Advertisements

பூச்சிகளே உணவு!

`2050-ம் ஆண்டில் உலகின் முக்கிய உணவுப்பொருளாக இருக்கப்போவது பூச்சிகள்தான்’ என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது ஐ.நா சபை.
`உலகின் மொத்தப் பரப்பளவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏற்கெனவே பூச்சிகளை உணவாக உட்கொள்ள ஆரம்பித்து விட்டன. இன்னும் சில ஆண்டுகளில், இந்தியாவிலும் இந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்’ என பயமுறுத்துகிறது ஐ.நா.
`இனிவரும் காலங்களில், மனித உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும் உணவுகளை மட்டுமே உற்பத்தி செய்தால் போதும். நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்களைப் பயிர் செய்ய, பல லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மக்கள்தொகைப் பெருக்கம், வறட்சி போன்றவற்றின் காரணமாகச் சாகுபடி நிலங்கள் குறைந்துவரும் சூழலில், அது சாத்தியமில்லாத ஒன்று.

அதே நேரம், ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடிசெய்து கிடைக்கும் தானியங்கள் எத்தனை நபர்களின் பசியைப் போக்குமோ அத்தனை நபர்களின் பசியை, பத்துக்குப் பத்து அறையில் பூச்சிகளை வளர்ப்பதன் மூலம் போக்க முடியும். பூச்சிகளில் அதிக அளவு புரதம் உள்ளது. எனவே, பூச்சிகளை உணவாக உட்கொள்வதன் மூலம் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கலாம்’ என்கிறது ஐ.நா-வின் சமீபத்திய அறிக்கை.
பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வத்திடம் இது குறித்துப் பேசினோம். அவர் சொன்ன தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்.
‘‘இன்னும் 30 ஆண்டுகளில், பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நிச்சயம் இடம் பிடிக்கும். நீங்கள் உண்ணாவிட்டாலும், உங்கள் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் நிச்சயம் பூச்சி உணவை ருசிபார்ப்பார்கள். இந்தியாவில் ஈசலைப் பிடித்து வறுத்து உண்ணும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்துவருகிறது.

2050-ம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை, ஒன்பது பில்லியன் கோடியாக மாறும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில், உணவுப் பாதுகாப்பு என்பது முக்கியமான துறையாக விளங்கப்போகிறது. உலகில் வாழும் அனைத்து மக்களின் உணவுத்​ தேவையைப் பூர்த்திசெய்ய, வேளாண் துறையால் மட்டும் முடியாது. அதனால், மாற்று உணவைத் தேடவேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. அப்படி மாற்று உணவாக, பூச்சி உணவுகளை முன்னெடுத்துள்ளது ஐ.நா. காரணம், தற்போது உள்ள 720 கோடி மக்களில் கிட்டத்தட்ட 200 கோடிப் பேர் பூச்சிகளைத்தான் உணவாக உட்​கொள்கிறார்கள் என்ற நடைமுறைதான். புரதம் நிறைந்த உணவுகளை உற்பத்திசெய்ய வேண்டும். அதற்கு, பூச்சிகள் உற்பத்திதான் சரியான தீர்வு என்ற முடிவை எடுத்துள்ளது ஐ.நா” என்கிறார் நீ.செல்வம்.
`மனிதர்கள் ஏன் பூச்சிகளை உணவாக உட்கொள்ள வேண்டும்?’ என்ற கேள்விக்கு, வலுவான மூன்று காரணங்களை முன்வைக்கிறார்கள்.
1. உருவத்தில் மனிதனைவிடச் சிறியதாக இருந்தாலும், உண்மையில் பூச்சிதான் மனிதனைவிட பெரியது. இன்றைய நிலையில், உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் எடையைவிட, உலகில் உள்ள ஒட்டுமொத்தப் பூச்சிகளின் எடை ஆறு மடங்கு அதிகம்.
2. மனிதன், பத்து மாதங்கள் கழித்து ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளைப் பெறலாம். ஆனால் ஒரு தாய்ப் பூச்சி, ஒரு நாளைக்கு 40 முட்டைகள் முதல் 400 முட்டைகள் வரை இடும். வெறும் பத்து நாள்கள் உயிரோடு இருக்கும் சில பூச்சி இனங்கள்கூட, சர்வசாதாரணமாக 4,000 முட்டைகளை இடும். இவ்வளவு வேகமான இனப்பெருக்கம், மற்ற உயிரினங்களில் இல்லை. ஆகவே, குறைந்த நாள்களில் அதிக அளவிலான பூச்சியை உற்பத்தி செய்ய முடியும்.
3. மனிதனின் சராசரியான ஆயுள்காலம்  60 ஆண்டுகள். பூச்சிகளின் சராசரி ஆயுள்காலம், முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப் பூச்சி ஆகிய நான்கு பருவங்களிலும் சேர்த்து மொத்தமே 25 முதல்
40 நாள்கள்தான். அதிகபட்சமாக 60 நாள்கள். எனவே ஆடு, மாடு, கோழிகளைப்போல மாதக்கணக்கில், வருடக்கணக்கில் வளர்க்கத் தேவையில்லை. சிறிய அறையில்கூட ஆயிரக்கணக்கான பூச்சிகளை வளர்க்க முடியும் .

கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, தைவான், கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் வழக்கம் ஏற்கெனவே இருக்கிறது. அதை, அவர்கள் பாரம்பர்ய உணவாகக் கொண்டாடுகிறார்கள்.
ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டில் தென்னை மற்றும் பனை மரங்களின் தண்டுகளில் காதை வைத்துக் கேட்பார்கள். உள்ளே குடையும் சத்தத்தைவைத்து எந்தவிதமான பூச்சி, எந்தப் பருவத்தில் (குட்டி, புழு, வளர்ந்த பூச்சி) இருக்கிறது என்பதைக் கணிப்பார்கள். குட்டிப் புழுவைவிட வளர்ந்த புழுவில் புரதச்சத்துகள் அதிகம். எடையும் அதிகம் இருக்கும் என்பதால், சத்தத்தைவைத்து வளர்ந்த புழுக்கள் உள்ள மரத்தைத் தேர்வுசெய்து, மரத்தில் துளையிட்டு, புழுவை வெளியே எடுத்து, வறுத்து உண்பார்கள். அதேபோல, காங்கோ நாட்டிலும், புழுக்களை வறுத்து உண்ணும் பழக்கம் உண்டு.
மெக்ஸிகோ நாட்டில் மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் பயிர் வகைகளின் விளைச்சல் குறைந்த காலங்களில் முக்கிய உணவாக விளங்குவது பூச்சிகள்தான். எந்தெந்த மாதத்தில் எந்தெந்தப் பூச்சிகள் கிடைக்கும் என்பதற்காக, பிரத்யேக காலண்டர் வைத்திருக்கிறார்கள். நமது காலண்டர்களில், இன்றைக்கு எந்தத் திசையில் சூலம், நல்ல நேரம் எனக் குறிப்பிட்டிருப்பதுபோல, அந்த நாட்டு காலண்டர்களில் பூச்சிகள் கிடைக்கும் காலங்களைக் குறிப்பிட்டிருப்பார்கள்.
ஆஸ்திரேலியாவிலும் பூச்சிகள் சாப்பிடும் வழக்கம் உண்டு. உகாண்டாவில் மின்வெட்டு அதிகம். மின்விளக்கு வெளிச்சத்தில் பூச்சிகளைப் பிடித்து வறுத்து உண்பது உகாண்டா மக்களின் வழக்கம். அங்கு, சமீப நாள்களாகத் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால், ‘பூச்சிகளைப் பிடிக்க முடியவில்லை. எனவே, மின்வெட்டைச் சீர்செய்யுங்கள்’ என மக்கள் போராட்டம் நடத்தும் அளவுக்குப் பூச்சி உணவு, அந்த மக்களின் பெரும் விருப்பமாக இருக்கிறது.
சீனா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நம் ஊரில் `சிக்கன் 65′ விற்பதுபோல, பிளாட்பாரக் கடைகளில் பூச்சி வறுவல் கிடைக்கிறது. உலகின் பெரும்பாலான மக்கள், பூச்சிகளை உணவாக உண்கின்றனர். இப்படி, பூச்சி உணவை உட்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது. விரைவிலேயே இந்தப் பூச்சிகள் நம் தட்டுகளுக்கும் வரலாம். கெட் ரெடி!


ஆகா என்ன ருசி!
தைவான் நாட்டில் உள்ள உலகக் காய்கறி ஆராய்ச்சி மையத்தின் பூச்சிகள் துறைத் தலைவர் முனைவர் சீனிவாசன் ராமசாமி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரிடம் பேசினோம்… “பூச்சி உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியக் காரணிகளால், அவற்றை உண்ணும் பழக்கம் சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது. பொதுவாக, பூச்சி உணவுகளிலிருந்து சர்க்கரை, புரதம், கொழுப்பு அமிலங்கள், தாதுஉப்புகள் மற்றும் வைட்டமின்கள் வெகுவாகக் கிடைக்கின்றன. அத்தியாவசிய அமினோ அமிலங்களும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் இருக்கின்றன. அதில் உள்ள தரமான புரதங்கள், வழக்கமான உணவுகளில் உள்ள புரதப் பற்றாக்குறையைப் போக்கக்கூடியவை. சமீபத்தில் சென்னை உள்பட இந்தியாவின் ஏழு பெருநகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று, கிட்டத்தட்ட 90 சதவிகித நுகர்வோரின் உணவுகளில், புரதப் பற்றாக்குறை நிலவுவதை உறுதிசெய்துள்ளது. எனவே, பூச்சி உணவுகள் இந்தியர்களின் உணவுகளிலிருக்கும் புரதத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவல்லவை.
பாலைவன வெட்டுக்கிளிகளில், கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய ஸ்டீரால்கள் மிகுந்திருப்பதாகவும், அவற்றை உண்பவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்றும் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
2050-ம் ஆண்டு, உலக அளவில் ஏறக்குறைய 930 கோடி மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், பூச்சிகளை உண்ணும் பழக்கம் அதிகரித்தால், நமக்குக் கூடுதலான உணவு வகைகள் கிடைப்பதன் மூலம், இந்தப் பற்றாக்குறையை ஓரளவுக்கு நிவர்த்திசெய்ய முடியும். பூச்சி உணவுகளை உற்பத்தி செய்வது ஒரு தொழிலாக மாறும்போது, உணவுப் பற்றாக்குறை காலங்களில் பூச்சி உணவுகள் முக்கியமான ஓர் உணவாக மாறும். எனவே பூச்சி உணவுகள், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்’’ என்கிறார் சீனிவாசன் ராமசாமி.


சவாலைச் சமாளிக்கும் பூச்சி உணவு

பூ
ச்சிகளை உணவாக உட்கொள்வது தொடர்பான அறிக்கையில், ‘2050-ம் ஆண்டு உலக மக்கள்தொகை ஒன்பது பில்லியனாக இருக்கும். அதனால் உணவு மற்றும் இருப்பிடத்துக்கான தேவை, தற்போதைய தேவையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். ஏற்கெனவே இருப்பிடங்களுக்காக விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன. அத்துடன் பருவநிலை மாற்றம், தண்ணீர்த் தட்டுப்பாடு ஆகியவை விவசாயத்துக்கு மாபெரும் சவால்களாக உள்ளன. தற்போதைய சூழலில் உலக அளவில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் பட்டினியுடன் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் விவசாயத்துக்கான சவால்களைச் சமாளித்து, அனைவருக்கும் உணவு அளிப்பது மிகப்பெரிய சவலாக இருக்கும். அதற்காக தற்போதைய விவசாய முறைகளுடன் இணைந்து, மாற்றுவழி தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கினோம்.
பல மாற்றுவழிகள் ஆராயப்பட்ட நிலையில், பூச்சிகளை உணவாக  உட்கொள்வது சிறந்த முடிவாக இருந்தது. உலக அளவில் இரண்டு பில்லியன் மக்கள் தற்போது பூச்சிகளை உணவாக உட்கொள்கிறார்கள். மனிதர்களுக்குத் தேவையான அத்தனை சத்துகளும் அடங்கிய பூச்சிகளை, குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், பூச்சி உணவு எதிர்வரும் காலங்களில் முன்னெடுத்துச் செல்லப்படும். பாரம்பர்ய அறிவையும் நவீன அறிவியலையும் இணைத்து, இந்தச் செயல்திட்டத்தை முன்வைத்துள்ளோம். இனி எதிர்காலத்தில் பூச்சி உணவுகள்தான் உணவு பற்றாக்குறையை ஓரளவுக்குச் சரிசெய்யும்’ எனக் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்புப் பிரிவின் உதவி இயக்குநர் எட்வர்டோ ரோஜாஸ் பிரியலீஸ்.


பூச்சியும் மனிதனும்
லகில் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கையில் இதுவரை வகைப்படுத்தப்பட்டுள்ளவை 10 லட்சம் மட்டுமே. வகைப்படுத்தப்படாத பூச்சிகளின் எண்ணிக்கை, 6 முதல் 10 மில்லியன். வகைப்படுத்தப்பட்டப் பூச்சிகளில் கிட்டத்தட்ட 1,900 பூச்சிகள், மனிதன் உண்ணக்கூடியவை. பூச்சிகளால் மனித இனம் அறிந்துகொண்ட தொழில்நுட்பங்கள் ஏராளம். இன்றைய கட்டடங்களின் புளூ பிரின்ட், கறையான் புற்றுகளையும் தேன்கூடுகளையும் காப்பியடித்து உருவாக்கியதுதான். தன்னை அழித்து, மனிதனைப் பகட்டாகக் காட்டுவதற்காக பட்டு கொடுக்கும் பட்டுப்பூச்சி, தனது சேமிப்பை எல்லாம் மனிதனுக்கு மருந்தாக வழங்கும் தேனீக்கள், அரக்கு தயாரிக்கப் பயன்படும் அரக்குப்பூச்சி… எனப் பூச்சிகளால் மனித இனம் அடைந்துவரும் நன்மைகள் ஏராளம்

Advertisements
%d bloggers like this: