ரத்த அழுத்தம் போக்கும் கொத்தமல்லி!

மதிய உணவில், ரசம் சேர்த்துக் கொள்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ரசத்தையும், உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் தயார் செய்ய உதவுகிறது கொத்தமல்லி. ஆனால், உண்ணும்போது கொத்தமல்லியை தூர வைத்துவிட்டு, வெறும் ரசத்தை மட்டுமே குடிப்பதை, பலர் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். கொத்தமல்லியை சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மருத்துவ ரீதியாக பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.

இந்த, வாசனை மிகுந்த கீரையின் இலை, தண்டு மற்றும் வேர் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. இதில் மிளகு, புளி, உப்பு சேர்த்து, துவையலாக உண்ணலாம். கொத்தமல்லி கீரை ரத்த உற்பத்திக்கும், ரத்தம் சுத்திகரிக்கவும் சிறந்த இயற்கை மருந்தாகும். இது ஒரு வாசனை பொருளாக சமையலில் சேர்க்கப்படுகிறது.
கொத்தமல்லியில் விட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது மாலைக்கண் நோய், சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளை யை பலப்படுத்தும். பித்தம், வாந்தி ரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் வல்லது. அதிகம் சாப்பிடுவதால் மந்தம் தோன்றும். எனவே அளவோடு உண்டு பலன் பெறுவது நல்லது.
சீரகத்தை கொத்தமல்லி சாறில் ஊறவைத்து, அதை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை சாப்பிட்டு வர, உடலிலுள்ள கொழுப்பு குறைந்து, ரத்த அழுத்தமும் சீராகும். கொத்தமல்லி சாற்றில், கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும், ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து
சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்னைகள் குணமாகும்.
கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்னையை குணமாக்கும்.
இரவில் நன்றாக தூக்கம் வர, கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டைக் குறைக்க, கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால், உடல் சூடு குறைவதோடு, பசியும் எடுக்கும். கொத்தமல்லியில் சூப் மற்றும் கொத்தமல்லி சாதம் செய்து மாலை நேரங்களில் சிற்றுண்டி உணவாக சாப்பிடலாம்.
புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, “மாகுலர் டிஜெனெரேசன்’ எனப்படும் கண் நோய், விழி வெண்படல அழற்சி எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துதலிலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை இதப்படுத்தவும் உதவுகின்றன.
இதற்கு, சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் கொதிக்கவிட்டு, மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் விடுவதால், கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி ஆகியவை குணப்படுவதோடு, கண்களில் நீர் வடிதலும் நிற்கும். கொத்தமல்லியை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதாலும், மருத்துவ ரீதியாக அதை சாப்பிடும்போதும், நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

%d bloggers like this: