதியைச் சுட்டிக்காட்டி அதன்படியே செயல்படவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தும் என்பதும் பன்னீர் அணியினரின் நம்பிக்கை!”

‘‘டெல்லி போனாரே பன்னீர்?”

‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை, தனது பரிவாரங்களோடு சென்று சந்தித்தார் பன்னீர். அவர்களோடு சென்றது அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யான மனோஜ் பாண்டியன். அவர் சட்டப் புள்ளிவிவரங்களைத் தூவினாராம். ‘தேர்தல் கமிஷனுக்கு சசிகலா கொடுத்துள்ள பதிலில் பொதுக்குழுவால் நான் நியமிக்கப்பட்டுள்ளேன் என்றுதான் சொல்லி இருக்கிறார். இந்த நியமனம் சட்டப்படி செல்லாது என்பதுதான் எங்களது வாதம். அதைத்தான் சசிகலாவே சொல்லி இருக்கிறார்’ என்று மனோஜ் பாண்டியன் சொன்னபோது தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உன்னிப்பாக கவனித்து குறித்துக் கொண்டாராம். விரைவில் முடிவு தெரியும்” என்ற கழுகாரிடம், ‘‘தி.மு.க வேட்பாளர் தேர்வு பற்றிய தகவலைச் சொல்லும்!” என்றோம்.

‘‘தி.மு.க வேட்பாளராக வக்கீல் மருது கணேஷ் அறிவிக்கப்பட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை. முன்பு ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்தான் மறுபடியும் போட்டியிடுவார் என்றே நினைத்தார்கள். இதனால் பலருக்கும் அதிர்ச்சி. ‘சிம்லா முத்துச்சோழனை அறிவிக்கத்தான் ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது மனைவி துர்க்காதான் அதைத் தடுத்துவிட்டார்’ என்று வடசென்னை கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். ‘யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக ஆக்குங்கள், சிம்லா கூடாது’ என்றாராம் துர்க்கா. காமராஜரின் பேத்தியான மயூரி என்பவரும் விருப்பமனு தாக்கல் செய்தார். ‘தினகரன் நிற்கிறார்’ என்று அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் மருது கணேஷ் பெயர் அறிவிக்கப்பட்டது. ‘தினகரனுக்கு ஈடு கொடுக்கும் வேட்பாளர் அல்ல இவர்’ என்று கட்சிக்காரர்கள் முதல்  வார்த்தையே நெகடிவ்வாகச் சொன்னார்கள். ‘ஜெயலலிதாவுக்கு எதிராக சாதாரண சுகவனத்தை 1996 தேர்தலில் நிறுத்தி ஜெயிக்கவில்லையா?’ என்று சிலர் கேட்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சிம்லா முத்துச்சோழனை நிறுத்தியிருந்தால் மட்டுமே கட்சி பலமான போட்டி கொடுத்ததாக இருக்கும் என்று முன்னணியினர் அனைவரும் நினைக்கிறார்கள்!”
‘‘அப்படியா?”
‘‘சிம்லாவுக்கு இல்லை என்பதை ஸ்டாலினே சொல்லி இருக்கிறார். ‘அடுத்தத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்’ என்றும் சொல்லி இருக்கிறார். கண்கள் கலங்கிவிட்டதாம் அவருக்கு. காரில் அழுதபடியே வீட்டுக்குச் சென்றதாகச் சொல்கிறார்கள். 17 பேர் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார்கள். மருது கணேஷை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்பது கட்சிக்காரர்கள் மத்தியில் குழப்பமாக இருக்கிறது. பொதுவாக காசு இல்லாத வேட்பாளரை மாவட்டச் செயலாளர்களுக்குப் பிடிக்காது. அதையும் மீறி இவரை ஆதரிக்கிறார்கள் என்றால், அதற்கு உள்காரணம் இருக்கிறது. கட்சியில் செல்வாக்கான ஆட்களை வேட்பாளராகப்போட்டு அவர் ஜெயித்தால், அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரும்போது, அவர் அமைச்சர் பதவிக்கு அடிபடும் மனிதராக ஆகிவிடுவார். டம்மியான ஆளை வைத்துக் கொண்டால்தான் நல்லது என்று வடசென்னை வி.ஐ.பி-கள் சிலர் சேர்ந்து திட்டம் போட்டார்களாம். அவர்கள் உருவாக்கியதுதான் இந்த வேட்பாளர் என்கிறார்கள். இது இன்னொரு பக்கத்தில் ‘தினகரனைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு’ என்ற ரீதியிலும் தி.மு.க-வுக்கு நெகடிவ்வாகச் சொல்லப்படுகிறது” என்றபடி பறக்கத் தயாரான கழுகாரிடம், ‘‘வந்ததும் ஆரம்பித்த சூப் கதையைச் சொல்லாமல் போகிறீரே?” என்றோம்!
‘‘ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க-வில் கேளும்” என்று கண்ணடித்தபடி பறந்தார் கழுகார்!

Advertisements
%d bloggers like this: