Advertisements

சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம்! – என்ன லாபம், என்ன சிக்கல்..?

சிங்கப்பூர் சென்றுவர வெறும் ரூ.4,500-ல் விமானக் கட்டணம்; பாங்காக் சென்றுவர வெறும் ரூ.6,000-ல் விமான டிக்கெட்… என்கிற விளம்பரங்களை எல்லாம் பார்க்கும்போது, ‘அட, கட்டணம் ரொம்ப குறைச்சலா இருக்கே. பேசாம நாமே ஒரு டிக்கெட் வாங்கி சிங்கப்பூர் போய் வரலாம்போல!’ என்கிற ஆசை நம்மில் பலருக்கு வரும். மூன்று மாதம், ஆறு மாதங்களுக்குப் பிறகான விமான டிக்கெட்களை, மலிவு விலையில் நம்பி வாங்கலாமா, இந்த மலிவு விலை விமான டிக்கெட்டுகளை வாங்குவதினால் என்ன நன்மை, என்ன தீமை?  

கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் சுண்டியிழுக்கும் இந்த மலிவு விலை பயணச்சீட்டுகளை ஒருமுறை வாங்கிவிட்டால், அவற்றை கேன்சல் செய்யவோ,  பயணத்தை வேறு தேதிக்கு மாற்றவோ முடியாது என்பது பலருக்கும் தெரியாத செய்தி. மூன்று மாதம் கழித்து வரும் தேதிகளில் ரத்து பண்ண முடியாத, தேதியை மாற்றிக்கொள்ள முடியாத பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வது ரிஸ்க்கான விஷயம். மூன்று மாத காலமே ரிஸ்க் என்கிறபோது, ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்வது நிச்சயமாக தவறு. 

முன்பதிவு செய்யப்படும் இதுமாதிரியான விமான டிக்கெட்டுகளை வெகு சில விமான நிறுவனங்கள் மட்டும் கேன்சல் செய்ய அனுமதித்து, பணத்தைத் திரும்பக் கொடுக்கின்றன ஆனால், ரத்துக் கட்டணமாக மிக அதிகமான தொகையை எடுத்துக்கொள்கின்றன.
அதேபோல, ஒரு விமானத்தில் குறிப்பிட்ட சீட்டுகளை மட்டுமே இப்படி மலிவு விலை ஆஃபரில் தருகின்றன சில விமான நிறுவனங்கள்.  ஒரு பெரிய குடும்பமோ அல்லது நண்பர்கள் குழுவோ, இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த நினைக்கும்போது அது நிறைவேறாமல் போகிறது. உதாரணமாக, 5 முதல் 10 சீட்டுகளை மட்டுமே இதுபோன்ற அறிவிப்புகளின் மூலம் ஒதுக்கிவிட்டு, ‘பயணக் கட்டணத்தில் 50% தள்ளுபடி’ என அறிவிக்கின்றன. உண்மையில், விமானக் கட்டணத்தில் அடிப்படைக் கட்டணத்தைவிட வரிகளே 80% இருக்கும். எனவே, கவர்ச்சிகரமான அறிவிப்பினை நம்பி, டிக்கெட்டைப்  பதிவு செய்துவிட்டு, பிற்பாடு பணத்தையும், நேரத்தையும் இழக்க நேரிட வாய்ப்புண்டு.  
இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன், முதலில் பயணம் குறித்த தெளிவான முடிவுகள் உங்களிடம் இருக்கவேண்டும். உங்கள் பயணம் எப்போது, எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு என்பது தீர்மானமாகத் தெரிவதுடன், அந்த சமயத்தில் பயணத்தை ரத்து செய்யும்படி முக்கியமான வேலை எதுவும் நமக்கு இருக்குமா என்கிற கேள்விகளுக்கும் உங்களிடம் தெளிவான பதில்கள் இருக்கவேண்டும். இந்த  சலுகைக் கட்டணத்தில் நீங்கள் முன்கூட்டியே பதிவு செய்வதாக இருந்தால், அந்த அறிவிப்பினால் உங்கள் பணத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பு வருமா என்று பார்க்கவேண்டும்.
இதில் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம், ஒரு ஆண்டுக்கு முன்பாகவோ, ஆறு மாதங்களுக்கு முன்பாகவோ செய்யும் முன்பதிவு தொகைக்கே, இரண்டு மாதத்துக்கு முன்புகூட முன்பதிவு செய்ய முடியும் என்பதே.  தற்போது எடுக்கப்பட்ட ஒரு சர்வேயின் முடிவின்படி, பல மாதங்களுக்குமுன் செய்யும் முன்பதிவை விட, 15 நாட்களுக்கு முன்பு வரும்  திடீர் அறிவிப்புகளில் அதிக பலன்கள் கிடைப்பதாக தெரிய வந்திருக்கிறது. குறிப்பிட்ட சில சீட்டுகள் மட்டுமே இருந்தால், ‘ஃப்ளாஷ் விற்பனை’ அறிவிப்பின் மூலம், மிக மிகக் குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்களை விற்பது தற்போது சரளமாகியுள்ளது.
இதுபற்றி சென்னையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவன உரிமையாளர் சரோஜினி சண்முகசுந்தரத்திடம் கேட்டோம்.
“பயணத்தேதி பற்றி உங்களுக்கு  உறுதியாகத் தெரிந்தால், இதுபோன்ற சலுகைக் கட்டண அறிவிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பயணத்தில் மாற்றம் இருக்கும் என்கிற பட்சத்திலோ, உறுதி செய்யமுடியாத பயணமாகவோ இருந்தால், இந்த வகை சலுகைக் கட்டண  டிக்கெட்டு களைத் தவிர்ப்பதே நல்லது. காரணம், இதில் பணம் வாபஸ் இல்லை என்பதுதான்.

அதேபோல், இந்த வகை ஆஃபர் ஏர்லைன்ஸ் ஃப்ளைட்டுகளில் சொகுசு வசதி அதிக அளவில் இருக்காது. இதில் கவனிக்க வேண்டியது, உணவு மற்றும் உடைமைகளுக்கு நீங்கள் தனியாகப் பணம் செலுத்தவேண்டி இருக்கும். ஒரு சிறிய விடுமுறை நாள்களில் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு, குறைவான செலவில் சென்றுவர விரும்புபவர்களுக்கு இந்த சலுகைக் கட்டண டிக்கெட்டுகள் சரிதான். ஆனால், சிங்கப்பூர் போகவே குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும். அதுவரை உணவோ, காபியோ இல்லாமல் இருக்க முடியுமா என்று  யோசிக்க வேண்டும்.  அதுவே குடும்பமாகப் பயணம் செய்தால், குழந்தைகளை சிறு தீனி இல்லாமல் கூட்டிச் செல்ல இயலாது. ஆனால், விமானத்துக்குள் தனியாக உணவு வாங்கினால், அது பல மடங்கு அதிகம் கொடுத்து வாங்கும்படி இருக்கும். மேலும், அவர்கள் அனுமதித்த அளவைவிட ஒரு கிலோ அதிகம் லக்கேஜ் இருந்தால்கூட, அதற்கு பணம் கட்ட வேண்டி இருக்கும். எங்கள் வாடிக்கையாளர்களில் அப்பர் மிடில் கிளாஸ் வகுப்பைச் சேர்ந்தவர்கள்கூட இந்த வகை வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில்லை” என்றார். 
ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டு விமானச் சேவைக்கும், அங்கிருந்து இயக்கப்படும் வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கும் ‘பீக் சீஸன்’ என்கிற காலம் கண்டிப்பாக இருக்கும். அந்த சமயத்தில், இத்தகைய ஆஃபர்கள் கிடைக்காது. உதாரணத்துக்கு, இந்தியாவில் டிசம்பர்  15 முதல் ஏப்ரல் 15 வரை பீக் சீஸன். இந்த காலகட்டத்தில் நிச்சயமாக ஆஃபர்களை விமான நிறுவனங்கள் அறிவிக்காது. சில விமான நிறுவனங்கள், இந்தக் காலத்தில் சிறப்புத் தொகை டிக்கெட்களை விற்பதற்காக சில மணி நேர ஆஃபர் அறிவிப்புகளை வெளியிட்டு, சில சீட்டுகளை மட்டும் விற்பனை செய்தும் வருகின்றன.
உள்நாட்டுச் சேவையில், ரத்துக் கட்டணம் குறைவாக இருக்கும் ஆஃபர் சீட்டுகளை 20-25 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்வதும், வெளிநாட்டுச் சேவையில் 45-60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்வதுமே சிறப்பனதாக இருக்கும் என அடிக்கடி பயணம் செய்பவர்களின் கருத்தாக இருக்கிறது!

Advertisements
%d bloggers like this: