ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உளுந்து!

வாழ்க்கைத்தேவைகளுக்காக, நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருப்போர் பலர். நேரத்துக்கு சாப்பாடு, நீராதாரம் எடுத்துக் கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஞாபகமே அவர்களில் பலருக்கு இருப்பதில்லை. தன்னையே பார்த்துக்கொள்ள கூட நினைவில்லாமல், வாழ்க்கையில் பயணிக்கும் காலம் தான் இது.

இப்படியே வாழ்க்கை நகர்ந்தால், நம் உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகி, வாழ்நாள்களின் எண்ணிக்கை குறைத்துவிடும். ஆகவே, நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். இதில், பயறு வகைகளை வாரத்துக்கு மூன்று நாட்கள் சேர்த்து கொண்டால், உடல் வலுவடைவதோடு, ஆரோக்கியமும் பெறும். உணவில் சேர்க்கப்படும் பருப்பு வகைகளில், உளுந்து முக்கியமான ஒன்று. பெரும்பாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உளுந்து விரும்பி சாப்பிடுவர்.
உளுந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பர். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இச்சமயத்தில், உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும். எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது.
மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது. உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உளுந்தை காயவைத்து, அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
உளுந்து வடை பசியை போக்குவதுடன், உடலுக்கு குளிர்ச்சியைத் தரவல்லது. தடுமாறி கீழே விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் ரத்தக் கட்டிகள் குணமாக, உளுந்து சிறந்த மருந்தாக செயல்படுகிறது. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து, அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி, அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் ரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.
இடுப்பு நன்கு வலுவாக இருந்தால், தான் நிமிர்ந்து நடக்க முடியும். இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள், உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும். சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகளை வலுப்பெற வைக்கும்.
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து, களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.
இப்படி, உளுந்து பருப்பை வாரம் மூன்று முறையாவது உணவில் சேர்த்து சாப்பிட, அனைவரும் முன்வர வேண்டும். அப்போதே, ஆரோக்கியம் வலுப்பெறும்.

%d bloggers like this: