ஒரு நாளை அழகாக்கும் 10 விஷயங்கள்

ந்த 21ம் நூற்றாண்டு, பல விஷயங்களை நமக்கு எளிமைப்படுத்தியுள்ளது. என்னதான் வசதிகளும் வாய்ப்புகளும் உருவானாலும் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைநிலை மட்டும் உயர்ந்துவிடவில்லை. ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிமுறைகளைத் தேடி நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதன்படி செய்ய முடிந்தால், அடிப்படையான சிறிய விஷயங்களில் காட்டும் அக்கறை, பெரிய விஷயங்களைச் சாதிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொடுக்கும். நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ளவும் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தினசரி பின்பற்ற வேண்டிய 10 விஷயங்கள் இதோ…

எளிய பயிற்சிகள்


அதிகாலையில் எழுந்து, 5-6 மணி அளவில் கண் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, நன்றாகத் தெரிந்த யோகா பயிற்சி ஆகியவற்றைத் செய்வது நல்லது. இதனால், அந்த குறிப்பிட்ட நேரம் நம் மனம் ஒருநிலைப்படுகிறது. இது, அன்றைய தினத்தை நேர்த்தியாக்க உதவுகிறது.

சிறிய தட்டு
உணவு உண்ணும்போது சிறிய தட்டுகளைப் பயன்படுத்துவது நல்லது. இதன்மூலம் நாம் அதிகப்படியாக உண்ணாமல் பசிக்கு மட்டும் உண்போம். அதேபோல, முதலில் தட்டில்வைத்த உணவைச் சாப்பிட்டுவிட்டு அரை நிமிடம்  சிறிது இடைவெளி விட்டு, அடுத்த வாய் உணவை உண்ணலாம். முதலில் சாப்பிட்ட உணவு போதுமானதாக இருந்தால் மீண்டும் சாப்பிட வேண்டாம் என்று தோன்றும். ஒரு நாளைக்குக் குறைந்தது ஒன்று முதல் இரண்டரை லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.

நின்று பழகலாம்
இன்றைய சூழலில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்தான் அதிகம். இப்படி அமர்ந்தே இருப்பது உடலுக்கு நல்லதல்ல. அதனால், அவ்வப்போது 5-10 நிமிடங்கள் நிற்க வேண்டும். போன் பேசும்போதும், ஏதாவது வாசிக்க நேரிடும்போதும் நின்றுகொண்டே செய்யலாம். இது, உடல் முழுவதுமான ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவதோடு, பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாகத் தெரியாது.

மொபைலை இரண்டு மணி நேரம் ஆஃப் செய்யலாமே!
ஒருநாள் முழுவதுமே மொபைலோடுதான் கழிகிறது. இதனால் ஏற்படும் மனஉளைச்சல் அதிகம். இதை நாம் நேரடியாக உணராவிட்டாலும், ஒரு சைரன் மூளைக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும். கண்களுக்கும் நம் மூளைக்கும் அதீத வேலையைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். பகலில் மொபைல் இல்லாமல் இருப்பது பலருக்குக் கடினம். ஆதலால், தினமும் இரவு உறங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு முன்பு மொபைலை ஆஃப் செய்து வைக்கலாம். இதனால், மனம் சற்று அமைதி அடையும். நன்றாக உறக்கம் வரும். குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடலாம். இது மன அமைதிக்கு மிகவும் முக்கியமானது.

செயலற்று சும்மா இருத்தல்
தினமும் 5-10 நிமிடங்கள் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக, சும்மா இருக்க வேண்டும்.  இந்த நேரத்தில், நம் கனவுகளைப் பற்றி, விருப்பங்கள் பற்றிச் சிந்திக்கலாம். இது ஒருவித பாசிட்டிவ் வைப்ரேஷனை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், எந்தவித எதிர்மறை எண்ணங்களும் வேண்டாம்.

தினம் ஒரு காய்கறி
அன்றாட உணவில், ஒரு காய், ஒரு கீரை எனச் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது, திங்கட்கிழமை அரைக்கீரை, கேரட் சாப்பிட்டால், செவ்வாய்க் கிழமை முருங்கைக்கீரை, அவரைக்காய் என்று சாப்பிடலாம். இதுபோல ஏதாவது ஒரு காய் அல்லது கீரையைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏழு நாள்களும் ஏழு விதமான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. பல வண்ணக் காய்கறிகளில் பல வண்ணச் சத்துகள் உள்ளன என்பதால், தினமும் ஒரு வண்ணக் காய்கறி சேர்த்துக்கொள்ளகலாம்.

30 நிமிடங்களுக்கு முன்னால்…
குறித்த நேரத்தில் தூங்கி, எழும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். 10 மணிக்குத் தூங்குவதாக இருந்தால், 9.30க்கு எல்லாம் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். மொபைலை வீட்டின் வரவேற்பறையிலேயே வைத்துவிடுங்கள். இரவில் தூக்கம் எந்த அளவுக்கு நன்றாக ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மறுநாள் புத்துணர்வோடு இருக்கலாம்.

நாட்குறிப்பு
காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வது வரையிலான நிகழ்வுகளைப் பதிவு செய்யுங்கள். மற்றவர்களுக்கு நாம் செய்த உதவி, அதனால் நமக்கு ஏற்பட்ட உணர்வு, நாம் அதில் இருந்து கற்றுக்கொண்டது என்று, சிறுசிறு குறிப்புகளாக எழுதிவைக்கலாம். இதை மீண்டும் படிக்கும்போது நமக்கு ஒரு நல்ல தெளிவு ஏற்படும். இதிலும் நமக்குத் தேவையில்லாத விஷயங்களைக் குறித்துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை இந்தக் குறிப்புகளை வாசித்துப்பார்ப்பது நல்லது.

நடக்கலாம்
தினமும் காலை அல்லது மாலை ஏதாவது ஒருவேளை நடக்க வேண்டும். இதை உடற்பயிற்சி போல ட்ரெட்மில்லில் செய்யாமல், திறந்த வெளியில் செய்வது நல்லது. காலை அல்லது மாலையில், மிதமான வெயிலில் நடப்பதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கிறது. இதனால், எலும்புகள், உள்ளுறுப்புகள் வலுவாகின்றன. மேலும், இப்படி நடப்பது உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது.

சுத்தம் மிகவும் முக்கியம்
காலையில் எழுந்ததும், படுக்கையைச் சரிசெய்வது மிகவும் முக்கியம். எழுந்ததுமே மந்தமான சூழலில் இருந்தால், நம் மூளை வேலை செய்வதற்குச் சிரமப்படும். இதனால், நம் படுக்கையைச் சுற்றி சுத்தம் செய்துவிட்டு அன்றைய நாளைத் தொடங்கலாம். குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் தினமும் குளிப்பது உடலுக்கு நல்லது.

%d bloggers like this: