ஐந்தில் வளைப்போம்! குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டிய நல்விதைகள்!

ம் குழந்தைகளைத் தலையில் குட்டிக்குட்டி வளர்க்கிறோம். எதையெல்லாம் செய்யக்கூடாது எனப் பட்டியலிட்டு அவர்கள் மனம் முழுக்க நெகட்டிவ் ஆணிகளை அடிக்கிறோம். நின்றால் குற்றம், நடந்தால் தப்பு, விழுந்தால் அடி, உடைத்தால் உதை என்று எத்தனை வகை தண்டனைகள்? அவர்கள் இருப்பது வீட்டிலா… அல்லது சிறையிலா? அன்போடு ஊட்டப்பட வேண்டிய அமுதல்லவா அறிவு? ஆனால், அது துன்பம் தரும் வலியாகத்தானே நம் குழந்தைகளின் மூளைக்குள் செலுத்தப்படுகிறது? குழந்தைகளிடம் காணும் அத்தனை குறைகளுக்குள்ளும் நாம் ஒழுங்காக வளர்க்கவில்லை என்ற உண்மை ஒளிந்திருப்பதை மறந்துவிட வேண்டாமே!

நம் குழந்தைகளின் பிஞ்சு மனதிலேயே நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அவசியம். 
அனுபவங்களின் வழியாகக் கற்றுக்கொள்பவையே குழந்தைகளின் கேரக்டரை வடிவமைக்கின்றன. பார்த்தும், கேட்டும், தேடியும், விழுந்தும், எழுந்தும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றனவா? பிறந்தது முதல் ஆறு வயது வரை மனதில் விதைக்கப்பட்ட விஷயங்களே வளர்ந்து, அவர்களை வாழ்க்கை முழுக்க வழிநடத்துகின்றன.
இந்த வயதில் நாம் எதைச் சொன்னாலும், அவர்கள் எதிர்க் கேள்வியின்றி கேட்டுக்கொள்கிறார்கள். நாம் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்புகின்றனர். குழந்தைகளின் நம்பிக்கை மிகுந்த இந்தக் காலகட்டத்தை நாம் பயத்தால் நிறைக்கிறோம். ‘மூன்று கண் பூதம் கடத்திப் போய்விடுவான்’ என்ற பயத்தில்தான் பல குழந்தைகளும் சாப்பாடு என்கிற பெயரில் அம்மா திணிப்பதை எல்லாம் விழுங்குகிறார்கள். ‘வெளியில் சென்றால் கடத்திப் போய்விடுவார்கள்’ என்று மனதால் கால்களைக் கட்டிப்போடுகிறோம். இப்படி விதைக்கப்படும் நெகட்டிவ் எண்ணங்கள், அவர்களது நம்பிக்கையை உடைத்துச் சிதைக்கின்றன. எதையும் பயத்தோடும் தயக்கத்தோடும் அணுக வைக்கின்றன.
* உணவு உண்பதன் உன்னதத்தை, ஊட்டி ஊட்டியே கெடுத்து விடுகிறோம். டிவியைக் காட்டி, இருட்டைக் காட்டி, பயத்தைக் காட்டி விழுங்கும் உணவு, குழந்தைக்குத் தரப்படும் தண்டனையே. குழந்தைக்கு ஐந்து வயது வரை ஊட்டிக்கொண்டிருக்காமல், விரைவில் அவர்களாக உணவை உண்ணப் பழக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு முதலில் பழக்கப்பட வேண்டியது பல் துலக்குவதைப் பற்றியே. பல வீடுகளில் குழந்தையின் இமைகளில் தூக்கம் மிச்சமிருக்கும்போதே பாத்ரூமில் தள்ளுவார்கள். பெற்றோரே குழந்தையின் பல்லைத் துலக்கி, குளிக்க வைத்து, உடை மாற்றி… எனப் பல வேலைகளை முடித்துவிடுவார்கள். ஆனால், குழந்தையோ பாதித் தூக்கத்திலேயே இருக்கும். இப்படி இல்லாமல், சரியாகப் பல் துலக்கும் முறையை கற்றுக்கொடுக்கவும். ஆரம்பத்தில் இதற்கென நேரம் ஒதுக்கி மெனக்கெட வேண்டும். நீங்கள் அவர்கள் முன் பல்லைத் தேய்த்துக் காட்டுங்கள். அதற்கு முன்பு நீங்கள் பல்தேய்க்கும் முறை சரிதானா என்பதை பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நாம் சரியாகச் செய்தால்தான் குழந்தைகளுக்கும் அந்த முறை கைக்கூடும்.
* எந்த விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும்போதும் அதை எதற்காகச் செய்கிறோம். செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் விளக்கமாகச் சொல்லவும். குறிப்பாக, ஏன் இரண்டு வேளை குளிக்க வேண்டும், அப்படிக் குளிப்பதால் என்ன நன்மை என்பதைச் சொல்லலாம். குளிப்பதையே ரசனையான அனுபவமாக மாற்றலாம். குளித்த பிறகு மனமும் உடலும் அடையும் உற்சாகத்தைப் புரிந்துகொள்ளச் செய்யலாம். தண்ணீரில் குதியாட்டம் போட எந்த குழந்தைக்குதான் பிடிக்காது? 

* மிகச் சிறு வயதிலேயே தானாகச் சாப்பிடுவது, உடுத்துவது, தூங்குவது என எல்லாவற்றையும் திணிக்காமல் அவர்களிடம் அனுமதி கேட்கலாம். எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம். அந்தக் கேள்விகளின் வழியாகவே, குழந்தைகளின் கற்றல் துவங்குகிறது. எந்த விஷயத்தையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள இதுபோன்ற விஷயங்களைப் பெற்றோர் பழக்கப்படுத்தலாம்.
* பெரும்பாலான வீடுகளில் காலையில் எழுவதும் பள்ளிக்குக் கிளம்புவதும் போர்க்கோலமாக இருக்கும். இது அவ்வளவு சிக்கலான விஷயமில்லை. தூங்கப்போகும் முன்பு, வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடுத்த நாள் வேலைகள், அதற்கான நேரத் திட்டமிடல் பற்றிப் பேச வேண்டும். பள்ளிக்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் எனில், உங்கள் குழந்தை எந்த நேரத்தில் எழுந்து என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், எல்லோருக்குமே காலை நேரம் இனிமையாக மாறும்.
* தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலைக்கடன் கழிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல்விடுவதே பல நோய்களுக்குக் காரணம். காலை வேளையில் இதற்கான நேரமும் அவசியம். சிறுநீர் மற்றும் காலைக்கடன் கழிப்பதை அடக்குவதால், உடல் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். தினமும் குழந்தைகள் எழுந்ததும் மிதமான சூட்டில் சுடுநீர் கொடுத்து பத்து நிமிடம் கழித்துக் குளிக்க வைத்தால், காலைக் கடன் பிரச்னை என்பது இருக்கவே இருக்காது.
* தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்து வாயை மூடிக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தைகளின் இந்தச் செயல்களைப் பார்த்து, அந்தப் பழக்கம் இல்லாத பெரியவர்களும் மாறிக் கொள்வார்கள்.
* விடுமுறை நாள்களில் வீடு, டாய்லெட் சுத்தம் செய்வது, தேவையற்ற பொருள்களைத் தேடிப்பிடித்துக் கழிப்பது போன்றவற்றையும் அவர்களுடன் இணைந்து செய்வது அவசியம். தனது இடத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர இது வாய்ப்பாக அமையும்.
* உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது. உணவு தயாரிக்கும்போது சின்னச் சின்ன வேலைகளிலும் குழந்தைகளின் பங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். உணவு டைனிங் டேபிளுக்கு வருவதற்கு முன்பு அதற்காகச் செய்த உழைப்பைக் குழந்தைகள் புரிந்துகொள்ளச் செய்தால், உணவை வீணாக்கும் பழக்கம் மறைந்துவிடும்.


தனிமைக்குப் பழக்குங்கள்
பத்து வயதுக்கு மேல் நம் குழந்தைகளைத்  தனியாகப் படுக்கப் பழக்கப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இது வழக்கமாக உள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. நம் ஊரில், வளர்ந்த பின்னும் குழந்தைகள், பெற்றோருடன் உறங்குவதே நடக்கிறது. குழந்தைகளுக்காகவே வாழும் நிலைக்குப் பெற்றோர் தள்ளப்படுகின்றனர். அவர்களது பிரைவசி காணாமல் போகிறது. கணவன், மனைவிக்குள் நெருக்கம், இறுக்கம் எல்லாம் தொலைந்து, சுவாரஸ்யம் அற்ற வாழ்க்கைக்குப் பழகிவிடுகிறார்கள். இது, அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்னைகள் உருவாகவும் வழிவகுக்கிறது.
குழந்தைக்காக அடிப்படைத் தேவைகளையும் தியாகம் செய்யும் நிலை தேவையற்ற ஒன்று. கணவனும் மனைவியும் இணைந்து வாழத்தான் திருமணம் செய்துகொள்கின்றனர். குழந்தை என்பது அந்த வாழ்வின் ஒரு பகுதி. இதைக் குழந்தைகளுக்கும் புரியவைக்க வேண்டும். பத்து வயதுக்கு மேல் அவர்களுக்கு எனத் தனியாக படுக்கை அமைத்துக் கொடுக்கவும். வளர்இளம் பருவத்தை எட்டும்போது தனியறையில் உறங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். தனக்கான வாழ்வைப் பற்றித் திட்டமிடவும், கனவு காணவும், சிந்திக்கவும் இந்தத் தனிமை குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கும்.


உடல், மனக் குழப்பங்களை நீக்குங்கள்
பெண் குழந்தைகள் வளர்இளம் பருவத்தை எட்டும்போதே அவர்களிடம் பருவம் அடைவது குறித்துப் பேச வேண்டும். அப்போது, உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிமுகம் செய்யலாம். பருவம் அடைவது பெண்ணுடல் உற்பத்திக்குத் தயாராகும் நிகழ்வு, பெருமைக்குரியது என்ற எண்ணத்தை உருவாக்குவது அவசியம். பெரும்பாலான பெண் குழந்தைகள் இதைப் பற்றிய தெளிவின்மையால் அவதிப்படுகின்றனர். அப்போது ஏற்படும் வலி, வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை பிரச்னையாக உணர்கின்றனர். இந்த பயம் போக்க மருத்துவரீதியாக விளக்கம் அளிக்கலாம். இந்தக் காலகட்டத்தில் தன்னுடலைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரியவைக்கலாம். எப்படிச் சொல்வது எனத் தயங்காமல், தாயே குழந்தையின் தோழியாக மாற வேண்டும்.
ஆண் குழந்தைகள் பருவ வயதை அடையும்போது உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட விஷயங்களைத் தந்தை புரியவைக்கலாம். இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரைப் பார்க்கும் பார்வை, எண்ணம் எல்லாம் மாறும். மனதில் பல குழப்பங்களும் தோன்றும். இவற்றை ஆண் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டியது தந்தையின் கடமை. தாயை அடிமையாக நடத்தும் வீடுகளைச் சேர்ந்த ஆண் குழந்தைகள், தன்னோடு படிக்கும், பழகும் பெண்களை அடிமையாகப் பார்க்கின்றனர். மனதளவில் பெண்கள், ஆண்களைவிட உறுதியானவர்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்துமுடிக்கும் திறமையும் பெண்களுக்கு உண்டு என்பதைப் புரியவைக்கலாம். பெண்ணின் பாசிட்டிவான விஷயங்களை ஆண் குழந்தைகளுக்குச் சொல்லும்போது, அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும்.

%d bloggers like this: