Advertisements

தமிழ்நாடு அரசு… நிஜமாய் ஆள்வது யார்?

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆட்சி லகான், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது போயஸ் கார்டனின் கதவுக்குப் பின்னால் இருந்து ஆட்சி செலுத்திய சசிகலா, ஜெயலலிதா இறந்த பிறகு, சிறைக் கதவுக்குப் பின்னால் இருந்து ஆட்சி நடத்துகிறார். தமிழ்நாட்டின் தலைவிதி, தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கிறது.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஒரே நேரத்தில் கோலோச்ச நினைத்தார் சசிகலா. அவரை முதலமைச்சர் ஆகவிடாமல் தட்டுத்துவிட்டது உச்ச நீதிமன்றம். அவரது பொதுச்செயலாளர் பதவியின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறது தேர்தல் ஆணையம். ஆனாலும், அந்த டபுள் ரோல் ஆக்‌ஷனில் சசிகலா இருக்கிறார். அவரை முகமாகவும் முகமூடியாகவும்கொண்டு வலம்வருகிறார் தினகரன். இவர்கள் இருவரும்தான் இன்றைய ஆட்சியில் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர்கள். இவர்களது நிழலாட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. தமிழ்நாட்டு அரசை நிஜமாய் ஆள்வது யார்?
இன்றைய தினத்தில் 24 மனிதர்கள் அதிகாரமையங்களாக வலம்வருகிறார்கள்.

சசிகலா
ஜெயலலிதா `மேடம்’மாக இருந்தபோது சின்ன மேடம். ஜெயலலிதாவை `அம்மா’ என அழைத்தபோது சின்னம்மா. ஜெயலலிதா இருக்கும்போதே பல நேரங்களில் நிஜமும் நிழலுமாக ஆட்சி நடத்தியவர் சசிகலா. ஜெயலலிதா இறந்த பிறகு, விடுவாரா? போயஸ் கார்டனில் இருந்தாலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தாலும் சசிகலாவின் ஆட்சியே தொடர்கிறது. உண்மையில் தினகரனுக்கு சித்தி இவர். சசிகலாவை அடிக்கடி பெங்களூருக்குச் சென்று சந்திக்கிறார் தினகரன். அவரிடம் ஒப்புதல் வாங்கித்தான் அனைத்தையும் செய்கிறார். இல்லையென்றால், சித்தி ஒப்புதல் தந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறார். நான்கைந்து நாள்களுக்கு ஒரு முறை, அமைச்சர்கள் பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்திக்கிறார்கள். அவரிடம் நடந்ததைச் சொல்கிறார்கள்; நடக்கவேண்டியதை அவர் சொல்கிறார்.
நான்கு ஆண்டுகள் அவரால் சிறையைவிட்டு வெளியே வர முடியாது. “மீன ராசிக்காரர். ரேவதி நட்சத்திரம். ஜாதகப்படி தற்போது கஷ்டகாலங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது” என அவரே சொல்லியிருக்கிறார். 64 வயது ஆகிறது. வெளியே வரும்போது இன்னும் தளர்ந்திருக்கலாம் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும். பெங்களூரு சிறைச்சாலைக்குப் போகும் முன்னர், இருந்த உடல் எடையைவிட தற்போது எட்டு கிலோ குறைந்துவிட்டாராம். சில நேரங்களில் விருப்பம் இல்லாமல் பேசுவதாகவும், சில நேரங்களில் உற்சாகத்துடன் ஆலோசனை சொல்வதாகவும் சொல்கிறார்கள்.

தினகரன்
சசிகலாவின் அக்கா மகன். ஜெயலலிதாவால் எம்.பி-யாக அழகு பார்க்கப்பட்டவர். ஆனால், அவரது ‘சேர்க்கை’ சரியில்லாததால் ஜெயலலிதாவால் டம்மி ஆக்கப்பட்டவர்.
சுமார் பத்து ஆண்டுகாலம் போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டவர். ஜெயலலிதா இறப்புக்குப் பிறகுதான், உள்ளே வந்தார். அம்மா இறப்பார், சின்னம்மா சிறைக்குப் போவார் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில், இரண்டு லட்டுகள் தினகரனுக்குக் கிடைத்தன. அ.தி.மு.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆனார். இப்போது ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். “வென்று வந்தால், எடப்பாடி பழனிசாமியைத் தூக்கிவிட்டு அண்ணன்தான் முதலமைச்சர்” என தம்பிமார்கள் இப்போதே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
கட்சிக்காரர்கள் அனைவரையும் நினைத்த நேரத்தில் சந்திக்கிறார் தினகரன். அமைச்சர்களும் இவரின் லைனுக்கு உடனே வருகிறார்கள். அமைச்சர் செங்கோட்டையனும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் தினகரனுக்கு இடதும் வலதும் போன்றவர்கள். இவர்கள் ஆலோசனைப்படி தினகரன் நடக்கிறார். தினகரன் சொல்லும் ஆலோசனைகளை இவர்கள் செயல்படுத்து கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு விஷயத்தையும் இவரைக் கேட்டுத்தான் செய்கிறார். அதிகாரிகள் அனைவரும் தினகரனைத் தனித்தனியாகச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள்.

திவாகரன்
சசிகலாவின் சகோதரர். ‘பாஸ்’ என்று கட்சிக்காரர்கள் அழைப்பார்கள். சுமார் 25 ஆண்டுகளாக போயஸ் கார்டனுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டவர். ஜெயலலிதா இறந்ததும் கட்சி நிர்வாகம் சசிகலாவால் திவாகரனுக்குத் தரப்பட்டது. ஆனால், அதை தினகரன் விரும்பவில்லை. சசிகலா சிறைக்குப் போனதும் திவாகரனின் செல்வாக்குக் குறைந்தது.
ஆனாலும் தனக்கென அமைச்சர்கள், அதிகாரிகள் வைத்துள்ளார் திவாகரன். அவர்கள் மூலமாக தனக்கு வேண்டியதைச் சாதிக்கிறார். டெல்டா மாவட்டத்தில் எப்போதும் அவர் பேச்சைத்தான் கேட்பார்கள். ‘அவருக்கு வேண்டியதைச் செய்துகொடுங்கள். ஆனால், கட்சியில் பதவி தரப்படாது’ என்று தினகரன் சொல்லியிருக்கிறார்.

ஜெயானந்த்
திவாகரனின் மகன் இவர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உடன் இருந்தவர். கவர்னர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவைத் தனது அப்பாவுடன் சந்தித்தவர். தற்போது டெல்லியில் முகாமிட்டு தேர்தல் கமிஷன் தொடர்பான வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அமைச்சர்களும் அதிகாரிகளும் இவர் பெயரைக் கேட்டாலே பவ்யம் காட்டுகிறார்கள். பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது பல்வேறு பரிந்துரைகளைக் கொடுத்து அவரையே மூச்சுத்திணறவைத்தவர். ‘இதெல்லாம் சின்னம்மாவுக்குத் தெரியுமா?’ என்று பன்னீர் கேட்டதால்தான் அவரது பதவிக்கே சிக்கல் வந்தது.

விவேக்
பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் இருக்கும் அண்ணி இளவரசியின் மகன். போயஸ் கார்டன் வீட்டில் வளர்ந்த பிள்ளை. இவரது திருமணத்தை ஜெயலலிதா நடத்திவைக்கவேண்டியது. கடைசி நேரத்தில் அவர் வரவில்லை. விவேக், தொழில் நிறுவனங்களை நேரடியாக டீல் செய்கிறார். இப்போது ஜெயா டிவி நிர்வாகமும் இவரிடமே இருக்கிறது.
ஜெயானந்தும், விவேக்கும் மாறி மாறி பெங்களூரில் முகாமிட்டு வருகிறார்கள்.

டாக்டர் வெங்கடேஷ்
சசிகலாவின் அண்ணன் மகன். இளைஞர் மற்றும் இளம் பெண்களை கட்சிக்குள் இழுக்க ஜெயலலிதா போட்ட திட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர் டாக்டர் வெங்கடேஷ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் தலைமைக்கழகப் பொறுப்பாளர் மகாலிங்கத்தைத் தன்வசம் வைத்துக்கொண்டு தினமும் கட்சி அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தார் வெங்கடேஷ். கட்சி அலுவலகமே தனது கட்டுப்பாட்டில் இயங்குவதாகக் காட்டிக்கொண்டார். சசிகலா எங்கே போனாலும் அட்வான்ஸ் பைலட்டாக வெங்கடேஷ்தான் செக்யூரிட்டி ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டார். ஆனால், தினகரனைத் துணைப் பொதுச்செயலாளராக நியமித்த பிறகு, கட்சி அலுவலகத்துக்கு வருவதில்லை. இருந்தாலும், தனக்கான ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு தனி லாபி செய்துவருகிறார்.
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஐந்து பேர் காட்டிலும் வீட்டிலும் மழைதான்.

எடப்பாடி பழனிசாமி (முதல்வர்)
ஜெயலலிதா காலத்தில் போயஸ் கார்டனின் ‘லாக்கர்’ ஆகச் செயல்பட்டவர். ஒருகாலத்தில் கட்சி, ஆட்சி இரண்டின் வரவுசெலவுகளைக் கவனித்தவர். வருமானம் கொழிக்கும் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை இரண்டையும் தன்வசம் வைத்திருந்தவர். தனது நேரத்துக்காகக் காத்திருந்தார். பன்னீர் மாறியதால் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு கிடைத்தது. கொங்கு வட்டாரத்துக்காரர். கொங்கு சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் இவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதுதான் பலம். எல்லாவற்றையும் தினகரனைக் கேட்டுத்தான் செய்கிறார். ‘எதைச் செய்தாலும் மூத்த அமைச்சர்களிடம் சொல்லாமல் செய்ய வேண்டாம்’ என்று தினகரனும் இவருக்குத் தடை போட்டுள்ளார். செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்தான் அந்த மூத்த அமைச்சர்கள்.

செங்கோட்டையன் (பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்)
தினகரன், இவர் பேச்சை அதிகம் கேட்கிறார். அந்த அளவுக்கு செங்கோட்டையன் செல்வாக்கு உயர்ந்துவிட்டது. முதல்வர் பதவிக்கு இவர் பெயரைத்தான் முதலில் சொன்னாராம் சசிகலா. கடைசி நிமிடத்தில், எடப்பாடி பழனிசாமி உள்ளடி வேலைகளில் இறங்கி, தினகரன் மூலம் சசிகலாவைச் சமாதானப்படுத்தி, செங்கோட்டையன் பெயரை நீக்கினாராம். சீனியர் அமைச்சரான இவரின் குடும்பப் பொருளாதார நிலைமை தற்போது சரியில்லை. இவரின் முதல் வெற்றியே, ஆறு ஆண்டுகளாகக் கல்வித் துறையில் ஆதிக்கம் செய்து வந்த சபீதா ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றியது. இதுவே செங்கோட்டையன் பவரைக் காட்டியது.

வேலுமணி (உள்ளாட்சித் துறை அமைச்சர்)
எடப்பாடி பழனிசாமியின் வலது கரம். உள்ளாட்சி நிர்வாகம் கைவசம் இருப்பதால், கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை கூல் படுத்தியதில் முக்கியமானவர். கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆனதால், அதைக் காப்பாற்றத் துடிக்கிறார். இவரிடம் ஆலோசனை கேட்டுத்தான் எடப்பாடியும் செயல்படுகிறார். பட்டுவாடா செய்வதில் எடப்பாடிக்குச் சளைக்காதவர்.

தங்கமணி (மின்துறை அமைச்சர்)
எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்கு உரியவர். கான்ட்ராக்ட்களில் மூக்கை நுழைக்காமல் இருந்துவருகிறார். ‘இ’ டெண்டரை மின் துறையில் அறிமுகப்படுத்தி, மிகப்பெரிய மூன்று கான்ட்ராக்ட்டுகளை மத்திய அரசு நிறுவனமான ‘பெல்’லிடம் ஒப்படைத்திருக்கிறார். இதை வெகுவாகப் பாராட்டிய எடப்பாடி, தனது இடதுகரமாக வைத்து ஆலோசனைகளைக் கேட்டுவருகிறாராம். எடப்பாடியின் கஜானா இவர்தான். 

ஜெயக்குமார் (நிதித்துறை அமைச்சர்)
சென்னை அரசியலில் கரை கண்டவர். இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் கருத்துகளைத் தெளிவாகப் பேசினார். அரசியலில் எந்தச் சிக்கலான சூழ்நிலை வந்தாலும் அமைதியாகச் சமாளிப்பதில் கைதேர்ந்தவர். இவரை, சென்னை அரசியலுக்காகவே வைத்துள்ளார்கள்.

திண்டுக்கல் சீனிவாசன் (வனத் துறை அமைச்சர்)
ஜெயலலிதா காலத்தில் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் விசுவநாதன் ஆகியோர் அரசியலில் பிரபலமாவதற்கு முன்பு, சீனிவாசன்தான் பிரபலம். கட்சிப் பொருளாளராகவும் இருந்தவர். 14 வருடங்கள் பதவி ஏதுமில்லை. ஜெயலலிதா திரும்ப அழைத்து, திண்டுக்கல் தொகுதியில் ஸீட் கொடுத்தார். ஜெயித்துவிட்டார். அதன் பிறகு, வனத் துறை அமைச்சராக ஆக்கினார் ஜெயலலிதா. தற்போது தினகரனே கதி என சரண்டர் ஆகிவிட்டார் சீனிவாசன்.
இந்த ஆறு பேரும் கோட்டையைக் கையில் வைத்துள்ளவர்கள்.


அதிகாரிகளில் யார் பவர்ஃபுல்?

கிரிஜா வைத்தியநாதன் (தலைமைச் செயலாளர்)
பாசிட்டிவ் சிந்தனை கொண்டவர். முன்பெல்லாம் பைஃலில் கையெழுத்துப் போடவே தயங்குவார். இப்போதெல்லாம் உடனுக் குடன் முடிவு எடுக்கிறார். சீனியாரிட்டிபடி பதவியைப் பிடித்தவர். `ஆட்சி நீடிக்குமா… இல்லையா?’ என்ற சூழ்நிலையில், செயல்படாத அரசு நிர்வாகம் நடக்கிற சூழ்நிலையில், இவர் போன்ற நடுநிலை அதிகாரி மட்டும் இருந்து என்ன ஆகப்போகிறது?

நிரஞ்சன் மார்டி (உள்துறைச் செயலாளர்)
எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, இவர் துறைச் செயலாளராக இருந்தவர். அந்த வகையில், முதல்வருடன் நல்ல அறிமுகம் உண்டு. அரசு மேலிட விருப்புவெறுப்புக்கு தகுந்த மாதிரி ஐ.பி.எஸ் மாறுதல்களைப் போடுவதே இவரது பணி.

சண்முகம் (நிதித்துறைச் செயலாளர்)
நிதி நிலைமை மோசமான சூழலில் இருக்கிறது. இலவசங்களை மக்களுக்கு அள்ளிக் கொடுக்க ஆளும் கட்சிக்குப் பச்சைக்கொடி காட்டுகிறவர். தலைமைச் செயலாளர் பதவியைக் குறிவைத்து அதற்கான ரூட்டில் பயணிக்கிறார்.

டி.கே.ராஜேந்திரன் (காவல் துறைத் தலைவர் – பொறுப்பு)
ஜூன் மாதம் ஓய்வுபெறப் போகிறார் டி.கே.ராஜேந்திரன். யாரையும் பழிவாங்க மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கிடைத்தால் சரி என்று, சொல்வதைச் செய்து கொண்டிருக்கிறார்.

ஜார்ஜ் (சென்னை மாநகரக் காவல் ஆணையர்)
இவரும் வரும் செப்டம்பர் மாதம் ஓய்வுபெறுகிறார். இங்கிருந்து விரைவில் டி.ஜி.பி (சட்டம்-ஒழுங்கு) பிரிவுக்கு மாறி, அங்கு இருந்தபடியே மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்புபெற தீவிரமாக முயல்கிறார். இந்த வகையில், ராஜேந்திரனுக்கும் ஜார்ஜுக்கும் பவர் பாலிட்டிக்ஸ் உச்சத்தில் இருக்கிறது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நேரத்தில் ஜார்ஜை மாற்ற வேண்டும் என தி.மு.க., தேர்தல் கமிஷனிடம் புகார் செய்திருக்கிறது. கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை சசிகலா தரப்பினர் சொகுசு ஹோட்டலில் தங்கவைத்திருந்தபோது, முதலமைச்சர் பன்னீர்செல்வம் இவரின் உதவியைத்தான் நாடினார். ஆனால், பன்னீர்செல்வத்தின் போனை எடுக்கவேயில்லை ஜார்ஜ். அந்த அளவுக்கு சசிகலா குடும்பத்து விசுவாசி ஜார்ஜ்.

ஈஸ்வரமூர்த்தி (மாநில உளவுத் துறை ஐ.ஜி – பொறுப்பு)
தற்போது அரசியல் உளவு வேலைகளைக் கவனிப்பவர் இவர் மட்டுமே. காரணம், உளவுத் துறையின் ஐ.ஜி., கூடுதல் டி.ஜி.பி., டி.ஐ.ஜி என முக்கியப் பதவிகள் காலியாகி பல மாதங் களாகின்றன. முன் கூட்டியே தகவல்களைத் துப்பறிந்து, குற்றச் செயல்கள் நடக்காமல் தடுப்பதுதான் இந்தப் பிரிவின் வேலை. ஆனால், அதில் முழுக்கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அரசியல் உளவு வேலை ஈஸ்வர மூர்த்தியை பிஸியாக்கிவருகிறது.

தாமரைக்கண்ணன் (சென்னை மாநகர உளவுப்பிரிவு கூடுதல் கமிஷனர்)
உளவுத் துறையில் நிறைய அனுபவம் உள்ளவர். ஜார்ஜுக்கு அடுத்தபடியாக சென்னை மாநகரக் காவல் பணிகளைக் கவனித்து வருகிறார். மாநில அளவிலான உளவுத் துறையின் ஐ.ஜி-யாக இவர் மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சிவ் தாஸ் மீனா (முதல்வர் அலுவலகச் செயலாளர்)
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசு தன்வசம் எடுத்துக் கொண்டபோது, இவர்தான் முக்கிய அதிகாரியாக நியமிக்கப் பட்டார். அங்கே நிலவியக் குழப்பங்களைச் சரிசெய்தவர். தற்போது தமிழக அரசின் 12 அரசுத் துறைகளுக்கும் முதல்வருக்கும் பாலமாகச் செயல்படுகிறவர்.

விஜயகுமார் (முதல்வர் அலுவலகச் செயலாளர்)
தமிழக அரசின் 23 துறைகளுக்கும் முதல்வருக்கும் பாலமாகச் செயல்படுபவர். முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் ஆசியுடன் முதல்வர் அலுவலகத் துக்குள் காலடி எடுத்துவைத்தவர்.
இந்த ஒன்பது பேர்களும் அரசு நிர்வாகத்தின் `நவ’ மையங்கள்.


அதிகார மையங்கள் எவை?

மணல் ராமச்சந்திரன்
வருமானவரித் துறையின் ரெய்டு இவரைச் சுற்றி நடந்தது. அந்த வகையில், சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு பெயிலில் வெளியே வந்திருக்கிறார். இவர் இல்லை எனக் கருதிய பலரும் மணல் பிசினஸில் கால் பதிக்கப் போட்டிபோட்டுத் தோற்றுப் போனார்கள். தொடர்ந்து மணல் பிசினஸைத் தன் பார்வையில் நடத்திவருகிறார். 

வைகுண்டராஜன்
திவாகரன், தினகரன்… இப்படி அதிகார மையங்களைத் தற்போது மரியாதையின் நிமித்தமாகச் சந்தித்துவருகிறார் வைகுண்டராஜன். தொழிலில் அவருக்கு ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்னைகளைச் சரிசெய்துவருகிறார். இனி இவர் இந்த ஆட்சியின் முக்கிய மையமாக மாறலாம்.

நாமக்கல் செந்தில்
சசிகலாவின் நம்பிக்கைக்குரிய வழக்குரைஞர். சொத்துக்குவிப்பு வழக்குகளைக் கவனித்துவருபவர். பெங்களூரு சிறைச்சாலையில் உள்ள சசிகலாவை அடிக்கடி சந்தித்துப் பேசி வருகிறார். சசிகலாவின் நெருங்கிய வட்டத்தில் இருப்பதால், கட்சிப் பிரமுகர்கள் இவருக்கு அதிக மரியாதை தருகிறார்கள்.
இந்த மும்மூர்த்திகள்தான், பவர் சென்டர்களாகத் திகழ்கிறார்கள்.

நன்றி -விகடன்

Advertisements
%d bloggers like this: